புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



வங்கதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் ஜிம்பாப்வே அணி 335 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஹராரேயில் நடந்தது.

முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 389 ஓட்டங்களும், வங்கதேசம் 134 ஓட்டங்களும் எடுத்தன. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்கு 187 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஜிம்பாப்வே அணியின் பிரண்டன் டெய்லர் சதம் அடித்தார். ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 227 ஓட்டங்கள் எடுத்து “டிக்ளேர்” செய்தது.

டெய்லர் 102 ஓட்டங்களும், கீகன் மெத் 31 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் சார்பில் ரோபியுல் இஸ்லாம் 6 விக்கெட் கைப்பற்றினார்.

பின், 483 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான இலக்கோடு 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணியின் முகமது அஷ்ரபுல் 40 ஓட்டங்களும், நாசிர் ஹொசைன் 23 ஓட்டங்களும், ஜஹுருல் இஸ்லாம் 22 ஓட்டங்களும், மகமதுல்லா 21 ஓட்டங்களும் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் ஏமாற்ற 2வது இன்னிங்சில் வங்கதேச அணி 147 ஓட்டங்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. ஜிம்பாப்வே சார்பில் கிரிமர் 4 விக்கெட்டும், ஜார்விஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்திய ஜிம்பாப்வே அணித்தலைவர் பிரண்டன் டெய்லருக்கு வழங்கப்பட்டது.

இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 25ம் திகதி ஹராரேயில் தொடங்குகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top