வீதியில் தவறவிடப்பட்டிருந்த பை ஒன்றை கண்டு அதனை உரியவர்களிடம் சேர்ப்பிக்க உதவியுள்ளார் மாணவி ஒருவர். அவரது நற்செயலால் தவறவிடப்பட்ட பொருள் கிடைத்த சந்தோசத்தில் அதன் உரிமையாளர் குறித்த மாணவியை பாராட்டாமலும் பரிசில் வழங்காமலும் சென்றுள்ளனர்.
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் யோ.மோகனப்பிரியா பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் வீதியோரமாக கிடந்த பை ஒன்றைக் கண்டுள்ளார். அதனை எடுத்து திறந்து பார்த்த குறித்த மாணவி அதனுள் பணமும் நகைகளும் இருப்பதைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்துள்ளார்.
உடன் அப் பையை அருகிலுள்ள மக்கள் வங்கிக் கிளைக்குச் சென்று பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருருந்த உத்தியோகத்தர் மூலம் வங்கி முகாமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.பின்னர் பணத்தையும் நகையையும் தவறவிட்டவரை அழைத்து பொருட்கள் ஒப்படைக்கப்பட்டது.
மோகனப்பிரியாவின் நேர்மையான செயலைப் பாராட்டிய வங்கி முகாமையாளர் சில பரிசில்களை வழங்கிப் பாராட்டியுமுள்ளார். அத்துடன் ஒட்டுசுட்டான் பாடசாலை அதிபரும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஆனால் பையைத் தவறவிட்டவர் தனது பொருட்களைச் சரி பார்த்துக் கொண்டு தன்பாட்டில் சென்று விட்டார்.
வறுமையான நிலையில் இருந்தாலும் இம் மாணவியின் நேர்மை ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஆனால் தவறவிடப்பட்ட பொருளைப் பெற்றுக் கொண்டவரின் உள்ளத்தை என்ன சொல்வது.
0 கருத்து:
கருத்துரையிடுக