புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அறுபது வயது ஆவதற்குள்ளாகவே ஆடி அடங்கி விடும் இன்றைய காலத்தில் 111 வயதிலும் ஒரு மூதாட்டி சுறுசுறுப்பாக இருக்கிறார்... நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள தெற்கு மடத்தூரை சேர்ந்த அவரது பெயர் சொர்ணம்மாள்.


சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த சொர்ணம்மாளை அவரது அண்ணன் சுடலை மணி தான் வளர்த்து ஆளாக்கினார். சொர்ணம்மாளுக்கு 28 வயதில் திருமணம் நடந்தது. . அவரது கணவர் சுப்பையா. இவர் பனை ஏறும் தொழில் செய்து வந்தார். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால் சொர்ணம்மாள் கடுமையாக உழைக்க தொடங்கினார்.

திருமணத்திற்கு பின்னரும் கடின உழைப்பால் முன்னேறி வந்தார். சொர்ணம்மாள்-சுப்பையா தம்பதியருக்கு திருமணமாகி நீண்ட நாள் குழந்தை இல்லை. இதனால் அவர்கள் வேண்டாத தெய்வமில்லை. திருச்செந்தூருக்கு கால் நடையாகவே நடந்து சென்று வணங்கினர்.

இதன் பயனாக 38 வயதுக்கு பின் சொர்ணம்மாளுக்கு சீனியம்மாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் சுப்பிரமணியன் என்ற மகனும், வள்ளியம்மாள் என்ற மகளும் பிறந்தனர். தற்போது சீனியம் மாளுக்கு 73 வயதும், சுப்பிர மணியனுக்கு 71 வயதும், வள்ளியம் மாளுக்கு 53 வயதும் ஆகின்றன. மூன்றாவது மகள் வள்ளியம்மாள், சொர்ணம்மாள் பாட்டிக்கு 58 வயதாகும் போது பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன், மகள் வழியில் 14 பேரன்-பேத்திகளும், 13 பூட்டன்-பூட்டிகளும் உள்ளனர். அதிகாலை 4 மணிக்கெல்லாம் சொர்ணம்மாள் எழுந்துவிடுவார். காலை கடன்களை முடித்துவிட்டு, குளித்து முடித்து காலை உணவாக பழைய சாதம் சாப்பிட்டு வருகிறார்.

மதியமும் பழைய சாதம் சாப்பிடும் இவர் இரவில் சாப்பிடுவதில்லை. சோள கஞ்சி, கேப்பை களி விரும்பி சாப்பிடுவார். சிறு வயிதில் இருந்தே விறகு பொருக்குவது, பதனீர் காய்ப்பது, பதனீர் விற்பது, களை எடுப்பது, மாடு மேய்ப்பது என அனைத்து வேலைகளையும் சொர்ணம்மாள் செய்து வந்தார்.

தற்போது 111 வயதை கடந்தும் இவரது கண் பார்வை தெளிவாக உள்ளது. இதனால் அவர் இந்த வயதிலும் கண்ணாடி அணியாமல் உள்ளார். காதும் நன்றாக கேட்கிறது. இவர் பொழுதுபோக்காக ஞாயிறு தோறும் டி.வி.யில் ராமாயணம் தொடர் பார்த்து வருகிறார். பழைய திரைப்படமான சம்பூர்ண ராமாயணம் படத்தை பலமுறை பார்த்துள்ளார்.

சிவாஜி நடித்த சவாலே சமாளி படத்தை ரசித்து பார்ப்பாராம். ரஜினி நடித்த அருணாசலம் படம் இவருக்கு மிகவும் பிடிக்குமாம். விஜய் நடித்துள்ள ஷாஜகான் படத்திலுள்ள மெல்லினமே... மெல்லினமே... பாடலை அடிக்கடி முணுமுணுப்பார். இவரது மருமகள் 40 வயதில் இறந்துவிட்டார். எனவே பேரன்-பேத்திகளை இவர்தான் வளர்த்து ஆளாக்கினார்.

காய்ச்சல்-தலைவலி வந்தால் ஊசி, மருந்தை தவிர்த்து கசாயத்தையே பயன்படுத்தி வருகிறார். துளசி இலையை அடிக்கடி மென்று தின்பார்.

111 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கும் சொர்ணம்மாள் அதன் ரகசியம் குறித்து கூறியதாவது:-

`சின்ன வயசிலேயே எங்க அப்பா-அம்மா இறந்ததால வீட்டில் அனைத்து வேலைகளையும் நானே கவனித்து வந்தேன். அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணிவரை வீட்டு வேலை, தோட்ட வேலை என அனைத்தையும் நானே பார்ப்பேன். அந்த காலத்துல உள்ள உணவு பழக்கங்கள் இப்ப இல்ல.

அப்போ சோள கஞ்சியும், கேப்பை களியும் அதிகமாக பயன்படுத்து வோம். எப்போதாவது தான் அரிசி சாதம் சாப்பிடுவோம். சிறுபயறு , கானம், மொச்சை என பயறு வகைகளாக சாப்பிடுவோம். பழைய கஞ்சிக்கு சின்ன வெங்காயமும், மிளகாயும், கருப்பட்டியும் சேர்த்து சாப்பிடும் போது அதன் ருசியே தனி'.

இவ்வாறு அவர் கூறினார்.

சொர்ணம் மாளின் மகன் சுப்பிரமணியன் ஊரில் டீக்கடை வைத்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு கடையில் சரியாக வியாபாரம் இல்லையாம். இதனால் சுக்கு, மிளகு போட்டு `மசாலா டீ' போடுமாறு சொர்ணம்மாள் பாட்டி கூறியுள்ளார். அதன்படி தற்போது கடையில் `மசாலா டீ' வியாபாரம் நடந்து வருகிறது. டீக்கடையில் சுப்பிரமணியனுக்கு உதவியாக அவரது மகன் பாலமுருகன் உள்ளார்.

பாட்டி சொர்ணம்மாள் குறித்து பாலமுருகன் கூறியதாவது:-

எனது தாய் 40 வயதில் இறந்துவிட்டார். சிறு வயதிலேயே எங்களை வளர்த்தவர் பாட்டிதான். எங்களை அவர் கண்டிப்புடன் வளர்த்தார். இப்பொழுதும் நாங்கள் பாட்டி பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்போம். அவர் மீது அதிக மரியாதை வைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top