வன்னிப் பிரதேசத்தில், தற்போது நிலவி வருகின்ற கடும் வரட்சி காரணமாக மக்கள் நீர்த் தேவைகளுக்காக பெரும் துன்பங்களை சந்தித்து வருகின்றனர். குடிதண்ணீர் பணம் கொடுத்து வாங்கவேண்டிய சூழ்நிலைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் குளங்களின் நீர் மட்டமும் என்றுமில்லாத வகையில் குறைவடைந்துள்ள நிலையில், நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையால் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நீரினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு நீண்ட தூரங்களுக்கு மக்கள் அலைந்து திரியும் அவலம் நாளாந்தம் இடம்பெற்றுவருகிறது.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில், பூநகரி பிரதேச செயலக பிரிவில் பாரிய நீர் தட்டுப்பாடு காணப்படுகின்ற நிலையில் அங்கு ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
மக்கள் தங்களது அன்றாட அனைத்து நீர்த் தேவைகளுக்காகவும் நீரினை பணம் கொடுத்தே பெற்று வருகின்றனர்.
பூநகரி பிரதேச சபையினரும் குடிநீர் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்ற போதிலும் அது எல்லா பிரதேசங்களையும் சென்றடையவில்லை என்பதோடு மக்களின் எல்லாத் தேவைகளுக்கும் போதுமானதாகவும் இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
முழங்காவில் பிரதேசத்திலும் மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில் அங்குள்ள ஒரு குழாய் கிணற்றிலிருந்து கடற்படையினர் நாளாந்தம் பாரிய நீர்த்தாங்கிகள் மூலம், இலட்சக்கணக்கான நீரை அருகில் உள்ள பிரதான கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
இந்த குழாய் கிணற்றிலிருந்து படையினரால் பெறப்படும் நீர் நாளாந்தம் அவர்களின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற அதேவேளை முகாமிலுள்ள நீச்சல் தடாகத்தினை நிரப்புவதற்கும் பயன்படுத்தப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் முழங்காவில் பிரதேசத்தினை சுற்றியுள்ள பிரதேசங்களின் நீர் நிலைகள் உவர்நீராக மாறியுள்ளதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குடிப்பதற்கு நீர் இன்றி தவிக்கும் நிலையில் கடற்படையினர் குளிப்பதற்கு நாளாந்தம் பெருமளவு நீர் எடுத்துச்செல்லப்படுவது நியாயமற்ற செயலாகவே மக்களால் பார்க்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக