
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் உலக அளவில் சுகாதாரம் பற்றிய சர்வே ஒன்றை நடத்தியது.
அதில் ஒவ்வொரு நாட்டிலும் சுகாதார துறையின் செயல்பாடு, அதிகம் பரவும் நோய்கள், எடுக்கப்படும் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை போன்ற எல்லா விவரங்களும் சேகரிக்கப்பட்டன.
உலகம் முழுவதும் 187 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி சுகாதாரமற்ற சூழலால் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நாடு என்ற பட்டியலில் முதலிடத்தில் தென்னாபிரிக்கா உள்ளது.
இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் தற்போது உள்ள சூழ்நிலை மிகவும் மோசமாகி வருவதால் விரைவில் இரண்டாம் இடத்தில் இருந்து தென்னாபிரிக்காவை மிஞ்சி முதலிடத்திற்கு வந்து விடும் போக்கு நிலவுவதாக ஆய்வில் தெரியவருகிறது.
இந்தியாவில் ஆறுகளும், நீர்நிலைகளும், கழிவுகளால் அழுக்கடைந்து வருகின்றன. நகரமோ, கிராமமோ கொட்டப்படும் குப்பைக்களால் சுகாதாரம் இழந்து வருகிறது.
இதனால் கொள்ளை நோய்கள் தாக்குவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அவ்வப்போது ஏதாவது ஒரு நோய் வந்து அதிகம் பேர் இறக்கின்றனர்.
1990ல் டயாரியாவால் பலர் இறந்தனர். 2010ல் இதய நோய்களால் ஏராளாமானோர் இறந்தனர். காசநோயால் இறப்பும் அதிகரித்துள்ளது. மலேரியா, எச்.ஐ.வி போன்றவற்றால் 15 முதல் 49 வயதானோர் அதிகளவில் இறக்கின்றனர்.
நோய் தாக்கி இறப்பது தவிர சாலை விபத்து, தற்கொலை, கொலை ஆகியவற்றாலும் பலர் இறக்கின்றனர். இந்தியர்களின் சராசரி அதிகபட்ச ஆயுள் 65 வயது.
இவ்வாறு அந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள இந்திய மத்திய,சுற்று சுழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "உலகின் அழுக்கான நகரங்களுக்கு நோபல் பரிசுக் கொடுத்தால் அதை நம் நாடு உடனே கைப்பற்றி விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
நம் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்று எல்லோரும் விரும்புவதைப் போல, நம்முடைய சுற்றுப் புறத்தையும், தெருக்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதையும் அனைவருக்கும் அக்கறை இருக்கவேண்டும்.
அதேபோல பெரும்பாலான நோய்கள் பரவுவது நீர்நிலைகள் மாசுபாடு அடைவதினால்தான். எனவே கழிவுநீர் கலக்கும் ஓடையாக மாற்றாமல் நீர்நிலைகளை பாதுகாக்கவேண்டும் என்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக