புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி மேற்கொள்ளப்படும் நோன்பாகும். கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை
சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.

இந்த தினத்தில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்க வேண்டும். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு ஆகியவற்றை இட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன லட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயில் வைக்க வேண்டும்.

மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமி கிழக்குப் பக்கமாக வைத்து வணங்க வேண்டும். தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைக்க வேண்டும். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்ட வேண்டும்.

பின்னர் படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள் புடவை போன்றவற்றை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுத்து ஆசி பெற்று காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முடித்து தானும் உண்டு விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.


வரலக்ஷ்மி விரதம் பிறந்த கதை!

பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்; சினத்தை ஒழித்து எப்பொழுதும் குளிர்ந்த சாந்தமான முகத்தை உடையவள். இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள்.

 ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு பழுத்த சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள். வயிறார உண்டு வாய்நிறையத் தாம்பூலம் தரித்து அமர்ந்திருந்த அரசி, “தாயே! சுமங்கிலியே! தாங்கள் யார்? எதற்க்காக வந்தீர்கள்?” என் வினவினாள். அவளை நோக்கி மகாலட்சுமி,”கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது நியாயமா?” எனக் கேட்டாள். செய்த தவறைச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து,”இங்கிருந்து போய்விடு” என்றாள்.

கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பிய முகத்துடன் வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு,”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள். கண்களைத் துடைத்துக்கொண்டு மகாலட்சுமி,”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்க்காக என்னை அடித்து அவமானப்படுத்தித் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்” என்றாள். உடனே சியாமா மகாலட்சுமியை உபசரித்து, அமரவைத்து, “அந்த நல்லதை எனக்குச் சொல்லிக்கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாடவேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள்.

அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள். லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் நொந்த மன்னன் இராச்சியம் கையைவிட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். புகுந்த வீடு சென்றபின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்கு செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்கு ஓடி உணவுக்கு வழியற்று ஊர் ஊராகத் திரிந்தனர். செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன் சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள். நாட்கள் கழிந்தன.

ஒருநாள், நிறையத் தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு எங்காவதுபோய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். சியாமா அவ்விடத்தை விட்டு அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொன்னுக்குப் பதில் கரித்துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போனான். இதை சியாமாவுக்குத் தெரியப்படுத்தினர். உடனே, சியாமாவுக்குத் தன் தாய் மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவுபடுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள். அவ்வாறே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்கு நாள் நல்லவைகள் நடந்தன.

 பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரிய லட்சுமி குடியேரியதால், தன் ஆதரவாளர்களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top