புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி 
நிலையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில்


உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனாரை வழிபட்ட பார்வதியாள், இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.


பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து, இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால், துன்ப இருள் அகன்று, சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும். மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் நடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட (சந்திரசேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும். இந்தத் திருநாளில் கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும்.


அடி - முடி தேடிய கதை!
ஒருமுறை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே, தங்களில் பெரியவர் யார் எனும் சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவருக்குமான மோதலால் உலகமும் உயிர்களும் பாதிப்படையுமே என அச்சம் கொண்ட தேவர்கள், பரமேஸ்வரரைச் சரணடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தினார் ஈஸ்வரன். திருமாலுக்கும் பிரம்மனுக்கும் நடுவில் பெரும் நெருப்பு தூணாய் தோன்றினார். அதன் பிரமாண்டம் அவர்களை அயரவைத்தது. அந்தப் பிரமாண்டத்தின் (நெருப்புத் தூணின்) திருவடியையோ அல்லது திருமுடியையோ முதலில் கண்டு வருபவரே பெரியவர் என்று முடிவானது. உடனே பெருமாள், வராக உருவெடுத்து பூமியை அகழ்ந்து, திருவடியைக் காணச்சென்றார். பிரம்மன், அன்னப் பறவையாக மாறி திருமுடி காண உயரப் பறந்தார். ஆனால் இருவராலும் அந்த நெருப்புத் தூணின் அடி-முடியைக் காண இயலாமல் போனது. செய்வதறியாமல் இருவரும் துதித்து நிற்க, தேவர்கள் யாவரும் போற்றி வழிபட, அந்த நெருப்புத் தூணின் மையத்தில்... மான், மழு, அபய, வரத முத்திரை தாங்கியவராக திருக்காட்சி தந்தார் சிவபெருமான். அங்கிருந்த அனைவருக்கும் அனுக்கிரஹம் தந்தவர், இவ்வாறு நான் காட்சியளித்த தினம் சிவராத்திரி ஆகும். இதுபோல், முன்னம் ஒரு சிவராத்திரி நாளில் தேவியும் என்னை பூஜித்து பேறு பெற்றாள். ஆகம முறைப்படி இந்த தினத்தில் எம்மை பூஜிக்க.. நல்லது யாவும் நடந்தேறும். பாவங்களைப் பொசுக்கி, சிவகதி காட்டும் அற்புதமான இந்த பூஜை, அஸ்வமேதம் முதலான யாகங்கள் செய்வதைக் காட்டிலும் நூறு மடங்கு பலன் தருவது என்று அருள்பாலித்த பின் திருக்கயிலைக்கு எழுந்தருளினார். இப்படி, திருமால் மற்றும் பிரம்மாதி தேவர்கள் சிவனருள் பெற்ற தினம் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நாள். இதையே உலகத்தார் மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகின்றனர்.


வேடன் சிவபூஜை செய்த கதை!
ஒரு காட்டில் சண்டன் என்ற ஒரு வேடன் வாழ்ந்து வந்தான்; அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிப் பிடித்து, அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒருநாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளைத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய்த் தோன்றி இருப்பதைக் கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம். சிவலிங்கத்தைக் கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும் பக்தியும் பெருகி அவனையுமறியாமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகிவழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தைப் பெற்றதுபோல் குதூகலத்தால் குதித்துக் கூத்தாடியது. தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்ற விவரமெல்லாம் அவனுக்குத் தெரியாது. எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன், தன் பரிவாரங்களைப் பிரிந்து, வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன், வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்ந்தது. வேடனைக் கொண்டு கானக வழியைக் கண்டுபிடித்து வெளியேறி விடலாம் என நம்பினான். மன்னன் சிங்ககேது வந்ததைக்கூட அறியாமல் சிவ லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்த சண்டனைப் பார்த்து, வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன். காட்டைவிட்டு வெளியேற வேண்டும். வழிகாட்டு! என்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான்.


அரசே, என்னை மன்னியுங்கள். பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன்! என்றான். தொடர்ந்து, மகாராஜா, இங்கே இருக்கும் சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கமாய் கூறுங்கள்! என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன். உடனே மன்னன் பரிகாசமாய், வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின்மீது ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலைக் கொண்டு வந்து சிவலிங்கத்துக்குப் பூசு. கைக்குக் கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவைக் கொண்டு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றிவை. இரு கை கூப்பிக் கும்பிடு போடு! என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். மன்னன் சிங்ககேது கூறியதையெல்லாம் அப்படியே மனதில் பதித்துக் கொண்டான் சண்டன். தோற்பையில் தண்ணீர் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது ஊற்றினான். சுடலையைத் தேடிச் சென்று, கை நிறைய வெந்த சாம்பலை அள்ளிக்கொண்டு வந்து சிவ லிங்கத்தின்மீது பூசினான். கைக்குக் கிடைத்த காட்டுப் பூக்களையெல்லாம் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது வைத்தான். தான் உண்ணும் உணவையே நிவேதனமாகப் படைத்தான். விளக்கேற்றி வழிபட்டான். இதனையே உறுதியாகக் கொண்டு தினமும் பூஜை செய்து வந்தான். இரவும் பகலும் அவன் நினைவில் சிவலிங்கமே நிறைந்திருந்தது. ஒரு நாள் சுடலையின் வெந்த சாம்பல் அகப்படாமல் போயிற்று. சிவபூஜை தடைப்பட்டது. இதனால் சண்டன் மிகுந்த கவலையுடன் இருந்தான்.


உண்ணாமல் உறங்காமல் உற்சாகமின்றிக் காணப்பட்டான். அவனுக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. இதனை அவனது கற்புடைய மனைவி சண்டிகா அறிந்து மனம் மிக நொந்தாள். கணவனை நோக்கி, அன்பரே, நீங்கள் சிவபூஜையைத் தொடர்ந்து செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நாம் குடியிருக்கும் இந்தக் குடிசையைக் கொளுத்தினால், நான் அதில் விழுந்து வெந்து சாம்பலாவேன். அந்த சாம்பலை எடுத்துக்கொண்டு போய் சிவலிங்கத்திற்குப் பூசுங்கள். உங்கள் விருப்பப்படியே பூஜையும் இனிதே நடக்கும் என்றாள் சண்டிகா. கள்ளங்கபடமில்லாத சண்டனும் அப்படியே செய்து முடித்தான். பூஜை முடிவில் வழக்கப்படி நிர்மால்யம் கொண்டு போனான். அன்று சிவராத்திரி என்று அவனுக்குத் தெரியாது. மெய் மறந்து வழிபட்ட நிலையில், அவன் செய்த புண்ணியத்தால், இறைவன் அவன் முன் தோன்றி அருள்பாலித்தார். அவன் மனைவி சண்டிகாவை உயிர்ப்பித்தார். குடிசையும் முன்பு இருந்தது போலாயிற்று. வேடன் சண்டன் ஞானம் வரப்பெற்றவனாய் இறைவனைப் போற்றினான். சிவகணங்கள் எதிர்கொள்ள கயிலையை அடைந்தான் என்று, சிவராத்திரியின் பெருமை பற்றிக் கூறும் பிரம்மோத்திர காண்டமும் வரதபண்டிதம் என்ற நூலும் விவரிக்கின்றன. எதுவும் தெரியாமலும் தன்னை அறியாமலும் செய்யும் சிவராத்திரி வழிபாடு கூட பலன்தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கும், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் புண்ணியம் வந்துசேரும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top