புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் மணியன். இவரது மகள் சரண்யா (வயது21). என்ஜீயரிங் படித்துள்ளார். கடந்த மாதம் 28-ந்தேதி தான் தேர்வு முடிவு வந்தது. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தார். தேர்வு முடிவு வந்த மறுநாள் தனது உறவினர்கள் மற்றும் தோழிகள் 5 பேருடன் சேலத்தில் உள்ள கல்லூரியில்
நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காக காரில் சென்றார். கருத்தரங்கு முடிந்ததும் அனைவரும் ஊருக்கு திரும்பிக் கொண்டிந்தனர்.


ஈரோட்டை அடுத்த சித்தோடு அருகே வந்த போது காரும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சரண்யாவுடன் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சரண்யாவும் அவரது தோழியுமான பானுபிரியாவும் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சரண்யாவை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் நேற்று மதியம் 2 மணியளவில் சரண்யாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் சரண்யாவின் தந்தை மணியனிடம் கூறினார்கள். மகள் இறந்து விட்டாள் என்ற துக்கம் அவரது மனதை கனக்க செய்தாலும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தார்.

தனது மகளின் உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழ வேண்டும். அவர்கள் உருவில் தனது மகளை பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்தார். அதன்படி டாக்டர்களிடம் சரண்யாவின் உடல் உறுப்புகளை தானம் செய்யப்போவதாக கூறினார்.

மறு நிமிடமே இந்த தகவல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் பறந்தது. சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து மருத்துவக்குழுவினர் விரைந்து வந்தனர். இன்று காலை 8.30 மணி அளவில் சரண்யாவின் 2 கருவிழிகள் கோவையில் உள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

சரண்யாவின் உடலில் இருந்து பெறப்பட்ட 2 சிறுநீரகங்ளில் ஒன்று கோவை கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கும், மற்றொன்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது. கல்லீரலை சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவக் குழுவினர் பெற்றுச் சென்றனர். இதயத்தின் 2 வால்வுகள் கோவையில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்துக்கு வழங்கப்பட்டது.

சரண்யா உடல் உறுப்புகள் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற உள்ளனர். உடல் உறுப்புகளை டாக்டர் குழுவினர் எடுத்துச் செல்வதை பார்த்த மணியன் அவரது மனைவி கலாமணி, சகோதரி அர்ச்சனா ஆகியோர் கண் கலங்கியது ஆஸ்பத்தரி வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top