புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தடை பல கடந்து, டைட்டில் கார்டில் சப் டைட்டிலாக இடம் பெற்றிருந்த ‘டைம் டூ லீடு’ எனும் வார்த்தையை இழந்து ஒரு வழியாக வந்திருக்கிறது ‘‘தலைவா’’!


சந்தர்ப்பவசத்தால் மும்பையின் தாதா தலைவராக வாழ்கிறார் விஜய்யின் ‘தலைவா’ அப்பா! அப்பா இன்ன தொழில்தான் செய்கிறார் என்பது தெரியாமலே ஆஸ்திரேலியாவில் நண்பன் சந்தானத்துடன் குடிநீர் வியாபாரம் செய்து கொண்டே, ஆஸ்திரேலியாவே கொண்டாடும் நடன கலைஞராக விளங்குகிறார் விஜய்! அங்கு ஓட்டல் பிஸினஸ் செய்ய இந்தியாவில் இருந்து வரும் தொழில் அதிபர் சுரேஷின் மகள் அமலா பாலுக்கும், விஜய்யின் நடனத்தின் மீதும், விஜய் மீதும் காதல் உண்டாகிறது! காதல் கசிந்து உருகியதும் கல்யாண பேச்சு எழுகிறது. விஜய்யின் அப்பாவை பார்க்க வேண்டுமென்கிறார் சுரேஷ்! அமலாபால், விஜய், சுரேஷ் மூவரும் மும்பை வருகின்றனர். வந்த இடத்தில் விஜய்க்கு வில்லன் ஆகிறார் சுரேஷ். வில்லியாகிறார் அமலாபால்! இந்த இருவரது முடிவால் விஜய்யின் அப்பா அகால மரணமடைகிறார். அப்புறம்? அப்புறமென்ன.?! விஜய், அப்பா வகித்த தாதா தலைவர் போஸ்டுக்கு அன்னபோஸ்டாக வருகிறார்! வந்ததும் வில்லன்களை ஒரு கை பார்க்கிறார். வில்லியாக தெரிந்த அப்பாவி அமலாபால், விஜய்க்கு பக்கபலமாக இருந்து அவர் அப்பாவை கொன்றவர்களை பழி தீர்க்க உதவுகிறார்! அதற்கப்புறம்? அதற்கும் அப்புறம்... விஜய் தானே தலைவராகிறார். அமலாபால் அவரது இல்லத்தலைவி ஆகிறார்! இதுதான் தலைவா படத்தின் மொத்த கதையும்!

விஜய், வழக்கம் போலவே ஆடுகிறார், பாடுகிறார், ஓடுகிறார், ஓட்டுகிறார், அமலாபாலுடன் ஒட்டி உறவாடியிருக்கிறார். ஆனாலும் ‘தமிழ்பசங்க...’ என ஆரம்பத்தில் வரும் பாடலே நாளை காலையிலாவது முடிப்பாங்களா...? என நீண்டு கொண்‌டே போவது போர் அடிக்கிறது! அதே மாதிரி 3 மணி நேரத்திற்கு மேலான படமும் இழுவையாக இருப்பதை இயக்குநர் விஜய்யும், நாயகர் விஜய்யும் நினைத்திருந்தால் தவிர்த்து, விஜய் ரசிகர்களுக்கு நல் விருந்து படைத்திருக்கலாம்!

அமலாபால், ஜில்லென குளிரூட்டப்பட்டு, விடியற்காலையில் வீட்டு வாசலில் வந்து விழும் ‘ஆவின்பால்’ மாதிரி ‘பளிச்’ சென்று வந்து மனதில் ‘பச்சக்’ கென்று ஒட்டிக் கொள்கிறார். அம்மணி நன்றிகள் மொத்தத்தையும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவுக்கு உரித்தாக்குவது நல்லது! ஆனாலும் அம்மணிக்கு போலீஸ் கெட்-அப் பொல்லாப்பாக தெரிகிறது. உஷார்!

சந்தானம், ஏங்கணா, வாங்கண்ணா... என ஒவ்வொரு படத்திலும் ஊரையே ஓட்டும் விஜய்யையே ஓட்டுவது காமெடி! அதிலும், இது ஒரு வழிப்பாதை... என விஜய், விஜய்யின் அப்பா எல்லோரும் சீரியஸாக தலைவா படத்திலேயே பேசும் டயலாக்கை சந்தானம் சிரிப்பாக்குவது ஹைலைட் காமெடி!

நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் என நட்சத்திரங்கள் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்!

ஜீ.வி.பிரகாஷின் இசையில், ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா...‘ பாடல் சூப்பர் ஹிட்! நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் மும்பையும், ஆஸ்திரேலியாவும் அமலாபால் மாதிரியே கொள்ளை அழகு! ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும், ‘நாயகன்’, ‘புதிய பறவை’ படங்களை ஞாபகப்படுத்தும்படியாக விஜய் இயக்கத்தில், விஜய் நடித்து வெளிவந்திருக்கும் ‘தலைவா’ - ‘தலைவலி வா’ எனும் ரீதியிலேயே இருக்கிறது.

மொத்தத்தில் ‘‘தலைவா’’ - ’’தாதா’’!!

 
Top