புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்க மாநிலமான ஒக்லஹொமாவை நேற்று தாக்கிய சுழல் காற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. ஒக்லஹொமா நகரின் மூர் பகுதியில் சிறுவர் பள்ளியொன்றை சுழல் காற்று தாக்கியதில் 24
குழந்தைகள் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுவதுடன் இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை இவ் அனர்த்தத்தில் காயமடைந்த 150 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை ஒபாமா மிகப்பெரிய இயற்கை அனர்த்தமாக அறிவித்துள்ளார். ஒக்லஹொமா நகர் சுழல் காற்றினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

நூற்றுக்கணக்கான வீடுகள் காற்றினானால் தரைமட்டமாகியுள்ளதுடன், மின்சார துண்டிப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 200 மீற்றருக்கும் அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதுடன் வாகனங்களும் தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


மாநில தலைநகரிலிருந்து 55 கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஷவ்னீ நகருக்கு அண்மையில் ஞாயிற்றுக்கிழமை சுழல் காற்றால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அம் மாநிலத்திலுள்ள 16 நகரங்களில் சுழல் காற்றையொட்டி அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக மூர் நகரம் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. அங்கிருந்து 51 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் அங்குள்ள வைத்தியசாலையொன்றில் கொள்ளைச் சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இதேவேளை உயிரிழந்தோர் மற்றும் சேத விபரங்கள் தொடர்பாக வேறுபட்ட தகவல்கள் அந்நாட்டு ஊடகங்களில் இருந்து வெளியாகிய வண்ணமுள்ளன. இதுவரை 91 பேர்வரை இவ் அனர்த்தத்தினால் உயிரிழந்துள்ளதாக வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Top