கடந்த 15ம், 16ம் நூற்றாண்டுகளில் இந்து சமுத்திர வர்த்தகத்தின் பெரும்பகுதி போர்த்துக்கேயரது ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. இவர்களை அடுத்து இந்து சமுத்திரப் பிரதேச வர்த்தக நடவடிக்கைகளில் தலையிட்ட இனத்தவர் ஒல்லாந்தர் ஆவார்.
தமது அண்டை நாடாகிய போர்த்துக்கல் பெற்ற வர்த்தக இலாபத்தையும், கீழைத்தேய வர்த்தகம் மூலம் போர்த்துக்கல் அடைந்த செல்வச்செழிப்பையும் கண்ணுற்று, தாமும் அதை அடைவதற்கு ஒல்லாந்தர் முயன்றனர். இவர்களும் கூட தமக்கு வேண்டிய வர்த்தகப் பண்டங்களை லிஸ்பனிலேயே பெறமுடிந்தது.
ஆயினும் 16ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பல மாற்றங்களின் விளைவாக பல வகையிலும் முன்னேற்றமடைந்த ஒல்லாந்தர் கீழைத்தேசங்களுக்கு வருவதற்குப் பல வழிகளிலும் முயன்றனர். மேலும் போர்த்துக்கேயரது கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமது புரட்டஸ்தாந்து சமயத்தைப் பரப்புவதும் இவர்களுடைய ஆவலுக்கு தூண்டுதலாக அமைந்தது.
1638ல் போர்த்துக்கேயருக்கு எதிராக படையெடுத்த ஒல்லாந்தர் மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, மன்னார் என்று ஒவ்வொன்றாகத் தம் வசப்படுத்தினர். இறுதியில் 1658ம் ஆண்டு யாழ்ப்பாணத்தையும் இவர்கள் கைப்பற்றியதோடு இலங்கையில் ஒல்லாந்தர் ஆதிக்கம் வேரூன்றியது. ஏறத்தாழ 150 ஆண்டுகள் ஒல்லாந்தரது பண்பாட்டுக்கூறுகள் இங்கு செல்வாக்குச் செலுத்தியதுடன் இற்றை வரை அதன் எச்சங்கள் வரலாற்றுச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன.
1658 ஆம் ஆண்டு மன்னாரையும் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவதற்காக அட்மிரல் றைக்கிளோப்வான் ஹீன்ஸ் என்ற ஒல்லாந்தத் தளபதி 1500 வீரர்களுடனும் 19 மரக் கலங்களுடனும் நார்டென் என்ற கடற்படைக்கலம் முன் செல்லப்புறப்பட்டான். மன்னார் கோட்டையை கைப்பற்றியதும் தனது படை வீரர்களை இரு பிரிவுகளாக பிரித்து ஒன்றைக் கடல் மார்க்கமாகவும் மற்றையதை தரை மார்க்கமாக பூநகரியூடாகவும் வழி நடாத்தி வந்தான்.
கடல் மார்க்கமாக வந்த படை ஊர்காவற்றுறைக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தப்படை வீரர்களால் முற்றுகையிடப்பட்டது. போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணக்கோட்டைக்குள் நுழைந்து தஞ்சமைந்தனர்.
ஒல்லாந்த படையினரின் யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகை 107 நாட்கள் தொடர்ந்தது. கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்த போர்த்துக்கேயரைப் பட்டினியால் பான் கூன்ஸ் பணிய வைத்தான். போர்த்துக்கேயர் 3000 பேருடன் சரணடைந்து கோட்டையைக் கையளித்தானர். யாழ்ப்பாணக் கோட்டையில் போர்த்துக்கேயரின் கொடி இறக்கப்பட்டு ஒல்லாந்தரின் கொடி ஏற்றப்பட்டது.
ஒல்லாந்தர் போர்த்துக்கேயரின் சதுர வடிவான யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்த கட்டடக்கலை மரபில் ஐங்கோண வடிவில் தொழினுட்பத்திறன் வாய்ந்ததாக அமைத்தனர். இக்கோட்டை யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தரின் முக்கிய மையமாக விளங்கியதுடன் பிற்பட்ட காலங்களிலும் கூட முக்கியம் பெற்றதுடன் இற்றைவரை அதன் எச்சங்களையும் காணமுடிகின்றது.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை 32 கோவில் பற்றுக்களாகப் பிரித்திருந்தனர். அவ்வாறே ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தை 32 கோவில் பற்றுக்களாகப் பிரித்து, ஆலயங்களைத் திருத்தியும் புதிய ஆலயங்களைக் கட்டியும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் தமது மத குருமாரை அல்லது சட்டம்பியார் என்பவர்களை நியமித்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனைகளை நடாத்திக் கிறிஸ்தவ மத போதனைகளைக் கூறி தமது ஆட்சியை மேற்கொண்டிருந்தனர்.
ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் உள்ள 32 கோவிற்பற்றுக்களிலும் போர்த்துக்கேயர் கட்டிய கோயில்களை ஒல்லாந்த கட்டடக் கலை மரபில் அமைத்தார்கள். அத்துடன் புதியனவாகவும் பலவற்றை அமைத்து, தமது புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவதற்கு யாழ்ப்பாணமே மிகவும் உயர்ந்த இடம் எனக் கண்ட டச்சுக்காரர் பல்தேயு பாதிரியாரை நியமித்து புரட்டஸ்தாந்து மத பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் கத்தோலிக்க ஆலயங்களும், பாடசாலைகளும் பெருமளவில் காணப்பட்டதனால் அந்த அமைப்புக்களை அப்படியே புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர்களுக்கு மாற்றுவது இலகுவான காரியமாக இருந்தது.
புரட்டஸ்தாந்து மதத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்ற உறுதியான கொள்கையுடனிருந்த ஒல்லாந்தர், சைவ மத நடவடிக்கைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாட்டை விதிக்காமைக்கு காரணம் சுதேச மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க விரும்பாததேயாகும்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் எல்லாப் பகுதிகளிலும் புரட்டஸ்தாந்து மதம் ஆழமாக ஊடுருவியிருந்தது. இவ்வகையில் சங்கானைப் பிரதேசத்திலும் ஒல்லாந்தரின் புரட்டஸ்தாந்து மதம் செல்வாக்குப் பெற்றிருந்தது. இதனை ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட புரட்டஸ்தாந்து தேவாலயத்தின் எச்சங்கள் இன்று வரை அழியாத வரலாற்றுச் சின்னமாக சங்கானைப் பிரதேசத்தில் காணப்படுகின்றது.
சங்கானையில் ஒல்லாந்தர் மேற்கொண்ட புரட்டஸ்தாந்து மதப்பிரசாரத்தாலும், அம்மத ஊடுருவலாலும் தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை ஒல்லாந்த மத குறிப்பின்படி நோக்கினால் சங்கானையில் ஓர் ஆலயமும் செங்கல்லால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த ஒரு வீடும் இருந்தன. அதில் அம்புறேசியா என்னும் போதகர் வசித்துப் படிப்பித்து வந்தார். மக்கள் கிறிஸ்தவ செய்திகளைக் கேட்பதில் விருப்பமுள்ளவர்களாக இருந்தனர். அதனை அங்கே பிரசங்கம் கேட்க வருபவர்களுக்கு அந்த ஆலயம் போதாமல் இருந்தது என அறியமுடிகின்றது. இதிலிருந்து சங்கானைப்பிரதேசத்தில் புரட்டஸ்தாந்து மதம் பெற்ற செல்வாக்கினை அறியமுடிகின்றது.
ஒல்லாந்தரால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாற்றங்களுள் கட்டடக் கலையும் முக்கியமானது. இவர்கள் கட்டடக் கலையில் குறிப்பாக கோட்டைகளை கட்டும் கலையில் விற்பன்னராக மிளிர காரணம் அவர்தளுடைய தாய் நாடாகிய ஒல்லாந்தின் பெரும் பகுதி நிலம் சதுப்பு நிலமாகவும், கடலாகவும் இருந்தமை. அவற்றை மீட்டு பாரிய கட்டடங்களை அமைப்பதில் அவர்கள் பெற்றுக்கொண்ட தேர்ச்சியே ஆகும். சங்கானையில் இன்று காணப்படும் ஒல்லாந்தர் கால தேவாலயம் போர்த்துக்கேயரினால் முன்பு அமைக்கப்பட்டிருந்த போதிலும் ஒல்லாந்தர் தமது ஆட்சியில் இதனை மீளமைத்துக்கொண்டனர்.
இத் தேவாலயம் 1657களில் ஒல்லாந்த மதகுருவான பல்தேயிஸ் பாதிரியாரின் நேரடிக்கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது. இத்தேவாலயம் முருகைக்கற்களினால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான தேவாலயம் ஆகும். குறிப்பாக உள் மண்டப கூரைப்பகுதி முருகைக்கற்களினால் கட்டப்பட்டிருக்கின்றது. இத் தேவாலயம் பாடசாலையாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது எனவும் அறியமுடிகின்றது.
இலங்கையில் ஏனைய பகுதிகளில் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட தேவாலயங்களுள் சங்கானையில் அமைக்கப்பட்ட தேவாலயமே இன்றும் ஓரளவிற்கு முழுமையான தோற்றம் கொண்டதாக காணப்படுகின்நது. இத்தேவாலயமானது 350 இற்கு மேற்பட்ட வருடங்களை கடந்த நிலையில் ஒல்லாந்தரின் ஆட்சியின் விளைவினை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சின்னமாக காணப்படுகின்றது. அண்ணளவாக ஐந்து பரப்புக் காணியில் அமைந்துள்ள இத் தேவாலயம் 4195 சென்டிமீற்றர் நீளமும் 1190 செண்டிமீற்றர் அகலமும் கொண்டு காணப்படுகின்றது.
இந்த தேவாலயத்தின் முன் மண்டபம் மேல் கூரைகள் அற்ற நிலையிலும் உள் மண்டபமானது முருகைக்கற்களினாலான கூரையை கொண்டிருக்கின்றது. இத் தேவாலயத்தில் பதினொரு ஜன்னல் பகுதிகள் காணப்படுகின்றன. இதில் 9 ஜன்னல்கள் வெளிமண்டபத்திலும் 2 ஜன்னல்கள் உள் மண்டபப் பகுதியிலும் காணப்படுகின்ற போதிலும் கதவோ ஜன்னலோ இன்று காணப்படவில்லை. தேவாலயத்தின் வளைவுப் பகுதி ஓரளவு இன்று அத்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இத் தேவாலயம் கட்டப்பட்ட சுவரினைப் பார்க்கும் போது 30 cm நீளமும் 20 cm அகலமும் கொண்டதாக முருகைக்கற்களினால் இடையிடையே மட்பாண்ட துண்டுகள் வைக்கப்பட்டு கட்டப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. முருகைக் கற்களின் இடை மீதான பூச்சு 10 cm தடிப்பில் பூசப்பட்டிருந்தது.
இத் தேவாலயத்தின் பின் பகுதியில் வலது வெளிப்புறத்திலே உள் மண்டபத்தை தொடர்ந்த வகையில் ஏறத்தாழ 10 அடி நீள அகலம் கொண்டதான ஒரு அறை கட்டப்பட்டிருக்கலாம். இன்று அதன் அத்திவாரங்களே காணப்படுகின்றன. உள் மண்டபத்தின் இடது புற யன்னல்களின் கீழ்ப்பகுதி சிதைவடைந்து காணப்படுகின்றது.
உள் மண்டபமானது அதன் கூரை முருகைக்கற்களினால் முழுமையாக கட்டப்பட்டுள்ளது. இன்று வரை இக்கூரையின் மேலிருந்து உள் மண்டபத்திற்குள் மழை நீர் உட்புகாதவாறு காணப்படுகின்றது. இவ் ஆலயத்தின் வலது புறமாக மதகுருவின் வீடு இருந்த இடத்தில் இன்று செங்கற்களினாலான அத்திவார தடயங்கள் காணப்படுகின்றன. தேவாலய சுவர் ஆங்காங்கே வெடித்து உடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்த சங்கானை ஒல்லாந்தர் கால தேவாலயம் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சிதைவடைந்து கொண்டிருக்கின்றது.
இலங்கையின் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் மூன்று முக்கிய நிர்வாக மையங்களுள் ஒன்றாக மொமாண்டறி விளங்கி இருந்தது. ஒல்லாந்தரின் வரலாற்றுச் சின்னங்களை உடுவில், சுண்டிக்குளி, அச்சுவேலி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணக் கோட்டை போன்ற இடங்களிலுள்ள தேவாலயங்கள் மூலம் அறிய முடிகின்றது.இவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரலாற்றுச் சின்னமாக சங்கானை தேவாலயமே அமைந்துள்ளமை குறிப்பிடத்கக்க விடயமாகும்.
இத்தேவாலயத்தை சிலர் ஒல்லாந்தர் கால கோட்டை எனவும் குறிப்பிட்டுள்ளனர். போர்த்துக்கேயர் இங்கே குதிரைகளைக்கட்டி வளர்த்ததாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை ஒல்லாந்தரின் கட்டிடக்கலை கூறுகளை ஓரளவுக்கேனும் அழிவடையாது கொண்டிருக்கும் ஒரு தேவாலயமாக சங்கானைத் தேவாலயத்தினைக் காண முடிகின்றது. இந்த வரலாற்றுச் சின்னத்தை அழியாது பாதுகாப்பது எல்லோரதும் கடமையாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக