இராகலையிலமைந்துள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் கணித பாட ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் தரம் 11இல் பயிலும்
மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த ஆசிரியர் தற்காலிகமாக பிறிதொரு பாடசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த 23ஆம் திகதியே மேற்படி ஆசிரியர் குறித்த மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக தெரிய வந்துள்ளதென குறித்த பாடசாலையைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மாணவச் செல்வங்களை சீரழிக்க முயற்சிக்கும் இவ்வாறானவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுக் கொடுக்குமாறும் நேற்று திங்கட்கிழமை பாடசாலை வளாத்தில் திரண்டிருந்த பெற்றோர் தெரிவித்தனர்.
எனினும், குறித்த ஆசிரியரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளின் போது தான் மாணவியுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்றும் தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டமையையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததாக வலப்பனை வலய கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆசிரியர் தற்போது தற்காலிகமாக இடம் மாற்றப்பட்டுள்ள அதேவேளை, அவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சில தினங்களாக மேற்படி சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இராகலையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததையும் காண முடிந்தது.
அத்துடன் குற்றமிழைக்கின்றவரை இடம் மாற்றுவதன் மூலம் நியதாயத்தை பெற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த பெற்றோர் தகுந்த தண்டனை வழங்கப்பட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.