புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கோவை வெள்ளலூர் முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் வைரமுத்து வயது-24. டிப்ளமோ படித்துள்ள இவர் என்ஜினீயராக இருந்து வருகிறார்.இவருக்கும் சிங்காநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த மாதம் திருமணம்
நடப்பதாக இருந்தது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று மாலை வைரமுத்து நிச்சயிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு வந்தார். பெண்ணின் பெற்றோர் வீட்டில் இல்லை. இதையடுத்து இரண்டு பேரும் தனிமையில் இருந்து பேசிக் கொண்டி ருந்தனர்.அப்போது வைரமுத்து தனது வருங்கால மனைவியிடம், எனக்கு தற்போது சரியான வேலை கிடைக்கவில்லை. அவ்வப்போது தான் செலவுக்கு கடன் வாங்கிய வகையில் இரண்டு லட்சம் ரூபாய் வரை கடன் இருக்கிறது. நான் அதை எப்படி அடைக்கப் போகிறேனோ தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த பெண், கவலைப்படாதீர்கள், திருமணம் முடிந்ததும் நாம் இரண்டு பேரும் வேலைக்கு சென்று கடனை அடைத்து விடலாம் என்று சமாதானம் செய்துள்ளார்.இந்த நிலையில், அந்த பெண் பாத்ரூம் சென்று வருவதாக கூறிவிட்டு உள்ளே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது அறையின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

அந்த பெண் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அறைக்கு உள்ளே வைரமுத்து மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சத்தம் போட்டார்.அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கதவை உடைத்து வைரமுத்துவை மீட்டு பக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வைரமுத்துவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். (பெண்ணின் எதிர்கால நலன் கருதி பெயரை போலீசார் வெளியிடவில்லை)

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top