பணத்துக்கு ஆசைப்பட்டு அப்பா, மகனை கொன்று சுடுகாட்டில் புதைத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் மொழச்சூர் கிராமத்தை சேர்ந்தவர்
விபூஷணன் (65). தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 3 மகள்கள், மகன் விஜயகணபதி (30) உள்ளனர். விஜயகணபதியின் மனைவி சுந்தரி (28). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன.
காஞ்சிபுரம் சோகண்டி கிராமம் அருகே கடந்த மார்ச் 12ம் தேதி சுந்தரி, முகம் எரிக்கப்பட்டு நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சுந்தரியை விஜயகணபதி, விபூஷணன் கொலை செய்தது விசாரணையில் தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் வேலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விபூஷணன் கடந்த மே மாதம் ஜாமீனில் வந்தார். சில நாட்கள் வீட்டில் இருந்த அவர், திடீரென மாயமானார். இதற்கிடையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (எ) சிங்காரவேலன், கடந்த ஏப்ரல் மாதம் விபூஷணன் வீட்டுக்கு வந்தார். ‘‘விபூஷணனை எனக்கு நன்றாக தெரியும்.
விஜயகணபதியை ஜாமீனில் எடுக்க வீட்டு பத்திரம், பட்டா, பணம் வாங்கி வரச் சொன்னார்" என்றார். இதை நம்பி பத்திரம், ரூ.10 ஆயிரம் ரூபாயை விபூஷணனின் மனைவி கொடுத்து அனுப்பினார்.
இதுபோல் 6 முறை வீட்டுக்கு வந்த அந்த நபர், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் வாங்கி சென்றுள்ளார். Ôஅடுத்த முறை விபூஷணனை அழைத்து வந்தால்தான் பணம் தருவோம்Õ என்று வீட்டில் இருந்தவர்கள் கூறி விட்டனர்.
இது சம்பந்தமாக சுங்குவார்சத்திரம் போலீசில் நேற்று முன்தினம் விபூஷணன் மனைவி புகார் அளித்தார். இது குறித்து விசாரித்த போலீசார், சிங்காரவேலனை நேற்று கைது செய்தனர்.
போலீசில் சிங்காரவேலன் கூறியதாவது: திருட்டு வழக்கில் என்னை வேலூர் சிறையில் அடைத்தனர். பக்கத்து அறையில் இருந்த விபூஷணன், விஜயகணபதியுடன் நட்பு ஏற்பட்டது.
விபூஷணனுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே சென்றார். அப்போது 'உன்னை ஜாமீனில் எடுக்கிறேன். வெளியே வந்தவுடன் என் மகனை கொலை செய்து விட வேண்டும்' என்று விபூஷணன் சொன்னார்.
இதேபோல் விஜயகணபதி என்னிடம் கூறும்போது, 'என் மனைவியை அப்பா கொன்றுவிட்டார். அதுபோல் என்னையும் கொன்றுவிடுவார். என்னை ஜாமீனில் எடுத்தால் நிறைய பணம் தருகிறேன். என் அப்பாவை கொலை செய்துவிடலாம்' என்றார்.
இருவரும் ஜாமீனில் வெளியே வந்தோம். விபூஷணனை கொல்ல திட்டமிட்டேன். காஞ்சிபுரம் ஏகானம்பேட்டை பகுதி சுடுகாட்டுக்கு அவரை அழைத்து போனேன்.
அங்கு அடித்துக்கொலை செய்து சுடுகாட்டில் புதைத்தேன். ஒரு வாரத்துக்கு பிறகு விஜயகணபதியை சந்தித்து அப்பாவை கொலை செய்துவிட்டேன் என்று தெரிவித்தேன்.
காஞ்சிபுரம் ஓட்டலில் நாங்கள் மது அருந்தினோம். போதையில் ஏற்பட்ட தகராறில், என்னை விஜய கணபதி அடித்துவிட்டார். அவரிடம் அன்பாக பேசுவதுபோல் நடித்தேன்.
விபூஷணனை கொன்ற அதே சுடுகாட்டுக்கு அவரையும் அழைத்து சென்றேன். அங்கு அவரையும் அடித்துக்கொன்று புதைத்துவிட்டேன். ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவங்கள் நடந்தது. இவ்வாறு சிங்காரவேலன் கூறினார். இருவரின் சடலங்களையும் நாளை, தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விஜயகணபதியின் சகோதரி கூறுகையில், ‘‘என் அண்ணன் மனநலம் பாதிக்கப்பட்டவர். அண்ணி மீது சந்தேகப்படுவார். அப்பா அவன் மீது உயிரையே வைத்திருந்தார்.
அப்படிப்பட்டவர் எப்படி மகனை கொலை செய்ய சொல்லியிருப்பார். சிங்காரவேலன்தான், பணத்துக்கு ஆசைப்பட்டு அப்பா, அண்ணனை கொன்றுவிட்டார். சொத்து பத்திரம், பணத்தை எங்கு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை" என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக