புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

காதலித்து விட்டு திருமணம் செய்ய வரதட்சணை கேட்பதாக இளம்பெண் கூறிய குற்றச்சாட்டின் பேரில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் 5 பிரிவுகளில்இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மகள் பிரியதர்ஷினி (25).
இவர், சில மாதங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புகார் ஒன்றை அளித்தார். பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியான வருண்குமார் (28), தன்னை காதலித்துவிட்டு திருமணம் செய்ய பல லட்சம் வரதட்சணை கேட்பதாக புகாரில் கூறியிருந்தார்.இதுகுறித்து பிரியதர்ஷினி கூறுகையில், “நானும் திருச்சியை சேர்ந்த வருண்குமாரும் சென்னை அண்ணாநகரில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி அகடமியில் படித்தோம். அப்போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. வருண்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ஐதராபாத்தில் பயிற்சி பெற்று வருகிறார். என்னை ஐஏஎஸ் தேர்வு எழுதக்கூடாது என்று தடுத்தார். ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் என்னை திருமணம் செய்ய தயங்குகிறார். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய், தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார் ஆகியவற்றை வரதட்சணையாக தரவேண்டும் என வருண்குமாரும் அவரது பெற்றோரும் கேட்கின்றனர். எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளேன்’’ என்றார். 

புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். பின்னர், வரதட்சணை தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் மாற்றப்பட்டது. ஆனால், வருண்குமார் மீது எப்ஐஆர் எதுவும் போடவில்லை. இதையடுத்து ஐகோர்ட்டில் பிரியதர்ஷினி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யாதது குறித்து பதில் அளிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வருண்குமார் மீது 406, 417, 420, 506/2 மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

வழக்கு முடித்து வைப்பு: 

வருண்குமார் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி, பிரியதர்ஷினி தொடர்ந்த வழக்கில், ஐகோர்ட் நீதிபதி நாகமுத்து முன்பு இன்று இறுதி விசாரணை நடந்தது. பிரியதர்ஷினி சார்பாக வக்கீல்கள் எஸ்.பிரபாகரன், செந்தில்குமார் ஆஜராகினர். போலீஸ் தரப்பில் கூடுதல் பப்ளிக் ப்ராசிக்யூட்டர் மகாராஜா ஆஜராகி, ‘வருண்குமார் மீது மோசடி, வன்கொடுமை, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளோம்’ என்றார். இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு, வழக்கை இத்துடன் முடித்துக் கொள்வதாக தெரிவித்தார். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top