புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 50-வது லீக் இன்று இரவு 8 மணிக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள்
மோதின.

டாஸ் வென்ற புனே வாரியர்ஸ் அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி உத்தப்பா- பின்ச் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்குவித்தனர். இதனால் ஓவருக்கு சராசரியாக 10 ரன்கள் வந்தது. முதல் 5 ஓவரில் புனே 50 ரன்னைத் தொட்டது. பின்ச் 45 ரன்னில் கூப்பர் பந்தில் போல்டாகி ஆட்டம் இழந்தார்.

அடுத்து உத்தப்பாவுடன் யுவராஜ் சிங் ஜோடி சேர்ந்தார். யுவராஜ் சிங் 15 ரன்னில் த்ரிவேதி பந்தில் ஆட்டம் இழக்க உத்தப்பா 54 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். அதன்பின் வந்த மார்ஷ் ஆட்டம் இழக்காமல் 35 ரன்கள் எடுக்க புனே வாரியர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.

179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணியின் டிராவிட்- ரகானே களம் இறங்கினார்கள். டிராவிட் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கினார். இருவரும் புனே வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் எடுத்தனர். இதனால் ரன்விகிதம் உயர்ந்தது.

முதல் 6 ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 53 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய டிராவிட் 36 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 98 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டிராவிட் 58 ரன்கள் எடுத்த நிலையில் மாத்யூஸ் பந்தில் மார்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்ஆனார். அவர் 40 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார். இந்த ஜோடி எடுத்த 98 ரன்களே இந்த ஐ.பி.எல். சீசனில் தொடக்க ஜோடி எடுத்த அதிக பட்ச ரன்னாகும்.

2-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன், வாட்சன் ஜோடி சேர்ந்தார். ரகானே 37 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் அரை சதம் அடித்தார். மாத்யூஸ் வீசிய 14-வது ஓவரில் ஒரு சிச்கர், 3 பவுண்டரிகள் உள்பட 21 ரன் அடித்தனர். வாட்சன் 5 ரன்கள் எடுத்த நிலையில் பர்னல் பந்து போல்டாகி வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு ரகானேவுடன் ஹாட்ஜ ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடிய ரகானே 67 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவர் 48 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்தார்.

4-வது விக்கெட்டுக்கு ஹாட்ச் உடன் பின்னி ஜோடி சேர்ந்தார். பின்னி அதிரடியாக விளையாடினார். இதனால் ரன் மளமளவென உயர்ந்தது. ஹாட்ச் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

5-வது விக்கெட்டுக்கு பின்னியுடன் இளம்வீரர் சாம்சன் ஜோடி சேர்ந்தார். 2 ஓவருக்கு 18 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரின் முதல் பந்தை பின்னி அடிக்க யுவராஜ் கேட்ச் பிடிக்கத் தவறினார். இதனால் அந்த பந்தில் இரண்டு ரன் கிடைத்தது. 2-வது பந்தில் 3 ரன்னும், 3-வது பந்தில் ஒரு ரன்னும் ராஜஸ்தான் அணிக்கு கிடைத்தது.

4-வது பந்தில் பின்னி இமாலய சிக்சர் ஒன்று விளாசினார். 5-வது பந்தில் ஒரு ரன்னும், 6-வது பந்தில் ரன்னும் எடுக்கவில்லை. 19-வது ஓவரில் 13 ரன் கிடைத்தது.

இதனால் கடைசி ஓவரில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலைமை ஏற்பட்டது. முதல் பந்தில் 1 ரன்னும், 2-வது பந்தில் சாம்சன் அவுட்டும் ஆனார். இதனால் 4 பந்தில் 4 ரன் தேவைப்பட்டது. 3-வது பந்தில் பால்க்னர் 2 ரன் எடுத்தார். 4-வது பந்தில் பால்க்னர் அடித்து விட்டு வேகமாக ஓடினார். அவர் ஈசியான ரன் அவுட்டில் இருந்து தப்பித்தார்.

இதனால் கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தை பின்னி அருமையாக பவுண்டரிக்கு துரத்தினார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பி்ன்னி 13 பந்தில் 2 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 32 ரன்களுடனும், பால்க்னர் 3 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 11 போட்டிகளில் 7-ல் ராஜஸ்தான் வெற்றி பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top