புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செட்டிக்குளம் கரையில் குழந்தை ஒன்று கால்கள் மட்டும் வெளியே தெரிந்தபடி நேற்று மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது.
இதை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்ததையடுத்து உடனே அவர்கள் குழந்தையை மண்ணில் இருந்து தூக்கியபோது குழந்தையை சுற்றி சிமென்ட் சாக்கு சுற்றப்பட்டு இருந்தது.
அதை அகற்றியபோது அது பெண்குழந்தை என்று தெரிந்தது. உயிருடன் இருந்த அந்த குழந்தை எறும்புகள் கடித்ததால் கால்களை அசைத்து கத்தியது.
ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு இக்குழந்தையை புதைத்திருக்க வேண்டும் என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
இது குறித்து விராலிமலை கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
உடனே மருத்துவக்குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் வந்து குழந்தையை மீட்டனர். பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையளித்த டொக்டர் ஷர்மிளி கூறுகையில், குழந்தை பிறந்து 24 மணி நேரத்திற்குள்தான் இருக்க வேண்டும். குழந்தை உடல்முழுவதும் ரத்தம் இருந்ததால் உடலை சுத்தம் செய்து உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்றார். பின்னர் குழந்தை திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையை புதைத்தது யார் என்பது குறித்து விராலிமலை பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக