மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருட்டுச்சோலைமடுவில் கணவன் தன்னைக் கொடுமைப்படுத்தியதனால் தனது குழந்தையை சித்திரவதை செய்து வந்த
பெண்ணை வவுணதீவுப் பிரதேச செயலக அதிகாரிகள் நேற்று மாலை மீட்டதுடன், குறித்த தாயையும் குழந்தையையும் வவுணதீவுப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இளம் தாய், தனது ஒரு வயதும் இரண்டு மாதமும் உடைய குழந்தையை நீண்ட நாட்களாக கடித்தும் அடித்தும் நெருப்பினால் சுட்டும் சித்தரவதை செய்து வந்ததுடன், நேற்று முன்தினம் குழந்தைக்கு இரவு மண்ணெண்ணை பருகக் கொடுத்தும் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைக்கு மண்ணெண்ணை பருக்கிய நிலையில் சிறுவர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் புதுமண்டபத்தடி கிராமிய வைத்திய சாலையில் குழந்தையை பாட்டியுடன் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், நேற்று குழந்தையை வீட்டிற்குக் கொண்டு சென்ற நிலையில் குறித்த தாய் மீண்டும் குழந்தையை சித்திரவதை செய்ததுடன் தூக்கி வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து, அயலவர்கள் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தைப் பிரிவிற்கு வழங்கிய தகவலை அடுத்து பிரதேச செயலாளர் வெ.தவராஜாவின் உத்தரவிற்கமைய கிராம சேவை அதிகாரி க.வரதராசா, சிறுவர் நன்னடத்தை அதிகாரி எம்.வரதராஜன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் பிரதிபன் மற்றும் சூரியா பெண்கள் அமைப்புப் பிரதிநிதிகள் சென்று குழந்தையை மீட்டதுடன் குழந்தையையும் தாயையையும் வவுணதீவுப் பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
இதனை அடுத்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது குழந்தையை சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக