புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இயேசுவின் பிறப்பும் திருக்குடும்பமும்:இயேசுவின் பிறப்பு ஒரு விபத்தைப் போன்றதல்ல, அது மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில் அமைந்த ஓர் அற்புதமான நிகழ்வு இயேசு. பெத்லகேமில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று நம் கிறிஸ்தவப்
பாரம்பரியம் கூறுகிறது.

இயேசு பெத்லகேமுக்கு வெளியே இருந்த ஒரு குகையில் பிறந்தார் என்று புனித யுஸ்தினின் (கி.பி. 103- 165) கூறுகின்றார். யாக்ஜோப்பின் புத்தகம் அல்லது யாக்கோ புவின் முதல் நற்செய்தி இயேசு பெத்லகேமுக்கு மிக அருகில் உள்ள குகையொன்றில் பிறந்தார் என்று எழுதப்பட்டுள்ளது. விடுதியில் இடம் கிடைக்காததால் குழந்தை இயேசுவைத் துணிகளில் பொதித்து தொட்டியில் மரியா கிடத்தினார் என்று இந்நாளில் நற்செய்தி சொல்கிறது. லூக்சாவின் கூற்றிலிருந்து யோசேப்பும் மரியாளும் பெத்லகேமில் இருந்த விடுதிகளில் தங்குவதற்கு இடம் தேடினர். ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்ததனால் இடம் கிடைக்கவில்லை. ஆகவே மாட்டுத் தொழுவத்தில் அல்லது குகையொன்றில் அன்னை மரியா இயேசுவைப் பெற்றெடுத்தார்.

கிறிஸ்து பிறப்பு விழா எமக்கு கடவுளின் அளவில்லா கருணையை வெளிப்படுத்துகின்றது. "கடவுள் தனது சாயலிலும் பாவனையிலும் மனிதனைப் படைத்தார் என்று தொடக்க நூலில் பார்க்கின்றோம். ஆனால் கடவுள் உலகினர் மேல் கொண்ட அளவிட முடியாத அன்பை வெளிப்படுத்த விரும்பி "தம் மகனை மனித சாயலில் பிறக்க திருவுளம் கொண்டார்". இதையே "வார்த்தை மனுவுருவானார் நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14) கடவுள் மனிதன் மீது கொண்ட நிலையான அன்பை நித்தியத்திற்கும் வெளிப்படுத்தும் பெருவிழாதான் கிறிஸ்து பிறப்பு பெருவிழா.

இப்பெருவிழாவை கொண்டாடிய நாம் அந்த மகிழ்வில் திளைக்க திருக் குடும்ப பெருவிழாவையும் கொண்டாடுகின்றோம். நல்ல குடும்பத்திற்கு எடுத்துக் காட்டாக யோசேப்பு மரியா இயேசு ஆகியோரால் உருவாக்கப்பட்ட திருக்குடும்பத்தை சுட்டிக்காட்டுவார்கள். ஒரு குடும்பத்தில் இருக்க வேண்டிய அத்தனை குணநலன்களும் அந்தக் குடும்பத்து அங்கத்தவர்களிடம் இருந்த காரணத்தினால் திருக்குடும்பம் மேன்மை நிறைந்ததாக பார்க்கப்படுகிறது.

தலைவரான சூசை:

முதலாவதாக திருக்குடும்பத்தின் தலைவர் யோஜேப்பின் குணத்தைப் பார்ப்போம். அவர் ஒரு நேர்மையாளர் என்றும் பிறருக்கு இகழ்ச்சி ஏற்படுவதை சிறிதும் விரும்பாதவர் என்றும் அவரைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது எதையும் தீர்க்கமாக சிந்திக்கும் தன்மை கொண்டவர். ஆகவே அவருக்கு மண ஒப்பந்தம் ஆகியிருந்த மரியா கருவுற்றதை அறிந்த போது பொறுமையையும் நிதானத்தையும் இழக்காமல் அமைதி காத்து அது குறித்துச் சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வருவதைப் பார்க்கின்றோம். (மத்: 1:18-19)

தன் சொந்த விருப்பத்தை கடவுளிடம் திணிக்காமல் கடவுளின் திருவுளத்திற்கு முற்றிலும் தம்மை உட்படுத்திக் கொண்டார். அவரிடம் நேரடியாகப் பேசாத கடவுள் தம்தூதரை யோசேப்பிடம் அனுப்பி அவரது கனவில் அத்தூதர் மூலம் செய்தியை அறிவிக்கின்றார். கருவுற்றிருக்கும் மரியாளை மனைவியாக ஏற்றுக் கொள்வதோடு தூய ஆவியின் ஆற்றலினால் மரியாவுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குப் பெயரிட்டு சட்டப்படி அந்தக் குழந்தையின் தந்தையாக திகழ அறிவுறுத்தப்பட்ட போது யோசேப்பு அதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறார். (மத். 1:20- 21)

தன் வளர்ப்பு மகனுக்கு ஆபத்து என்று தம் கனவில் வானதூதரிடமிருந்து செய்தியைப் பெற்றுக் கொண்டவுடனேயே நீண்ட தூரத்தைப் பற்றி கவலை கொள்ளமல் குழந்தை இயேசுவையும் மரியாவையும் எகிப்துக்கு அழைத்து செல்கிறார். வளர்ப்புக் குழந்தைதானே என்று பொறுப்பை தட்டிக் கழிக்காமல் அக்கறையுடன் செயல்படுகின்றார்.

ஆபத்து அகன்றது. திரும்பவும் சொந்த நாட்டிற்குத் திரும்பி தம் குடும்பத்தை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கின்றார். தம் உழைப்பைப் பயன்படுத்தி குடும்பத்தைக் காப்பாற்றுகின்றார். யோசேப்பின் உழைப்பை மனதில் கொண்டு இயேசு தச்சனுடைய மகன் என்று வருணிக்கப்பட்டுள்ளார். பன்னிரண்டு வயது நிரம்பிய இயேசு காணமல் போன போது யோசேப்பு மிகுந்த கவலையுடன் அவரைத் தேடுகின்றார். இதன் மூலம் தம்மை ஒரு பொறுப்புள்ள குடும்பத் தலைவன் என்று நிரூபித்துள்ளார். (லூக் 2:48)

தாயான அன்னைமரி

இரண்டாவதாக மரியாவைப் பற்றி நாம் சிந்திக்கிற போது அவர் கடவுளின் திருவுளத்திற்குத் துணிவுடன் பணிந்திருந்தார் என்றறிகிறோம். கபிரியேல் தூதர் மரியாவுக்கு இறைவன் தந்த செய்தியை அறிவித்த போது அவருக்குப் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயது இருந்திருக்கலாம். அவரிடம் வழங்கப்பட்ட செய்தி அவ்வளவு எளிதானது அல்ல. என்றாலும் கடவுளுக்குத் தம் கீழ்ப்படிதலைத் தெளிவாக உணர்த்தி நம்தாழ்ச்சி மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி ஓர் அடிமையாகக் கடவுளின் கரங்களில் தம்மை வழங்குகின்றார். (லூக் 1:38)

"எல்லாமே கடவுளின் செயல், அவரே யாவற்றையும் இயக்கட்டும்" என்கிற மனப்பான்மையைக் கொண்டிருந்த காரணத்தினால் குடும்ப வாழ்வில் அனைத்தும் அவருக்குத் தங்குதடையின்றி முன்னேறிச் சென்றன என்றறிகிறோம். துளிகூட அவரிடம் தற்பெருமை இல்லை என்பதை எலிசபேத்துக்கு உதவிட அவர் சென்றதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம் (லூக் 1:33-45)

எதையும் பொறுத்துக் கொள்ளும் மனவலிமை அவரிடம் இருந்தது. ஒரு குடும்பத் தலைவிக்கு இந்தக் குணம் மிக அவசியம். சில நிகழ்ச்சிகளின் அர்த்தம் அவருக்குப் புரியாத போது அங்கலாய்த்துக் கொள்ளாமல் யாவற்றையும் மனதில் இருத்திச் சிந்தித்தார். (லூக் 2: 19,51)

ஏரோது மன்னனின் அச்சுறுத்தலின் காரணத்தினால் தம் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக முகம்சுளியாமல் முதலில் எகிப்து நாட்டிற்கும் பிறகு அங்கிருந்து பலஸ்தீனத்திற்கும் பயணம் மேற்கொண்டார் இது அவரது தாய்மை பண்பையும் பொறுப்புணர்வையும் எண்பிக்கிறது. யோசேப்வைப் போலவே காணாமல் போன இயேசுவை மிகக் கவலையுடன் தேடுவதன் மூலம் அன்னை மரியா மென்மையான தாய்மைப் பண்பை வெளிப்படுத்தியுள்ளார்.

எருசலேம் கோவில் மீது பற்று திருவிழாக்களை கொண்டாட ஆர்வம் ஆகியவை இயேசுவின் மனதிலும் உருவாகிட காரணம் அன்னை மரியாதான்.

மகனான இயேசு:

மூன்றாவதாக இயேசுவைப் பற்றி சிந்திக்கிறபோது அவர் தெய்வக் குழந்தையென்றாலும் தம் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடந்து கொண்டதும், ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்ததும் அவரது மேன்மையை எடுத்துக் காட்டுகின்றது.

பெற்றோருடன் ஜெருசலேம் கோவிலுக்குச் சென்ற அவர் இறையார் வத்தின் காரணமாய் அங்கேயே தங்கியதும் யூத அறிஞர்களிடம் பலவற்றைக் குறித்து வாதிட்டுக் கொண்டிருந்ததும் அவர் நல்ல முறையில் குடும்பத்தில் வளர்க்கப்பட்டதைக் குறிக்கின்றது. லூக் 2: 41-50

பிற்காலத்தில் எருசலேம் கோவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவராய் பெரும் கோபத்தில் தம்மை வெளிப்படுத்தியது மற்றும் முக்கிய திருவிழாக்களைக் கொண்டாட எருசலேமுக்கு அவர் தவறாமல் சென்றது ஆகியவற்றைப் பார்க்கும் போது அவர் தம் ஆன்மீக வாழ்க்கையில் சிறப்புற்றிருப்பது தெரிகிறது. முப்பது வயது வரை குடும்ப பொறுப்பைச் சுமந்தது அவரது கடமை உணர்வைக் காட்டுகிறது. தம் வளர்ப்புத் தந்தையுடன் இணைந்து தச்சுத் தொழிலில் ஈடுபட்டது அவரது அயராத உழைப்பைக் காட்டுகிறது.

திருக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் மூன்று பேரும் அவரவர் கடமைகளைச் செல்வனே ஆற்றி அதன் மூலம் தங்கள் மகிழ்ச்சியை பெருக்கிக் கொண்டனர். அக்குடும்பம் சிறப்புடன் இயங்கிய காரணத்தினால் தான் இன்று உலகில் கிறிஸ்தவ மதம் ஒரு மாபெரும் இயக்கமாக மலர்ந்துள்ளது.

ஒரு குடும்பம் சரிவர இயங்கினால் சமுதாயம் சீருடனும் சிறப்புடனும் திகழும். மகிழ்ச்சியான குடும்பங்கள் யாவும் ஒன்று மற்றொன்றைப் பிரதிபலிப்பது போல இருக்கின்றன. ஆனால் மகிழ்ச்சியை இழந்த நிலையில் இருக்கும் குடும்பம் தனக்கே உரித்தான பாணியில் இருக்கிறது.

அதாவது ஒரு குடும்பம் அழிவை நோக்கிச் செல்லபலவிதக் காரணங்கள் இருக்கின்றன. இன்றைய சூழ்நிலைகள் பல குடும்பங்களில் ஏற்படக் கூடிய சாதாரண பிரச்சினைகள் மிகைப்படுத்தப்பட்டு குடும்பங்கள் சிதைந்து போகும் சூழ்நிலை ஏற்படுவதைப் பார்க்கிறோம். இந்நிலையில் மறைந்த திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் �குட்பத்தின் முக்கியத்துவத்தை சமுதாயத்திற்கு அறிவித்திட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே சமுதாயத்திற்கு செய்யப்படும் சிறப்பான பணி� என்று கூறியுள்ளார். சமுதாயம் முன்னேற திருக்குடும்பம் ஓர் அருமையான சாட்சியாகும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top