புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ரஜோதேவிக்கு இப்போது வயது 77. மூன்று  வருடங்களுக்கு முன்பு செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றெடுத்து, `உலகில் மிக அதிக வயதில் குழந்தை பெற்றவர்` என்ற சாதனைக்கு சொந்தக்காரரான பெண்மணி இவர்.அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்த மூதாட்டி. இவரது கணவர்
பல்ராம் லோகன். கொள்ளுப் பேரன், பேத்திகளை கொஞ்சி மகிழ வேண்டிய வயதில் இந்த தம்பதி, தங்கள் 3 வயது மகளுடன் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது ருசிகர வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கிறார் ரஜோதேவி...

"நான் கிராமப்புறத்தில் பிறந்தவள். பள்ளிக்குப் போனதில்லை. படிப்பை அறிந்ததில்லை. எனக்கு 15 வயதிருக்கும்போது திருமணம் செய்து வைத்துவிட்டனர். கணவரும் பள்ளிக்கூடம் போனதில்லை.

திருமணத்துக்குப் பிறகு பல ஆண்டுகளாக எங்களுக்கு குழந்தையில்லை. நானும் என் கணவரும் பல டாக்டர்களை சந்தித்து குழந்தை பெறுவதற்கான சிகிச்சைகளை எடுத்துப் பார்த்தோம். ஆனால் எந்த மாற்றமும் நிகழவில்லை.

இனி, என் கணவருக்கு ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுக்க முடியாது என்ற எண்ணம் எனக்கு வந்ததும், அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நான் சம்மதித்தேன். அப்போது எனது சகோதரி `உமி` திருமணம் ஆகி, கணவர் அவளை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதால், என் பெற்றோருடன் வசித்து வந்தாள். எனவே என் சகோதரியை திருமணம் செய்து கொள்ளும்படி கணவரிடம் கூறினேன். அவர் சம்மதத்துடன் திருமணமும் நடந்தது. ஆனால் அப்படியும் எங்கள் சோகம் தொடர்ந்தது. என் தங்கையும் பல ஆண்டுகளாக கர்ப்பம் தரிக்கவில்லை.

4 ஆண்டுகள் கழிந்துபோன பிறகு ஒருநாள், பக்கத்து வீட்டுக்காரரான ராம்குமார் சர்மா, பத்திரிகையுடன் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை எங்களுக்குப் படித்துக் காட்டினார். எங்கள் ஊரிலிருந்து கொஞ்சம் தூரத்திலுள்ள பாடைன் என்ற கிராமத்தில் ஒரு வயதான பெண்மணி 2 ஆண் குழந்தைகளைப் பெற்றிருப்பதாக அந்தச் செய்தியில் போட்டிருந்தது. அப்போதுதான் செயற்கையாக ஐ.வி.எப். (in vitro Fertilisation) முறையில் குழந்தை பெறலாம் என்பதை முதன் முதலில் கேள்விப்பட்டோம்.

உடனே நாங்கள் அந்த கிராமத்திற்குச் சென்று அந்தப் பெண்ணையும், குழந்தைகளையும் பார்த்தோம். பிறகு அவர்களுக்கு பிரசவம் பார்த்த கிசார் நகரிலுள்ள தேசிய கருவுறல் மற்றும் சோதனைக் குழாய் குழந்தை மையத்தின் டாக்டர் பிஸ்னோயை நேரில் சந்தித்தோம்.

அப்போது டாக்டரிடம், செயற்கை முறையில் கருவூட்ட எவ்வளவு செலவாகும் என்று என் கணவர் கேட்டார். நாங்கள் எதிர்பார்க்க முடியாத அளவு பெரிய தொகையை டாக்டர்கள் சொன்னதும் கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. இருந்தாலும் எப்படியாவது ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ணினோம்.

என் தங்கை உமிக்கு செயற்கை முறையில் கருவூட்டும் சிகிச்சை அளிக்க பரிசோதனைகள் செய்தோம். ஆனால் அவளது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்ததால் அவர் கருவுற்றால் நிறைய சிக்கல்கள் ஏற்படும் என்று டாக்டர்கள் கூறிவிட்டனர்.

வேண்டுமானால் உங்களுக்குப் பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று டாக்டர் பிஸ்னோய் என்னிடம் கூறினார். எனக்கும் குழந்தை ஆசை இருந்ததால் நான் பரிசோதனைக்கு சம்மதித்தேன். எனது வயது மிக அதிகமாக இருந்ததால் நிறைய சோதனைகள் செய்து பார்த்தார்கள். கடைசியில் எனது உடல் குழந்தையை சுமக்க நல்ல தகுதியுடன் இருப்பதாகக் கூறியதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

2 மாத காலமாக மருத்துவப் பரிசோதனைகள் நடத்தி எனது கருமுட்டைகளை சேகரித்தனர். தொடர்ந்து ஐ.வி.எப். சிகிச்சை முறைகளை மேற்கொண்டனர். அதற்காக பல மணி நேரங்களுக்கு என்னை மயக்க நிலையில் வைத்திருந்தார்கள். பிறகு 2 மாதம் கழித்து நான் கர்ப்பம் தரித்தேன். அப்போது எல்லையில்லா மகிழ்ச்சியாக இருந்தது.

கர்ப்பகாலத்தில் எனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. சிறிது வலியும், உடல் சோர்வும்தான் இருந்தது. நான் எனது வீட்டு வேலைகளை வழக்கம்போல்தான் செய்து வந்தேன். தூக்கம், உணவு சாப்பிடுவதைத் தவிர வேறு ஓய்வு எடுத்ததில்லை.

2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி என் வாழ்வில் மறக்க முடியாத நாள். அன்றுதான் என் மகள் பிறந்தாள். அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையை எடுத்தனர். குழந்தை பிறந்ததும் எனக்கு நிறைய ரத்தப்போக்கு ஏற்பட்டது. எனவே எனக்கு வேறொரு அறுவைச் சிகிச்சை செய்தனர்.

குழந்தை பிறக்கும் வரை அது ஆணா, பெண்ணா என்று எங்களுக்குத் தெரியாது. டாக்டர் அதை சொல்ல மறுத்துவிட்டார். நாங்கள் தொடர்ந்து அவரை வற்புறுத்தவில்லை. ஏனெனில் நாங்கள் எல்லோருமே ஒரு குழந்தையைத்தான் எதிர்பார்த்தோமே தவிர, அது ஆணா? பெண்ணா? என்று எதிர்பார்க்கவில்லை. மகள் பிறந்ததும் நான் என் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன். அவள் பிறந்திருந்தபோது எனக்கு தாய்ப்பால் சுரந்தது.

குழந்தை பிறந்ததால் குடும்பமே மகிழ்ச்சியால் நிரம்பியது. ஆனால் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் பட்ட கஷ்டம் எங்களுக்குத்தான் தெரியும். எங்களது 2 ஏக்கர் நிலத்தையும், ஒரு காளை மாட்டையும், கட்டவண்டியையும் விற்றுத்தான் ஆபரேஷனுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்தோம். நாங்கள் ஏற்கனவே விவசாயத்திற்காக ரூ.50 ஆயிரம் வங்கியில் கடன் வாங்கி இருந்தோம். ஆனால் இருந்த நிலத்தையும், மாட்டையும் இழந்துவிட்டதால் எங்களால் வங்கிக் கடனை செலுத்த முடியவில்லை. இப்போது கூலி வேலை செய்து குடும்பம் நடத்துகிறோம். ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரூ.3 ஆயிரம் வட்டியை மட்டும் செலுத்தி வருகிறோம். எல்லாம் எங்கள் மகள் நவீனுக்காகத்தான்.

நான் வயதான காலத்தில் கருவைச் சுமக்கத் தயங்கவில்லை. எனக்குப் பயமாகவும் இருந்ததில்லை. ஒருவேளை நான் இறக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். இறந்தாலும் சந்தோஷம் என்ற எண்ணத்துடன்தான் சிகிச்சைக்கு சம்மதித்தேன். சிலர் 25 வயதில் இறக்கிறார்கள். இறப்பு வந்தால் என்ன செய்யமுடியும் என்று துணிந்துதான் குழந்தையைச் சுமந்தேன்.

ஆனால் மகள் பிறந்ததும் வாழ்வில் சந்தோஷமும் பிறந்துவிட்டது. இப்போது எங்கள் மகளுக்கும், எங்களுக்கும் வயது வித்தியாசம் ரொம்ப அதிகமாக இருக்கிறது. ஆனாலும் அவளது எதிர்காலத்தை நினைத்து எங்களுக்குக் கவலையில்லை. நாங்கள் இறந்தாலும் அவளைப் பார்த்துக் கொள்ள சொந்தங்கள் இருக்கிறது. அவளது `சோட்டி மா` (சித்தி) இருக்கிறாள். அவள் நவீனை நன்கு கவனித்துக் கொள்வாள்.

நவீனுக்கு 5 வயது ஆனதும் அவள் பள்ளிக்குச் செல்வாள். என் குழந்தை ரொம்ப சமர்த்து. அவள் பிறந்த முதல்நாளே பிரபலமாகிவிட்டாள். வாழ்க்கையிலும் புகழ் பெற்று இந்திராகாந்தி போன்ற இடத்தைப் பெறுவாள்'' என்று தன் மகளின் முகத்தை அள்ளிக் கொஞ்சுகிறார் ரஜோதேவி.

பல ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தையுடன் இப்போது பொழுதுபோவது தெரியாமல் விளையாடி மகிழ்கிறது இந்த மூதாட்டி தம்பதி.

ரஜோதேவிக்கு பிரசவம் செய்த டாக்டர் பிஸ்னோய் கூறும்போது, "70 வயதில் கருவுறுவதில் எந்தத் தவறுமில்லை. உடல் தகுதியுடன் இருந்தால் போதும். ஆபரேஷன் வெற்றியாக முடிந்துவிட்டது. இப்போது அவர் மற்றும் அவரது குழந்தையைப் போல அதிர்ஷ்டக்காரர்கள் யாருமில்லை. அவர்களைப் போல மகிழ்ச்சியாக இருப்பதும் யாருமில்லை.

என்னிடம் நிறையபேர் உடல் நலத்துக்காகவும், குழந்தைப் பேற்றிற்காகவும் சிகிச்சைக்கு வருகிறார்கள். அரிதாகத்தான் மரணங்கள் நிகழ்கின்றன. சராசரியான பிரசவங்களில்கூட சிக்கல்கள் இருக்கத்தானே செய்கிறது?

ரஜோதேவி என்னைத் தேடி வந்தபோது அவரிடம் வயதுச் சான்றிதழ் கூட கிடையாது. அவரது சகோதரர் ஒருவரின் வயதுடன் ஒப்பிட்டுப் பார்த்துதான் வயதை தெரிந்து கொண்டோம். உடல் பரிசோதனை செய்து பிறகு சிகிச்சை அளித்தோம்.

நான் 3 வயது குழந்தையாக இருக்கும்போதே என் அம்மா இறந்துவிட்டார். என் தாத்தா பாட்டி யும், மாமா அத்தையும்தான் என்னை வளர்த்தார்கள். அவர்கள் நல்ல முறையில் என்னைப் பார்த்துக் கொண்டனர். நான் இப்போது பிஸ்னோயிஸ் கிராமத்தின் முதல் டாக்டராக உயர்ந்துள்ளேன். அதனால் ரஜோதேவியும், தனது குழந்தைக்கும் தனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருப்பதாக எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை. உறவினர்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பார்த்துக் கொள்வார்கள். நாம் இந்தியாவில்தான் வசிக்கிறோம். அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ இருந்தால்தான் தனக்குப் பிறகு தன் குழந்தையைக் கவனிக்க யாருமில்லையே என்று வருத்தப்பட வேண்டியதிருக்கும்'' என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top