புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

நேர்மை பழகு! அதுவே அழகு! ஆபிரகாம் லிங்கன் தனது இளம் வயதில் ஒரு கடையில் வேலை பார்த்தார். வாடிக்கையாளர்களிடம், அன்பாகவும், பணிவாகவும், நேர்மையாகவும் இருப்பதில் அவர் வல்லவர்.ஒருமுறை நள்ளிரவில் கணக்கு வழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்கையில் கணக்கு இடித்தது. ஒரு நபருக்கு பணத்தை குறைவாக கொடுத்திருப்பதைக் கண்டு பிடித்தார்.
அந்த நபரின் வீடோ வெகு தொலைவில் இருந்தது. அவர் தயங்கவில்லை. அந்த நள்ளிரவிலேயே கடையைப் பூட்டிக் கொண்டு அந்த நபரைத் தேடிப் போய் மிச்ச பணத்தைக் கொடுத்து விட்டு வந்தார். நேர்மையை அவர் எந்த அளவுக்கு நேசித்தார் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

`எப்போதும் உண்மையைப் பேசுபவர்கள், பேசும் எதையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை'. இந்த வலிமை வாய்ந்த வாக்கியம் சொல்லப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. சாம் ரேபன் சொன்ன இந்த வாக்கியம் நேர்மையாளர்களின் அடிப்படை இலக்கணமாய் இருக்கிறது.

நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தேவையற்ற விஷயங்களைப் பற்றி இரவு பகல் பாராமல் பேசும் நாம், முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பேசுவதில்லை. அந்த முக்கியமான பட்டியலிலுள்ள அதி முக்கியமான விஷயங்களில் ஒன்று நேர்மை.

நமது ஓட்டப்பந்தயம் பெரும்பாலும் செல்வம், புகழ் எனும் மைல் கற்களை நோக்கியே அசுர ஓட்டம் பிடிக்கிறது. கடைசியாய் நேர்மையைப் பற்றி எப்போது படித்தோம்?

ஒரு வேளை ஆரம்பப் பாடசாலையின் நீதிக் கதைகளிலாய் இருக்கலாம்!

அதற்குப் பின்...?

அப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொண்ட நேர்மை ஏன் காணாமல் போகிறது தெரியுமா?

நம்மைச் சுற்றி இருக்கின்ற மக்கள் காட்டும் தவறான வாழ்க்கை முறை. குழந்தைகளுக்கு நேர்மையைப் பற்றிப் போதித்து விட்டு நாமே நேர்மையற்றவர்களாய் இருந்தால் அந்தப் போதனை வெறும் ஏட்டுச் சுரைக்காயாய், கறிக்கு உதவாமலேயே போய்விடும்.

`ஆட்டோவில் தவற விட்ட பணப் பெட்டியை போலீசிடம் ஒப்படைத்தார் ஆட்டோக்காரர்' என்று ஒரு செய்தி வந்தால் வியக்கிறோம்.

அடடா! இப்படி ஒரு நேர்மையா என ஆச்சரியப்படுகிறோம்.

மனிதர்களிடம் இயல்பாகவே இருக்க வேண்டிய நேர்மை இன்று வியப்பூட்டும் அபூர்வச் செயலாகி விட்டதைத்தானே இது காட்டுகிறது!

அப்படியானால் நேர்மைவாதிகள் அருகி வரும் அபூர்வ இனமாகிவிட்டார்களா?

நேர்மையை விதைப்பவர்கள் மட்டுமே நம்பிக்கையை அறுவடை செய்ய முடியும். ஆனால் நேர்மையாய் இருப்பதும், உண்மையாய் இருப்பதும் எளிதா?

இல்லை என்பதுதான் உடனடிப் பதில்.

இதைப் பின்பற்ற வேண்டுமானால் உறுதியான மனம் ரொம்ப அவசியம்.

அந்த உறுதி பல வேளைகளில், பல காரணங்களுக்காக நம்மை விட்டுப் பறந்து போய் விடுகிறது. குழந்தையின் கையிலிருந்து அறுந்து போன பட்டம் போல அது இலக்கில்லாமல் ஓடி மறைகிறது. பல்வேறு காரணங்களுக்காக நம்முடைய நேர்மையை கை கழுவி விடுகிறோம்.

`நான் தப்பு செய்யவில்லை' என சாதிக்க நினைக்கும் எண்ணம் பல வேளைகளில் நம்மிடமிருக்கும் நேர்மையைப் பறித்து விடுகிறது. நான் நல்லவன் என்பதைப் பிறருக்குக் காட்ட பொய்களின் கைகளைப் பிடிக்கிறோம்.

அல்லது அடுத்தவர்களுடைய தோள்களில் பழியைச் சுமத்த நேர்மையை கைவிடு
கிறோம். தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் எளிய வழி நேர்மையைக் கைவிடுவதுதான் என முடிவுகட்டி விடுகிறோம்.

சிலசமயம், பிறருக்கு முன்னால் அவமானப்படக் கூடாதே என்பதற்காகவும் பொய் முகமூடி போடுகிறோம்.

வறட்டுக் கவுரவம் கூட பல வேளைகளில் நம்மைக் குறித்தும், நமது பின்புலத்தைக் குறித்தும் அடுக்குப் பொய்களை வாரி இறைக்க காரணமாகி விடுகிறது.

இன்னும் சில சந்தர்ப்பங்களில், கருத்து வேற்றுமை வரக் கூடாதே என்பதற்காக பொய்க்கு வக்காலத்து வாங்கி மவுனமாய் இருக்கிறோம்.

பொறுப்புகளைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்பதற்காகக் கூட உண்மையை மறைக்கவும், நேர்மையை விலக்கவும் செய்கிறோம்.

இப்படி பல வேளைகளில் நம்முடைய மனதின் உறுதி கொஞ்சம் ஒளிந்து கொள்ள, நேர்மையும் கூடவே காணாமல் போய் விடுகிறது.

மனித வாழ்க்கைக்கு முக்கியமானவை பொருளாதாரமல்ல, மனித மதிப்பீடுகளே! நல்ல மதிப்பீடுகளின் மேல் கட்டமைக்கப்படும் வாழ்க்கையே சமூக வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆதாரம்.

நேர்மையாய் இருக்க வேண்டுமென நீங்கள் முடிவெடுத்தால், நேர்மை உங்களை வந்து ஆக்கிரமிக்கும். எந்த ஏரியாவில் நீங்கள் அதிகம் பொய் சொல்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள். உங்களுக்கே உங்களுடைய தடுமாற்றத் தளம் புரிந்து விடும். அது ஒரு குறிப்பிட்ட சூழலாய் இருக்கலாம், அல்லது குறிப்பிட்ட நபரிடமாய் இருக்கலாம். எங்கே தடுமாறுகிறீர்கள் என்பதைக் கண்டு பிடிப்பது, அங்கே நேர்மையையும், உண்மையையும் வலுப்படுத்திக் கொள்ள உதவும்.

உதாரணமாக, பண விஷயத்தில்தான் நேர்மையற்று இருக்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதை விலக்க என்னென்ன செய்யவேண்டும்? வரி செலுத்தாமல் அரசை ஏமாற்றுவது முதல், மனைவியிடம் பொய் சொல்வது வரை எல்லாவற்றையும் பட்டியலிடுங்கள். மன்னிப்புக் கேட்கவோ, உங்களுக்குச் சொந்தமில்லாததை திருப்பிக் கொடுக்கவோ தயங்கவே தயங்காதீர்கள்.

பயத்தின் பிள்ளைதான் பொய்! மிகுந்த தைரியசாலிகளே நேர்மையாளர்களாய் இருக்க முடியும். உங்களுடைய பலவீனத்தை ஏற்றுக் கொள்ளும் தைரியமானாலும் சரி, மேலதிகாரியிடம் உண்மையைச் சொல்லும் கம்பீரமானாலும் சரி, நேர்மையின் பின்னால் தைரியம் இருக்கிறது. அச்சமற்ற மனதில் மட்டுமே நேர்மையும், உண்மையும் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்ளும். தைரியம் கொள்ளுங்கள்!

உண்மையாய் இருக்க வேண்டுமெனில் உண்மையாய் சிந்திக்கவும் வேண்டும். காதில் கேட்பவற்றுக்கு ஆடைகட்டி அலைய விடுவது நேர்மையின்மையின் சின்னம். கேட்பதையும், பார்ப்பதையும், படிப்பதையும் `உண்மை'யின் மனம் கொண்டு வாசிக்கப் பழகுங்கள்.

`இப்படியாய் இருக்கலாம்', `இதுவாக இருக்கலாம்', `அப்படி நடந்திருக்கலாம்' போன்ற கணிப்புகள் பெரும்பாலும் நேர்மையற்ற உரையாடல்களுக்கான முதல் சுவடு. இந்த தேவையற்ற கணிப்புகளைக் கடலில் கொட்டி விடுங்கள்.

ஒரு பொய் என்பது பொய்தான். அது சின்னதானாலும் சரி, பெரியதானாலும் சரி. சின்னச் சின்ன விஷயங்களில் பொய் சொல்வது தவறில்லை என்பது பலருடைய எண்ணம். பொய் எப்போதும் உண்மையாவதில்லை!

பக்கத்து வீட்டிலிருந்து நீங்கள் பறித்த ரோஜாப்பூவோ, அலுவலகத்தில் திருடிய பென்சிலோ, பொய் என்பது குறையுள்ள மனதில் படிந்த கறை! சிறிய விஷயங்களில் துவங்கும் பொய்கள் பெரிய விஷயங்களை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கும் என்பதுதான் விபரீதமான உண்மை!

பிறரைக் காயப்படுத்தாமல் சொல்லப்படும் பொய்களை `வெள்ளைப் பொய்கள்' என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பொய்களைக் கூட சொல்லாமல் இருப்பதே நல்லது என்பேன். `ஏய்... இந்த டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கு' என நீங்கள் சொல்லும் பொய்யில் யாரும் காயமடையப் போவதில்லை. ஆனாலும் அது உங்களுடைய மனதை கறைப்படுத்தும்!

பாதி உண்மை என்பது ஒரு முழுப் பொய்! உண்மை என்பது முழுமையானது. அரைகுறையாய் உண்மையைச் சொல்லிவிட்டால் உங்கள் மனசாட்சியின் கேள்வியிலிருந்து தப்பிவிடலாம் என தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள்.

`ஒரு விஷயம் சொல்றேன், யார்கிட்டேயும் சொல்லாதீங்க' என பீடிகையோடு வரும் நபர்களிடம் `அந்த விஷயத்தை எங்கிட்டேயும் சொல்லாதீங்க' என நீங்கள் ஒதுங்கிக் கொண்டால் நல்லது. வெளியே சொல்லாத உண்மையும், பொய்யின் இன்னொரு வடிவமே.

நேர்மையற்றவராய் இருப்பது நமக்குள் நம்மை அறியாமலேயே ஒரு குற்ற உணர்வை உருவாக்கிவிடும். கூடவே குழப்பத்தையும் தன்னம்பிக்கைச் சிதைவையும் உருவாக்கும். பிறகு `மனசு ரொம்பக் கனமாய் இருக்கிறது' என்று புலம்ப வேண்டியதுதான்.

நேர்மை முளைவிட வேண்டிய முதல் இடம் குடும்பம். குடும்ப உறவினர்களிடையே பொய் கலக்காத உண்மை உரையாடல்களும், நேசமும் இருக்கும்போது அந்த வாசம் சமூகத்திலும் வீசும். பிரச்சினைகள் வருமோ என நினைத்து போலித்தனமாய் வாழ்வதை விட நேர்மையாய் வாழ்ந்து பிரச்சினைகளைச் சமாளிப்பதே சிறப்பானது.

`ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயல் உங்களைப் பிறகு பொய் சொல்ல வைக்குமா என்பதை யோசியுங்கள். அப்படிப்பட்ட செயல்களைச் செய்யாதீர்கள்' என்பது சான்றோர் காட்டும் வழி. உங்கள் ஒவ்வொரு செயலையும் இந்த வாசகத்தால் எடைபோடுங்கள். செயல்கள் வாசமாகும், நேர்மை வசமாகும்.

நெஞ்சில் நேர்மை நிறையட்டும்
செயலில் கூர்மை விளையட்டும்!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top