மும்பை ஜுகு பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் நர்சரி வகுப்புகள் முடிந்ததும், 12 நர்சரி மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் புறப்பட்டது.
அந்தேரி பகுதியில் ஒவ்வொரு மாணவியாக இறக்கி விடப்பட்ட பின்பு கடைசியாக 4 வயது மாணவி மட்டும் தனியாக இருந்தாள்.
பள்ளி வேனில் விலே பார்லே பகுதியைச் சேர்ந்த ரமேஷ்ராஜ்புத் (35) என்பவன் கண்டக்டராக இருந்தான். அவன் தனியாக இருந்த மாணவியை மிரட்டி வேனின் கடைசி இருக்கைக்கு இழுத்து சென்றான். அங்கு அவன் மாணவியை கற்பழித்தான்.
பிறகு அவன் அந்த மாணவியிடம் இதுபற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி, வீட்டில் இறக்கி விட்டான். பயந்து போன மாணவி இதுபற்றி அன்று வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை. மறுநாள் பள்ளிக்கு பயந்த படி அந்த மாணவி வந்ததை கண்டு ஆசிரியை விசாரித்த போதுதான் கண்டக்டரின் காமவெறிச்செயல் தெரிய வந்தது.
இதையடுத்து அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்தார். அந்தேரி போலீசார் கண்டக்டர் ரமேஷை கைது செய்தனர். அவன் ஜாமீனில் வெளியில் வரமுடியாதபடி 6 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பள்ளி வேன் உரிமையாளருக்கு வழகங்கப்பட்ட அனுமதியை போலீசார் நேற்று ரத்து செய்தனர்.
மேலும் பள்ளி வாகனங்களில் மாணவிக்கு உதவியாக பெண் உதவியாளர் யாரும் வரவில்லை என்பதால் அது குறித்தும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே டெல்லியில் மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பிறகும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து துணிகரமாக நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
டெல்லியில் மாணவி கற்பழிக்கப்பட்ட டிசம்பர் 16-ந்தேதிக்கு பிறகு 15 நாளில் 45 இளம்பெண்கள் கற்பழிக்கப்பட்டதாக வழக்குகள் பதிவாகி உள்ளது. மேலும் அந்த 15 நாளில் 75 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்கள் நடந்திருக்கிறது. இதன் மூலம் டெல்லியில் தினமும் சுமார் 3 பெண்கள் பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப்படுவது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லல்லுபிரசாத் யாதவ், டெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவி பெயரை வெளியிட்டார். சட்ட சிக்கல்கள் பற்றி கவலைப்படாமல் அவர் அந்த மாணவி பெயரை குறிப்பிட்டு பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மாணவியை கற்பழித்த 6 பேரையும் தூக்கில் போட வேண்டும். அதற்கு ஏற்ப சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் லல்லு கருத்தரங்கில் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக