புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வாள்வெட்டுக்குத் தயாராக இருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் ஈச்சமோட்டை, பாவற்குளம் பகுதியில் வைத்து 6பேர் பொலிஸாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.அத்துடன் குறித்த சந்தேகநபர்களது என்று கூறப்படும் 13 வாள்களும்
அந்தப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். கன்னியர்மடம் வீதியில் உள்ள வீடுகளுக்குள் போதையில் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தோரைத் தாக்கிய நிலையில் கழுத்தில் வெட்டுக் காயத்துக்கு ஆளான கர்ப்பிணிப் பெண்கள் உட்பட நால்வர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் தொடராக குறித்த சந்தேகநபர்கள் நேற்று முன்தினமும் தாக்குதலுக்குத் தயாராகி இருக்கலாம் என்று சந்தேகப்படும் நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனைக்கோட்டையில் ஒரு மாதத்துக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் தொடரே இது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் இரு தரப்பினரதும் நண்பர்கள் யாழ். மடம் வீதியில் வசித்து வருகின்றனர். இவர்களிடையே இருந்து வந்த பகைமையே இந்த வாள்வெட்டுச் சம்பவத்துக்குக் காரணம் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கன்னியர்மடம் வீதியில் 3 வீடுகளுள் புகுந்த இவர்கள் அங்கிருந்த பொருள்களையும் சேதமாக்கியுள்ளதுடன் ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 50 இற்கும் மேற்பட்ட புறாக்களையும் கொன்றுள்ளனர்.

சம்பவத்தில் கன்னியர்மடம் வீதியைச் சேர்ந்த கர்ப்பிணியான ப.காயத்திரி (வயது23) கழுத்தில் வாள் வெட்டுக்கு ஆளாகிய நிலையிலும் மற்றும் வெற்றிவேலாயுதம் (வயது45), வேலாயுதம் பகீரதன் (வயது24), யாழ். ஆஸ்பத்திரியைச் சேர்ந்த ராதாகவிதா (வயது26) ஆகியோர் தலை மற்றும் கைகளில் வெட்டுக் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஈச்சமோட்டை பகுதியில் வைத்து 6 பேர் கொண்ட குழு ஒன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

கொக்குவில், தாவடி ஆகிய இடங்களைச் சேர்ந்த தலா இரண்டு பேரும் சுண்டுக்குளி மற்றும் கோயில் வீதியைச் சேர்ந்த தலா ஒருவருமாக 6 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று நீதிவான் நீதிமன்றில் நீதிவான் மா.கணேசராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போது இவர்களை எதிர்வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top