புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெளிநாடுகளில் வாழும் எமது அருமை உறவுகளுக்கு வணக்கம். ஈழத் தமிழ் மக்கள் உள்நாட்டில் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்த போதெல்லாம், நீங்கள் ஐரோப்பிய நாடுகளின் வீதிகளில் இறங்கி பேரணி நடத்தியதை நாம் ஒருபோதும் மறந்திலோம். சொந்த நாட்டை விட்டு வசதி, வாய்ப்பு என எல்லாமும் இருக்கக்கூடிய வெளிநாட்டிற்கு வந்தபின்பு நம் பாட்டில் இருக்கவேண்டியதுதானே.
இந்த நினைப்பு இம்மியும் இல்லாமல் எங்களுக்காக நீங்கள் செய்தவை, செய்து கொண்டிருப்பவை ஏராளம்.

நீங்கள் வெளிநாடுகளில் இருப்பது எங்களுக்கான பலம் என்ற உண்மை முழுமையாக உணரப்பட்ட நிலையில், உங்களின் யாழ்ப்பாண வருகை கண்டு மட்டற்ற மகிழ்வு அடையாமல் இருக்கமுடியாது.

நல்லூர்க் கந்தனின் திருமுகம் காண, அவனின் பெருந்திருவிழாக் காலத்தில் நீங்கள் வருவதானது உங்களின் இறைபக்திக்கும், தாய்த் தேசம் மறவாத பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டாகும்.

இத்தகைய உயர்ந்த சிறப்புக்கள் உள்ள உங்களிடம் விநயமாக ஒன்றைக் கூறவேண்டும். அதாவது, நீங்கள் வெளிநாடுகளில் எப்படியான உடைகள் அணிகின்றீர்கள் என்பது பற்றியெல்லாம் எமக்கு எந்தக் கவலையும் கிடையாது.

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு வருகைதருகின்ற நீங்கள், வெளிநாட்டில் அணிகின்ற ஆடைகளைத் தவிர்த்து எங்கள் பண்பாட்டிற்கு உகந்த உடைகளை அணிய வேண்டும் என்பது எங்கள் பெருவிருப்பம்.

இப்பெருவிருப்பம் உங்கள் பற்றிய உயர்ந்த நினைப்பை உருவாக்கவேண்டும் என்ற நன்நோக்கம் கொண்டது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

சட்டக் கல்வியை நிறைவு செய்துவிட்டு பாரதம் திரும்பிய மகாத்மா காந்தி, தான் அணிந்திருந்த அந்நிய நாட்டுக் கலாசார ஆடைகளை புறந்தள்ளி பாரததேசம் மதிக்கக்கூடிய உடைகளை அணிந்தார் என்ற செய்தியை அறிகின்றபோது காந்தியின் தேசப்பற்று நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றதல்லவா? ஆம், எங்கள் மண்ணில் எங்களுக்கே உரித்தான ஆடைகளை அணிவதே பொருத்தமானதாகும்.

மனித வாழ்வில் ‘பொருந்துகை’ என்பது மிகவும் முக்கியமானது. எனவே வெளிநாடுகளில் இருந்து தாயகம் வரும் எமது அருமை உறவுகள் எங்கள் பண்பாட்டிற்குரிய ஆடைகளை அணியவேண்டும். அதேநேரம் நீங்கள் வாழும் நாட்டில் பிறந்த தமிழ் மண்ணின் வாரிசுகளுக்கும் தமிழ்ப் பண்பாட்டைக் கற்றுக்கொடுங்கள்.

நிச்சயம் அவர்கள் அதன்பால் விருப்பம் கொள்வர். அது வெறுமையான விருப்பமன்று. அது தமிழ் மீது பற்றுவைக்க, தங்கள் தாத்தா, பாட்டி என்ற உறவைப் போற்ற, தாய் மண்ணில் பாசம் கொள்ள நிச்சயம் உதவும் என்பதை சத்தியமாகச் சொல்கின்றோம்.  

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top