அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் சஞ்சய் தேவ். 27 வயது தொழில் அதிபரான இவரது உடல் எடை திடீர் என்று அதிகரித்துக்கொண்டே போனது. 148 கிலோவாக இருந்த எடை 3 ஆண்டுகளில் 200 கிலோ அதிகரித்து 348 கிலோ ஆனது.அவரால் உடலை தூக்கிக்கொண்டு நடமாட முடியவில்லை.
படுத்த படுக்கையானார். மூச்சு விடவும் சிரமப்பட்டார். மும்பை, டெல்லி ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு தனக்கு சிகிச்சை அளிக்க முடியுமா என்று கேட்டார். அங்குள்ள டாக்டர்கள் முடியாது என்று கை விட்டனர். இந்த நிலையில் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் உடல் எடை குறைப்புக்கான 'ரோபோட்டிக்' அறுவை சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு இருப்பதை இன்டர்நெட் மூலம் சஞ்சய் தேவ் அறிந்து கொண்டார்.
உடனே சென்னை ஆஸ்பத்திரிக்கு டெலிபோனில் தொடர்பு கொண்டு தனது நிலையை விளக்கினார். அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் ஒப்புக்கொண்டனர். சென்னை புறப்பட்டு வருமாறு தெரிவித்தனர். கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வர முடிவு செய்தார். விமானத்தில் அவருக்கு இருக்கை வசதி தகுந்தவாறு இல்லாததால் ஏற்ற மறுத்து விட்டனர்.
இதனால் ரெயிலில் சென்னை வந்தார். ரெயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சாதாரண படுக்கையில் இவரது உடல் அடங்காது என்பதால் சிறப்பு படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 30-ந்தேதி சஞ்சய் தேவுக்கு எடை குறைப்பு ஆபரேஷன் 2 1/2 மணி நேரம் நடந்தது.
ஒரு சில நாட்களிலேயே ஓரளவு எடை குறைந்து எழுந்து நடக்க தொடங்கினார். சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு முன் சென்னை வழியாக செல்லும் எர்ணாகுளம்- கவுகாத்தி ரெயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். உறவினர்களும் உடன் சென்றனர். ரெயில் நேற்று கவுகாத்தியை நெருங்கிக்கொண்டு இருந்தது. அப்போது ஓடும் ரெயிலில் சஞ்சய் தேவுக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.
சிறிது நேரத்தில் அவர் இறந்தார். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ரெயில் அசாம் மாநிலம் ரஞ்கிய ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு அவரது உடலை இறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவரது உடலை இறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. உயிருடன் இருந்த போது தட்டுத்தடுமாறி ஏறிவிட்டார். இறந்த உடலை தூக்க முடியாமல் ரெயில்வே ஊழியர்கள் சிரமப்பட்டனர்.
கொஞ்சம் கொஞ்சமாக தூக்கி வந்து கதவு பக்கம் கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து பிளாட்பாரத்தில் இறக்கினர். 4 மணி நேர போராட்டத்துக்குப்பின் உடல் இறக்கப்பட்டது. உடலை இறக்கும் பணியில் ரெயில் ஊழியர்களுடன் 20 போர்ட்டர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். அதன் பிறகு சஞ்சய் தேவ் உடல் விசேஷ ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான கவுகாத்தி அருகே உள்ள லட்சுமிபூர் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக