பூமி "சர்வே' செய்ய வேண்டும் எனக்கூறி கையெழுத்து பெற்று, 1.75 ஏக்கர் பூமியை விற்று, மோசடி செய்த மகன் மீது, நடவடிக்கை கோரி, கலெக்டரிடம் புகார் கொடுத்தார் 94 வயது மூதாட்டி.கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் நடந்தபோது, கூன்
விழுந்த முதுகுடன் நடக்க முடியாமல், மிகவும் தள்ளாடியபடி 94 வயது மூதாட்டி மனு கொடுக்க வந்தார். மேல்தளத்தில் முகாம் நடக்கும் அரங்கிற்கு செல்ல முடியாமல், கீழ்தளத்தில் வாசலில் அமர்ந்த, அந்த மூதாட்டியிடம் கலெக்டர் மனுவை பெற்று, விசாரித்தார்.சூலூர், முத்துக்கவுண்டன்புதூரைச் சேர்ந்த, அந்த மூதாட்டியின் பெயர் ராயம்மாள். இவரது, கணவர் செங்கோட கவுண்டர்;பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.
இத்தம்பதியருக்கு நான்கு மகன்கள்; நான்கு மகள்கள். கடைசி மகன் விஸ்வநாதன், சமீபத்தில் இறந்துவிட்டார்.
ராயம்மாள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எனக்கு, சூலூர் தாலுகா, காங்கயம்பாளையம் கிராமத்தில், 1.75 ஏக்கர் பூமி இருந்தது. எனது மூன்றாவது மகன் திருமூர்த்தி என்பவர், பூமி சர்வே செய்ய வேண்டும் எனக் கூறி, என்னிடம் கையெழுத்து பெற்று, ஏமாற்றி பூமியை 60 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். இந்த சொத்தின் இன்றைய மதிப்பு, மூன்று கோடி ரூபாய். இறந்த மகன் விஸ்வநாதன் பாகம், ஒரு ஏக்கர் பூமியும் திருமூர்த்தி வசம் உள்ளது.தற்போது, 94 வயதான என்னை கவனிக்காமலும், உணவு கொடுக்காமலும், மருத்துவச் செலவு செய்யாமலும் உள்ளார். பொதுவாக இருந்த சொத்தை விற்று, எனது வாரிசுகள் யாருக்கும், எதுவும் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு, நில அபகரிப்புப் பிரிவு, போலீசாரிடம் புகார் அளித்தோம். சூலூர் காவல்நிலையத்தினர் கூப்பிட்டு, உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின், நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதுவரை, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இவ்வாறு, மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக, மூதாட்டியிடம் கலெக்டர் உறுதி அளித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக