விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட பிரமாண்ட பள்ளம் கிரீன்லாந்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.100 கி.மீ விட்டம் கொண்ட இப்பள்ளம் 300 கோடி ஆண்டு பழமையானது என்றும் தெரியவந்துள்ளது.டென்மார்க் அருகே உள்ள கிரீன்லாந்து நாட்டில் உலகின் மிக பழமையான,
மிகப்பெரிய விண்கல் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் புவியியல் ஆய்வு துறை மற்றும் கிரீன்லாந்து ஆராய்ச்சியாளர் ஆடம் க்ரேட் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் அரிய கண்டுபிடிப்பு இது.
கிரீன்லாந்தின் மனிட்ஸ்சாக் என்ற இடத்தில் இந்த மெகா சைஸ் பள்ளம் உள்ளது. பள்ளம் உருவாக காரணமான விண்கல்லின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பல்வேறு நவீன தொழில்நுட்ப ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதில் இதுகுறித்த அரிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவ்வளவு பெரிய விண்கல் பள்ளம் கண்டறியப்பட்டுள்ளது உலகில் இதுவே முதன்முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெகா சைஸ் விண்கல் பள்ளம் குறித்து க்ரேட் மேலும் கூறியதாவது, விண்ணில் இருந்து பல்வேறு அளவுகளில் தொடர்ந்து கற்கள் விழுந்துகொண்டே இருக்கின்றன. இதில் பெரும்பாலான கற்கள் பூமியின் வளிமண்டலத்தை கடக்கும் நேரத்தில் எரிந்து, நடுவானிலேயே சாம்பலாகி விடுகின்றன.
கிரீன்லாந்தின் மனிட்ஸ்சாக் பகுதியில் பிரமாண்ட விண்கல் ஒன்று சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருப்பதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பள்ளத்தின் விட்டம் 100 கி.மீ. நீளம் உள்ளது. இதன் பரப்பு சுமார் 7,857 சதுர கி.மீ. (தோராயமாக சென்னை பெருநகரம் போல 18 மடங்கு அதிகம்.)
விழுந்த போது, இது சுமார் 500 கி.மீ. கொண்ட பள்ளமாக இருந்திருக்கிறது. மழை, காற்று, மண்அரிப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கை சீற்றங்களால், 300 கோடி ஆண்டுகளில் இப்பள்ளம் சற்று சுருங்கியுள்ளது.
ஆண்டுகள் ஓடியதில், இப்பள்ளமும் புதைந்து போயிருக்கிறது. இது தற்போது பூமியின் தரைப்பகுதியில் இருந்து 25 கி.மீ ஆழத்தில் இருக்கிறது. இவ்வளவு பெரிய விண்கல் பள்ளம் கண்டுபிடிக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதன்முறை.
ராட்சத விண்கல் விழுந்ததால் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் ஏற்பட்ட பாதிப்புகள், சேதம் பற்றி தெரியவில்லை. ஒருவேளை, இவ்வளவு பெரிய கல் ஒன்று இப்போது விழுந்தால், அது ஏற்படுத்தும் பாதிப்புகளை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மிகப்பெரிய அழிவை சந்திக்க நேரிடும். விண்கல் பள்ளம் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடந்து வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக