ஓர் அழகிய வனம். அங்கு கரடி ஒன்று தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது. அதன் இரண்டு குட்டிகளும் "அம்மா எனக்கு பசிக்குதும்மா, சாப்பிட ஏதேனும் குடு' என்று அழுதன. பெண் கரடியானது உணவைத் தேடிச் சென்றது. இரண்டு ஆப்பிள்கள் மட்டுமே கிடைத்தன. "கண்ணுங்களா, இதுதான்
கெடைச்சுது. அப்பா வந்தவுடன் ஏதேனும் கொண்டு வரச் சொல்லலாம்' என்றது.
ஆண் கரடி வீட்டிற்குள் வந்தவுடன் "எனக்கு மிகவும் பசியாய் இருக்கு. சாப்பிட ஏதேனும் குடு' என்றது. "ஐயோ! நான் கவனிக்காமல் விட்டுவிட்டேன். சாப்பிட ஒன்று கூட இல்லை' என்றது பெண்கரடி.
"சரி நான் வெளியே சென்று சாப்பிட ஏதேனும் கொண்டு வருகிறேன்' என்று ஆண் கரடி வெளியே சென்றது. காட்டில் வெகுதூரம் சென்று ஓர் ஆற்றை அடைந்தது. ஆற்றினைத் தாண்டினால் அங்கே ஒரு வாழைத்தோட்டம் இருப்பது தெரிந்தது.
ஆற்றைக் கடக்க கீழே விழுந்து கிடந்த மரத்தை இழுத்து குறுக்கே போட்டது. "இது நமக்கு மட்டும் உதவாது! மற்ற விலங்களுக்கும் உதவும்' என்று எண்ணியபடி மரத்தில் நடந்து சென்று ஆற்றைக் கடந்தது.வாழைத் தோட்டத்தை அடைந்த கரடி நல்ல வாழைப்பழமாகத் தேடி, ஒரு வாழைத்தாரைத் தூக்கிக் கொண்டு வந்தது.
வரும் வழியில் எங்கேனும் தேன் கிடைக்குமா? என்று பார்த்தது. ஒரு மரத்தில் தேன்கூடு ஒன்றைக் கண்டது.ஆகா! இங்கு தேன் இருக்கிறதே என்று கூட்டின் மீது கல்விட்டு எறிந்து, தேனை எடுத்தது.
பின்னர் அதை ஒரு குடுவையில் நிரப்பியது. வாழைப்பழத்தாரையும் தேனையும் தூக்கிக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தது. ஆற்றைக் கடந்து வரும்போது, "காப்பாத்துங்க, காப்பாத்துங்க' என்று சத்தம் கேட்டது.
கரடி வாழைப்பழத்தாரையும், தேனையும் கீழே வைத்துவிட்டுப் பார்த்தது. ஆற்றில் முயல்கள் சில தத்தளிப்பதைக் கண்ட கரடி அவற்றைக் காப்பாற்றியது.
பின்னர், அவற்றைப்பார்த்து, "எப்படி இந்த ஆற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டீர்கள்?' என்று கேட்டது. "நாங்கள் ஆற்றைக் கடக்கும் போது, சிறிதளவே தண்ணீர் இருந்தது. திடீர் என வெள்ளம் வந்து எங்களை அடித்துக் கொண்டு வந்துவிட்டது' என்றன முயல்கள்.
"சரி இந்த வாழைப்பழங்களைச் சாப்பிடுங்கள். இந்தத் தேனையும் குடியுங்கள்' என்று கொடுத்தது கரடி. முயல்கள் பசியாற உண்டன. பின் நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றன. மீதம் இருந்த வாழைப்பழங்களையும், தேனையும் எடுத்துக் கொண்டு தனது பயணத்தைத் தொடர்ந்தது கரடி. வழியில் யாரோ அழுவது போல சத்தம் கேட்டது.
"யாரது?' என்றது கரடி."நான்தான் என்றது' குரங்கு. "என்ன அடிபட்டு விட்டதா? ஐயோ பாவம்!' என்று கூறி, அங்கிருந்த மூலிகைகளைப் பறித்துக் காயத்துக்குக் கட்டுப் போட்டது. "இந்தா, இந்த வாழைப்பழங்களைச் சாப்பிடு. தேனைக் குடி. வலிக்குத் தேன் மிகவும் நல்லது' என்றது. நன்றி தெரிவித்துவிட்டுக் குரங்கும் சென்றுவிட்டது. கரடி வெறும் கையுடன் வீட்டிற்கு சென்றது.
"என்ன ஒன்றுமே கொண்டு வரவில்லையா?' என்று கேட்ட பெண் கரடியிடம் நடந்ததைக் கூறியது ஆண் கரடி. "சரி நான் மீண்டும் சென்று உணவினைக் கொண்டு வருகிறேன்' என்று புறப்பட்டது கரடி. "வேண்டாம் மழை வருவது போல இருக்கிறது. நாளை போகலாம்' என்ற பெண் கரடியிடம், "வேலை பார்ப்பதற்கு நேரம் காலம் பார்க்கக் கூடாது' என்று கூறியவாறு கதவைத் திறந்தது கரடி.
வெளியில் குரங்குகள் கூட்டமாக நின்றிருந்தன."நீங்கள் எங்கள் இளவரசனைக் காப்பாற்றி, உதவி செய்து இருக்கிறீர்கள்! அதற்கு நன்றி சொல்லும் விதமாக நாங்கள் நிறைய பழங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இதை நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும்' என மிகப் பணிவுடன் கேட்டுக் கொண்டன. கரடிகளும் அவற்றை நன்றியுடன் வாங்கிக் கொண்டன.
0 கருத்து:
கருத்துரையிடுக