அக்காவை பழிவாங்குவதற்காக அவரது தங்கையை கடத்தி, காரில் பலாத்காரம் செய்த பொலிஸ் இன்பார்மர் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பருக்கு 10
ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் டெல்லி மங்கோல் புரியை சேர்ந்தவர் மனோஜ் (24). பொலிசுக்கு தகவல் கொடுக்கும் இன்பார்மராக இருந்து வந்தார்.
இதனால் பொலிசாருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, எந்த குற்றத்தையும் செய்யலாம் என்ற துணிச்சலுடன் இவர் வலம் வந்தார் எனவும் கூறப்படுகின்றது.
அவரது நண்பர் அமீத்(24).மனோஜூம், அம்சலா என்ற பெண்ணும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஒரே வீட்டில் வசித்து வந்த போதிலும் அவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
ஒரு நாள் சண்டை பயங்கரமாக வெடித்ததும், அம்சலா நேராக பொலிஸ் ஸ்டேஷன் சென்றார். மனோஜ் மீது புகார் செய்தார். பொலிசார் விசாரித்தபோது, அம்சலாவுக்கு ஆதரவாக அவரது 12 வயது தங்கை சாமரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாக்குமூலம் அளித்தார்.
பொலிசார் மனோஜ் மீது நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மனோஜ், அம்சலாவை பழிவாங்க திட்டமிட்டார். அவரது தங்கை சாமராவை கடத்தி சென்று பலாத்காரம் செய்யும் திட்டத்தோடு கடந்த ஆண்டு பெப்ரவரி 6ம் திகதி காத்திருந்தார்.
சந்தைக்கு காய்கறிகள் வாங்குவதற்காக சாமரா தனியாக வந்தார். அவளிடம் சென்று மனோஜ் பேசினார். அக்காவை பற்றி விசாரித்தார். ‘அக்கா வீட்டில்தான் இருக்கிறாள். நீங்கள் நேராக அங்கு செல்லுங்கள். இருவரும் சந்தித்து பேசினால் பிரச்சினை தீர்ந்து விடும்’ என்று சாமரா கூறிக் கொண்டிருந்த போது, பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது.
அந்த காரை மனோஜின் நண்பர் அமீத் ஓட்டி வந்தார். கார் வந்ததும் சாமராவை வலுக்கட்டாயமாக பிடித்து உள்ளே தள்ளினார் மனோஜ். பின்னர் காரில் ஏறிய மனோஜ், சத்தம் போட்டால் கொன்று விடுவதாக சாமராவை மிரட்டினார். பயத்தில் அவர் அமைதியானார்.
கார் வேக மாக கிளம்பியது. ஆள் இல்லாத பகுதியில் கார் சுற்றி வந்தது. ஓடும் காரிலேயே சாமராவை மனோஜ் பலாத்காரம் செய்தார்.
பின்னர் காரை மனோஜ் ஓட்டினார். சாமராவை அமீத் பிடித்து கொண்டார். அவரும் அவரை பலாத்காரம் செய்து விட்டு, இரவில் மங்கோல்புரி பகுதியில் இறக்கி விட்டு போய் விட்டார்.
தங்கையை காணாமல் தவித்த அம்சலா, பொலிசுக்கு சென்றார். பொலிசார், இன்பார்மர் என்ற முறையில் மனோஜின் உதவியை நாடினர். ஆனால், அவன் தேடுவது போல் நடித்தான்.
இதற்கிடையில் நள்ளிரவில் சாமரா, அக்காவை அவளது செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அதன்பிறகு அவரது இருப்பிடம் தெரிந்து பொலிசாருடன் சென்று அவரை மீட்டனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த பொலிசார் மனோஜையும் அவரது நண்பன் அமீத்தையும் கைது செய்தனர்.
அவர்கள் மீதான வழக்கு கூடுதல் செசன்ஸ் நீதிபதி காமினி லாவ் முன்னிலையில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது.
இதன்படி, அக்காவுக்கு பாடம் புகட்டுவதற்காக தங்கையை கடத்தி அவளது வாழ்க்கையை சீரழித்த குற்றம் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் இன்பார்மர் என்பதால், குற்றத்தை செய்து விட்டு தப்பித்து விடலாம் என்ற தைரியத்தில் இந்த கொடூரத்தை அவர் செய்துள்ளார். அதனால் மனோஜ்க்கு ஆயுள் தண்டனையும், இந்த குற்றத்திற்கு துணைபுரிந்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த 2வது குற்றவாளியான அமீத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக