புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

எப்படியாயினும், இந்திரனுடன் நடந்த இந்தப் போர் தங்களுக்கே வெற்றி தந்ததாக கிருஷ்ணரும், அர்ஜூனனும் எண்ணினர். தர்மரும் மகிழ்ச்சியடைந்தார். இந்த சமயத்தில், இந்திரப்போரில் உயிர் தப்பிய தேவசிற்பி மயன், தர்மரையும், கிருஷ்ணரையும் சந்தித்து நன்றி கூற வந்தான். காட்டில் இருந்த தன்னை தீயில் இருந்து
காப்பாற்றியது கிருஷ்ணரே என்பது அவனது நம்பிக்கை. தர்மரிடம் அவன், குரு குல மன்னனே! உங்கள் தம்பி என்னை உயிருடன் விட்டதற்கு பரிகாரமாக, தேவலோக அரண்மனையான சுதர்மையை விட மிக அழகான அரண்மனை ஒன்றை உங்களுக்கு கட்டித்தர உள்ளேன். இதை கட்டுவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகும். ஆனால், உங்களுக்காக இதை 14 ஆண்டுகளிலேயே கட்டி முடித்து விடுவேன். இதற்காக ஒரு சிறு மரத்துண்டையோ, கல்லையோ பயன்படுத்த மாட்டேன். அத்தனையும் ரத்தினங்கள். அவை உலகில் எங்கும் கிடைக்காதவை. பிந்து என்ற குளத்தில் இவை ஒளித்து வைக்கப்பட்டுள்ளன. விருஷபர்வா என்ற அசுரன் ஒரு காலத்தில் தான் வென்ற மன்னர்களிடமிருந்து பறித்த இந்த ரத்தினங்களை அந்தக்குளத்தில் பதுக்கி வைத்துவிட்டான். அவற்றை எனது 60 லட்சம் ஊழியர்களையும் அனுப்பி எடுத்து வருவேன். அந்த அபூர்வ ரத்தினங்களால் மாளிகை அமைத்து தருகிறேன், என்றார்.

கிருஷ்ணரும், தர்மரும் சம்மதம் தெரிவித்தனர். சொன்னபடியே 14 ஆண்டுகளில் கட்டி முடித்துவிட்டான் மயன். இந்த புதிய இல்லத்தின் கிரகப்பிரவேசம் பிரம்மாண்டமாக நிகழ்ந்தது. கிருஷ்ணர் தர்மரிடம், தர்மா! கிடைத்தற்கரிய அரண்மனை உனக்கு கிடைத்திருக்கிறது. ஆனால், ராஜ்யத்தின் எல்லைப்பரப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும். எனவே, நீ ராஜசூகயாகம் நடத்த அறிவிப்பு செய். உனது வெண்புரவியை அனுப்பு. அது எங்கெல்லாம் செல்கிறதோ, அந் நாடுகளை உனக்கு சொந்தமாக்கிக் கொள், என்றார். மைத்துனர் சொல்லுக்கு மறுசொல் உண்டா? தர்மர் சம்மதித்து விட்டார். மற்றவர்களை எளிதில் வென்று விடலாம். ஆனால், ஜராசந்தன் என்ற மகத தேசத்து மன்னனை வெல்வது எளிதான விஷயமல்ல என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும். இவன் கிருஷ்ணனையே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய பெருமை படைத்தவன். இவன் யார் தெரியுமா? கிருஷ்ணன், கண்ணனாக கோகுலத்தில் சிறுவயதில் வளர்ந்த போது, தன் தாய்மாமன் கம்சனைக் கொன்றான். கம்சனுக்கு ஹஸ்தி, பிராப்தி என்ற மனைவியர் இருந்தனர். அவர்கள் ஜராசந்தனின் மகள்கள். அதாவது, கம்சனின் மாமனார் தான் ஜராசந்தன். 

தன் மருமகனைக் கொன்ற கண்ணனை. அவன் ஓட ஓட விரட்டியடித்தான். கிருஷ்ணர் தன் மக்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுடன் கடலின் நடுவில் இருந்த ஒரு தீவுக்கு அழைத்துச் சென்று அங்கேயே பதினெட்டு ஆண்டுகள் தங்கிவிட்டார். அந்த தீவு தான் இப்போது குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகை ஆகும். இப்படி தன்னை அவமானப்படுத்திய ஜராசந்தனைக் கொல்வதற்கு கிருஷ்ணன் தகுந்த நேரம் பார்த்திருந்தார். அதற்கு இந்த யாகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். ஜராசந்தனைக் கொல்ல தகுதி படைத்த ஒரே வீரன் பீமன் மட்டுமே! அவன் கோடி யானை பலமுள்ளவனாக தன் வலிமையைப் பெருக்கியிருந்த நேரம் அது. அவனையும், அர்ஜூனனையும் அழைத்துக்கொண்டு, கிருஷ்ணர் மகத நாட்டுக்கு கிளம்பினார். ஜராசந்தனுக்கு பிறநாட்டு மன்னர்களை பிடிக்காது. மன்னராக வருபவர் யாரும் அவனது எல்கைக்குள்ளேயே கால் வைக்க முடியாது. எனவே, அவர்கள் பிராமணர் போல் வேடம் தரித்து அரண்மனைக்குள் சென்றனர். அந்தணர்களுக்கு மதிப்பளிக்கும் ஜராசந்தன் அவர்களை வரவேற்றான். ஆனால், கணநேரத்திலேயே வீரர்களுக்குரிய தழும்புகள் அவர்களது மார்பில் இருப்பதைக் கவனித்து விட்ட அவன் சுதாரித்து, நீங்கள் யார்? என்று கேட்டு வேஷத்தை கலைத்து விட்டான். 

வந்திருப்பது கிருஷ்ணன் என்றதும் அவனது ஆத்திரம் அதிகமானது. ஏ கிருஷ்ணா! நீ ஏற்கனவே என்னிடம் தோற்றோடி, கடலுக்குள் ஒளிந்து கிடப்பவன். உன்னிடம் போர் செய்வது எனக்குத்தான் அவமானம். இதோ! நீ அழைத்து வந்திருக்கிறாயே! வில்வித்தை விஜயன். இவன் சிறுவன். ஒரு சிறுவனிடம் மோதி என்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை. இதோ நிற்கிறானே! ஒரு தடியன். இவன் பலசாலியாகத் தெரிகிறான். இவனோடு மோதி சொர்க்கத்துக்கு அனுப்புவேன், என்றபடி தொடைகளை தட்டியபடி போருக்கு அறை கூவல் விடுத்தான். கிருஷ்ணர் என்ன நினைத்து வந்தாரோ அது நடந்து விட்டது. நினைப்பதையெல்லாம் நடத்திக் கொள்ளும் பெருமை அந்த கிருஷ்ணனுக்கு உண்டு. அப்படியானால், அவர் ஜராசந்தனிடம் தோற்றோடியது போல் ஏன் நடித்தார்? அவர் மானிடனாகப் பூமியில் பிறந்திருக்கிறாரே! மானிடனாக பிறந்தவன், வாழ்க்கையின் பல கட்டங்களில் சரிந்து விழுந்தாக வேண்டுமே! அதற்கு அந்த கிருஷ்ணன் மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன! போர் துவங்கியது. கடும் போர். 15 நாட்கள் அன்ன ஆகாரமின்றி இருவரும் போரிட்டனர்.

சம அளவிலான பலசாலிகள் என்பதால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியவில்லை. ஏனெனில், 15ம் நாள் முடிவில், இருவருமே மயங்கி விழுந்துவிட்டனர். இவர்களில் யார் மயக்கம் தெளிந்து எழுந்து முதலில் அடிக்கிறாரோ அவரே வெற்றி பெற முடியும் என்ற நிலை. அதிர்ஷ்டவசமாக பீமனுக்கு முதலில் மயக்கம் தெளிந்தது. அவன் தடுமாறியபடியே எழுந்தாலும், சுதாரித்து ஜராசந்தனின் அருகே சென்றான். என்ன ஆச்சரியம்! இவனது கால்கள் தெரிந்ததோ இல்லையோ, ஜராசந்தனும் ஒரு துள்ளலுடன் எழுந்தான். மீண்டும் கடும் போர். ஒரு கட்டத்தில் மிகவும் சோர்ந்து போன ஜராசந்தனை, தன் பலம் கொண்ட மட்டும் அழுத்திப்பிடித்த பீமன், அவனை இரண்டாக கிழித்தே விட்டான். அந்த மாமிசத்துண்டுகளை வீசி எறிந்து ஆர்ப்பரித்தான். மகதநாட்டு மக்கள் தலைகுனிந்த வேளையில், ஜராசந்தனின் உடல் ஒட்டிக்கொண்டது. அவன் துள்ளி எழுந்தான். இந்த அதிசயம் கண்டு கிருஷ்ணரைத் தவிர எல்லாரும் அதிர்ந்தனர். ஏனெனில், உடல் ஒட்டும் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top