புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இலங்கை வான்பரப்பில் கடந்த சில தினங்களாக அடிக்கடி தென்படுவதாகக் கூறப்படும் இணங்காணப்படாத பறக்கும் பொருள் மற்றும் வேற்றுக்கிரக வாசிகளின் பிரசன்னம் தொடர்பிலான தகவல்களை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆதர் சி. கிளார்க் மத்திய நிலையம் ஆகியன மறுத்துள்ளன.



இணங்காணப்படாத பறக்கும் பொருளாக கூறப்படுபவை சில வேளைகளில் நாட்டின் பல மாவட்டங்களில் பெய்து வரும் சிகப்பு நிற மழையாக இருக்கலாம் என இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் வானில் விசித்திரமான பொருட்கள் எதனையும் கண்டால் அது தொடர்பில் உடனடியாக தமக்கோ அல்லது இவ்விடயத்துடன் தொடர்புடைய வேறு நிறுவனத்துக்கோ உடனடியாக அறிவிக்கும்படி அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் ஆராய்ச்சி நடத்தியுள்ள பக்கிங்ஹம் மற்றும் கார்டிப் பல்கலைக்கழக பேராசிரியரான சந்ர விக்ரமசிங்ஹ முழுதாக எரியாத விண்கல்லொன்றின் பகுதியே வானில் தென்பட்ட வெளிச்சத்துக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று வானில் அவதானிக்கப்பட்டதாக கூறப்படும் வெளிச்சமான பொருட்களின் படங்கள் மற்றும் காணொளிகளை ஆய்வுக்குட்படுத்தியதாகவும் இவை வியாழன் கோளே தவிர வேறு எந்த உபகரணமும் அல்லவெனவும் ஆதர் சி.கிளார்க் மத்திய நிலையத்தின் ஆராய்ச்சியாளரொருவர் தெரிவித்துள்ளார்.

உலக அழிவு தொடர்பான செய்திகள் வேகமாக பரவி வருவதன் காரணமாகவே மக்கள் இது தொடர்பில் அச்சமடைந்துள்ளதாகவும், எனவே சிறிய விடயங்களும் பூதாகரமாக மாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெமினிட் எனப்படும் விண்கற்களின் மழை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதமளவில் இடம்பெறுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் வருடம் அம் மழையானது இம்மாதம் 12,13,14 ஆகிய திகதிகளில் இடம்பெறுமென விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தனர்.

இரவு நேரத்தில் வானம் தெளிவாக இருக்கும் போது சுமார் 50 ஜெமினிட்களையும், சிலவேளைகளில் 120 முதல் 160 வரையானவற்றையும் காணமுடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்..

உலகின் எவ்விடத்தில் இருந்தாலும் நள்ளிரவின் குறிப்பாக அதிகாலை 1 முதல் 3 மணிவரையான காலப்பகுதியில் இவை அதிக பிரகாசமாக தென்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

'ப்பெயதொன்' 3200 எனப்படும் (3200 Phaethon) சிறுகோளே இவ் விண்கல் மழைக்கான காரணமெனவும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top