புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நேபாளத்தில் ஒரு கூடைப்பந்தளவுள்ள தலையுடன் பிறந்த 7 வயதுப் பையனது தலை வழமையான தலையைவிடவும் 10 அங்குலம் அதிகமாகக் காணப்பட்டது. அவனால் தனது தலையுடன் வெளியே செல்லமுடியவில்லை. அனைவரும்
இவனையே அதிசயமாகப் பார்த்தனர்.

இப்பையன் hydrocephalus என்ற நோய்த்தாக்கத்திற்குட்பட்டிருந்தான். இவ்வாறான பிள்ளைகளின் தலையில் அளவுக்கதிகமான திரவம் மூளைக்கும் மண்டையோட்டிற்குமிடையில் காணப்படும். வளரும் பிள்ளைகளென்பதால் அதன் அளவு அவர்கள் வளர வளர இன்னும் பெரிதாகிவிடும்.

500 பேரில் ஒருவருக்கே இந்நோய்த்தாக்கம் ஏற்படும். இவ்வாறான நோயின் ஆரம்பகட்டமாயின் வைத்தியர்கள் தலையிலுள்ள திரவத்தினை உடலின் ஏனைய பாகங்களுக்குத் திறந்துவிட்டுவிடுவர்.

ஆனால் மருத்துவ வசதி நேபாளத்தில் மட்டுப்படுத்தப்பட்டளவில் காணப்படுகின்றதால் 6 மாதங்களிற்கு முன்பாக அவர்களது பகுதிக்கு தற்காலிக சமூகசேவைக்காக வந்த வைத்தியர்களால் அமெரிக்காவில் இதற்கு வைத்தியம் செய்யலாமெனக் கூறப்பட்டது.

இதனால் அமெரிக்காவின் போல்ரிமோர் குழந்தைகள் வைத்தியசாலைக்கு அவனை அவனது பெற்றோர்கள் அழைத்துவந்தனர்.

இவனது மண்டையினைச் சிறுப்பிக்க முயற்சித்தபோது அதற்கடியில் மூளைக்குச் செல்லும் குருதிக்குழாய்கள் பெரிதாக இருப்பதை வைத்தியர்கள் கண்டனர். சத்திரசிகிச்சையில் சிறு பிறழ்வு ஏற்பட்டாலும் அது அவனது உயிருக்கு உலையாகிவிடும். இதனால் 50 வீதமே அவன் பிழைக்கக்கூடிய சாத்தியம் இருந்ததை வைத்தியர்கள் கண்டனர்.

இதனால் இச்சிகிச்சைக்காக இவர்கள் கணினி வடிவமைப்பினைப் பயன்படுத்த நினைத்தனர். சிகிச்சைக்கு முன்பாக இவர்கள் பல தடவைகள் தங்களது செயன்முறையைச் செய்து பயிற்சிசெய்தனர்.

பின்னர் பையனின் மண்டையோட்டினை அவனது நெற்றியிலிருந்து பிடரி வரையான பகுதியை வெளியே எடுத்து அதனைச் சிறுப்பித்து வெட்டினர். பின்னர் மீண்டும் அவனது தலைக்குள் அதனை வைத்தனர்.

இந்த முறையானது இந்நோய்க்கான மிகவும் புதிய முறைச் சிகிச்சையாகும். பையனுக்கு சிகிச்சை செய்யாவிட்டால் அவன் இறந்துவிடக்கூடிய நிலை முன்பே இருந்திருந்தது. எனினும் கணினி வடிவமைப்புத் தொழினுட்பத்தினைப் பயன்படுத்தி வெற்றிகரமான 12 மணித்தியாலச் சிகிச்சையினால் அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்றியிருந்தனர் வைத்தியர்கள்.

இதுபோன்ற கணினி வடிவமைப்பு முறையானது எதிர்காலத்திற்கான சிறந்த முறையென்றார் ஒரு வைத்தியர்.

சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 2 கிழமைகளில் அச்சிறுவன் குணமடையத் தொடங்கியிருந்தான்.

தற்போதும் அவனது மண்டை ஏனையவர்களைவிடப் பெரிதாக இருந்தாலும் அவனைக் கையாள்வது இலகுவாக உள்ளதாக அவனது தாயார் குறிப்பிட்டார்.

முன்பு அவனைத் தூக்குவதற்கே இருவர் வேண்டுமென்றும் தற்போது தன்னால் மட்டுமே அவனை அழைத்துச் செல்லமுடிகின்றதென்றும் கூறினார் அவனது தாயார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top