புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கை, கால்கள் அசைய வழியின்றி, பேச வார்த்தைகளின்றி, கண்ணின் கருவிழிகள் மட்டும் அங்கும், இங்குமாய் பெற்றோரை தேடி அலைகின்றன. "மதுரை ரயில்வே ஸ்டேஷனில் அனாதையாக போட்டு விட்டுச் சென்ற அப்பாவும், அம்மாவும் தன்னை தேடி வருவார்களா' என அந்த 10
வயது சிறுவனின் கண்ணீர் ஏங்கி கொண்டிருக்கிறது.

அந்த பாவப்பட்ட சிறுவனின் பெயர் சந்தீப். வயிறு வீங்கி, தோல்கள் செதில் செதிலாக மாறி, பெற்றோர் இருந்தும் அனாதையாக இன்று மதுரை அரசு ஆஸ்பத்திரி வார்டு 202ல் படுத்திருக்கிறான்.

மூளை வளர்ச்சி குன்றியதால், பேச வார்தைகள் வரவில்லை. கை,கால்கள் செயல்படவில்லை. வயிறும், நெஞ்சும் மட்டுமே ஏறி, இறங்கி இவன் உயிரோடு போராடி கொண்டிருப்பதை உணர்த்துகின்றன.

என்ன நோய் என்று தெரியாமல், உடைந்த கை, தொடை எலும்புக்கு மட்டும் கட்டுப்போட்டு டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.

பக்கத்து நோயாளிகளின் உறவினர்கள் உணவளித்தாலும் சந்தீப்பால் சாப்பிட வழியில்லை. "ஐயோ... பாவம்' என்று ஊட்டிவிட யாரும் தயாராகவில்லை.

தனது வலியை வெளியே சொல்ல முடியாமல், பொறுத்துக் கொண்டு போராடும் இச்சிறுவனுக்கு, உணவு கிடைத்தும் சாப்பிட முடியாத கொடுமையை யார் பார்த்தாலும் கண்ணீர் வடிக்க செய்யும்.

இச்சிறுவன் குறித்து, நமது கவனத்திற்கு கொண்டு வந்த மதுரை வக்கீல் முத்துக்குமார் கூறியதாவது :

பார்ப்பதற்கு வடமாநில சிறுவன் போல் உள்ளான். பிறப்பிலேயே இப்பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். கடந்த வாரம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு பெற்றோர் சேர்த்துள்ளனர்.

பின், "டிஸ்சார்ஜ்' செய்து கொண்டு, ரயில்வே ஸ்டேஷன் திரும்பியவர்கள், அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். ரயில்வே போலீசார் இச்சிறுவனை மீட்டு, மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

செஞ்சிலுவை சங்க முயற்சியால், இவனை சமூகநலத்துறை பராமரிக்க டாக்டர்கள் பரிந்துரைத்தனர். அதிகாரியும் வந்து பார்த்துவிட்டு சென்றார்.

இதுவரை முன்னேற்றம் இல்லை. சிறுவன் உயிரை காப்பாற்றவும், நோயை குணப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அறக்கட்டளைகள் இவனை தத்தெடுக்க முன்வரவேண்டும், என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top