சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் பவானி. பெரம்பூரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர்கள் இருவருக்கும் கடந்த 25.05.2012 அன்று சென்னை வடபழனி அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோவிலில் திருமணம் செய்ய ஏற்பாடு ஆகியிருந்தது. காலை 6 - 7.30 வரை முகூர்த்தம் என்று சொல்லப்பட்டிருந்தது.
ஆனால், மணமகன் விஜயகுமார் வடபழனி முருகன் கோவிலுக்கே வரவில்லை. காத்திருந்து ஏமாற்றம் அடைந்த பெண் வீட்டார் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர். வடபழனி போலீசார் இதுபற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். புதுமாப்பிள்ளை விஜயகுமாரை பலஇடங்களில் தேடினார்கள்.
இதற்கிடையில் இன்று (27.05.2012) காலை வடபழனியில் உள்ள அரசின் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்றில் தேடப்பட்ட மாப்பிள்ளை விஜயகுமார் மது அருந்தி கொண்டிருந்தார். போலீசார் அவரை அலாக்காக பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்குஅவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
அதன் விபரம் வருமாறு: நான் பெரம்பூர் பகுதியில் வேன் ஓட்டி வருகிறேன். எனக்கு குடிப் பழக்கம் மட்டுமல்லாமல், சீட்டாடுவது,காற்றாடி விடுவது, சிகரெட் பிடிப்பது, சினிமா பார்ப்பது இப்படி சில பழக்கங்கள் உள்ளது. எனக்கு உள்ள பழக்கங்கள் அத்தனையும் பெண் வீட்டாருக்கு தெரியும்.
தெரிந்துதான் என்னை மாப்பிள்ளையாக தேர்வு செய்தார்கள். ஆனால், திருமணத்திற்கு முதல் நாள் பெண் வீட்டார் என்னிடம் 10விதமான கட்டளைகளை போட்டு அதற்கு சத்தியம் செய்ய சொன்னார்கள். அதில் எனக்கு பழக்கங்கள் அத்தனைக்கும் ஒவ்வொரு கட்டளை போட்டிருந்தார்கள். மொத்தம் 10 கட்டளைகள் போட்டு 10 சத்தியம் செய்துத்தர சொன்னார்கள். நான் மறுத்துவிட்டேன்.
ஒவ்வொரு கட்டளையாக அமலுக்கு கொண்டு வாருங்கள் என்று பேசி பார்த்தேன். ஆனால் அவர்களோ 10 கட்டளைகளையும் ஒரே நேரத்தில் அமல்படுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இந்த கெடுபிடி எனக்கு பிடிக்கவில்லை. என்னால் உடனே அனைத்தையும் விட்டுவிட முடியாது என்று தெரிவித்தேன். ஆனால் பெண் வீட்டார் கல்யாணத்துக்கு முதல் நாள் இரவு வரை என்னை சத்தியம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தார்கள்.
நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். இவர்கள் தொடர்ந்து பேசி என்னை பணிய வைத்து 10 சத்தியங்களை வாங்கிவிட்டால் நம் கதி என்ன ஆகும் என்று பயந்தேன். இரவு 12 மணி வரை எல்லோரிடமும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தேன். எல்லோரும் உறங்கச் சென்ற பின்னர் அதிகாலை 4 மணிக்கு ஷேர் ஆட்டோவில் ஏறி கோயம்பேடு பேருந்துநிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்து கோவளத்திற்கு சென்றேன். அங்குள்ள தர்காவில் படுத்து தூக்கிவிட்டேன். நான் கண் விழித்துப் பார்த்தபோது முகூர்த்த நேரமே முடிந்துபோயிருந்தது.
இனி நம்மை யாரும் தொல்லைக்கொடுக்க மாட்டார்கள் என்று முடிவு செய்து சென்னைக்கு வந்தேன். இரண்டு மூன்று நாட்கள் வீட்டிற்கு போகாமல் நண்பர்கள் வீடுகளில் தங்கி விடலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் மது அருந்தக் கூட என்னை போலீசார் விடவில்லை. பாட்டிலை வாங்கி மூடியை தட்டிவுடனேயே என்னை தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.
இருப்பினும் நம்பிக்கை மோசடி, அலைகழித்தல், தவறான தகவல்களை தருதல், ஏமாற்றுதல் ஆகிய 4 பிரிவுகளில் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.இதற்குள் பெண் வீட்டார் சமரசமாகி மாப்பிள்ளை விஜயகுமார் மணம் மாறினால் போலீசாரே வாழ்க வளமுடன் என்று சொல்லி வாழ்த்திஅனுப்பி வைத்தாலும் வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது
0 கருத்து:
கருத்துரையிடுக