ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி விதிகளை மீறி தலை முடியை கட்டாமல் வந்த 35 மாணவிகளின் முடியை தலைமை ஆசிரியை நறுக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் போர்டா சுஹாதா கிராமத்தில் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளி உள்ளது. கடந்த புதன்கிழமை அன்று காலை நேர பிரார்த்தனை கூட்டத்தில் 35 மாணவிகள் தலைமுடியை விரித்துபோட்டபடி வந்து நின்றனர்.
இது பள்ளி விதிகளுக்கு எதிரானதாகும். இதையடுத்து அந்த இடத்தில் வைத்தே அவர்களின் தலைமுடியை தலைமை ஆசிரியை அனுராதா லொஹேலா நறுக்கினார்.
தங்கள் முடியை வெட்ட வேண்டாம் என்று சில மாணவிகள் கெஞ்சினர், சிலர் அழுதனர். ஆனால் அனுராதா விடவில்லை. இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் தலைமை ஆசிரியையை சந்திக்க பள்ளிக்கு வந்தனர்.
ஆனால் அவர் பள்ளியிலும் இல்லை, செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். உடனே கல்வி துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்றனர்.
இதையடுத்து அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் 3 ஆசிரியர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர். தண்டனை பெற்ற மாணவிகளில் பெரும்பாலானோர் மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக