
டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் கற்பழிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பலத்த காயங்களுடன் அவர் டில்லி சப்தர்ஜங் மருத்துவுமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக , மாணவர்கள், மகளிர் அமைப்பினர் டில்லியில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகி்ன்றனர். இந்த விவகாரம் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. பெண் எம்.பி.க்கள் கொந்தளித்தனர். நாட்டிற்கு ஏற்பட்ட அவமானம் எனவும், குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரினர்.
இந்த பரப்பான சூழ்நிலையில் கடந்த 26-ம் தேதியன்று நள்ளிரவில் அந்த மாணவி டில்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் இருந்து தனி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு புகழ்பெற்ற மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் பலத்த காயமும், நுரையீரல் மற்றும் வயிறு பகுதியில் கிருமி தொற்றும் காணப்படுவதால், அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தார். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்த மாணவி தற்போது கடந்த மூன்று நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 2.15 மணி்யளவில் (சிங்கப்பூர் நேரப்படி 4.45 மணிக்கு ) இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழந்துவிட்டதால் அவரது உயிர்பிரிந்தது. கடந்த 13 நாட்களாக உயிருக்கு போராடிய அந்த மாணவி இறுதியில் மரணத்தின் வாசலை தொட்டுவிட்டார்.