யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமிகள் இருவரைக் கடத்தியதாக தனியார் பஸ் ஒன்றின் சாரதியும் அதன் நடத்துநரும் சந்தேகத்தின் பேரில் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து மேலும் தெரிய வருவதாவது:
பெற்றோருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக புத்தூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பின்னர் அவர் துணைக்கு தனது நண்பியையும் அழைத்துக்கொண்டு மாங்குளத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக வவுனியா செல்லும் பஸ்ஸில் ஏறியுள்ளார்.
சிறுமிகள் இருவரும் மாங்குளம் பஸ் நிலையத்தை வந்தடைந்த போதும், தாம் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பது தெரியாமல் தடுமாறினர். இதனை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட குறித்த பஸ்ஸின் சாரதியும் நடத்துனரும் சிறுமிகள் இருவரையும் தந்திரமாகப் பேசி, வவுனியாவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தேக்கவத்தை என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றில் சிறுமிகள் இருவரையும் தங்க வைத்தனர். இந்த விடயம் வவுனியா மாவட்ட தனியார் பஸ் போக்கு வரத்துச் சங்கத்துக்கு தெரிய வரவே அவர்கள் உடனடியாக இது குறித்து சாரதியிடமும், நடத்துனரிடமும் விசாரணை செய்தனர். பின்னர் வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி சாள்ஸுக்கும் தெரியப்படுத்தினர்.
இதன் பின்னர் பொலிஸார் சிறுமிகளைக் கடத்தியதாக சாரதியையும் நடத்துனரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக