புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால், வெளிநாட்டு நாணயங்களை இலங்கை ரூபாவுக்கு மாற்றுவதற்காக குடாநாட்டு வங்கிகளில் மக்கள் முண்டியடித்து வருகின்றனர்.கடந்த ஒரு வாரகாலமாக யாழ்ப்பாணத்தில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளில் பிரதான செயற்பாடாக வெளிநாட்டு நாணய பரிவர்த்தனையே இடம் பெறுகின்றது என்று வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக குறித்த வங்கி அதிகாரி மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழ்ப்பாணத்து மக்கள், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமது உறவினர்கள் அனுப்பும் வெளிநாட்டு நாணயங்களை உடனடியாக வங்கிகளில் மாற்றாது சேமித்து வந்துள்ளனர்.

ரூபாவின் பெறுமதி டொலருக்கு எதிராக வீழ்ச்சி அடையும் காலங்களில் இத்தகைய வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவதால் வழமையைவிடவும் அதிக இலாபம் கிடைக்கும். இதற்காகவே அவர்கள் வெளிநாட்டு நாணயங்களை உடனடியாக மாற்றுவது இல்லை.

தற்போது ஒரு அமெரிக்க டொலர் 132 ரூபாவரை வங்கிகளால் வாங்கப்படும் நிலையில் தம்மிடம் உள்ள வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவதற்கு அதிக எண்ணிக்கையான மக்கள் தினமும் வங்கிகளுக்கு வருகிறார்கள்.

இதன் மூலம் அவர்களுக்கு முன்னரைக் காட்டிலும் பெறுமதி கூடிய பணத்தொகை கிடைக்கின்றது. வங்கிகளுக்கும் குறித்த தரகு பணம் கிடைப்பதால் வங்கிகளுக்கும் மக்களுக்கும் லாபம் ஏற்பட்டாலும் உண்மையில் இத்தகைய செயற்பாட்டால் எதிர்காலத்தில் பணவீக்கம் ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் மறுக்க முடியாது.

இதேவேளை, ரூபாவின் பெறுமதி இன்னமும் வீழ்ச்சியடையும் என்று எதிர்வு கூறப்படுவதால் எதிர்வரும் வாரங்களில் வெளிநாட்டு நாணயங்களை மாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top