புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் பேட்டை சேர்ந்தவர் மதியழகன்
(வயது 34). பெயிண்டர் மற்றும் சுவரில் ஓவியம் வரையும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி தேவி (26). இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2-ந்தேதி காலை மதியழகன் தனது ஊர் அருகே உள்ள கழிஞ்சி குப்பத்தில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

அவரை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. எனவே கொலையாளிகளை கண்டுபிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். ஆனால் துப்பு துலங்கவில்லை. கொலை பற்றி மதியழகனின் மனைவி தேவியிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

தேவி செல்போன் ஒன்று பயன்படுத்தி வந்தார். அந்த போன் எங்கே என்று போலீசார் கேட்டனர். அதற்கு அவர் என் கணவரிடம் கொடுத்திருந்தேன், அவரை கொன்றவர்கள் செல்போனை எடுத்திருப்பார்கள் என்று கருதுகிறேன் என்று கூறினார். இதனால் போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து அந்த போனுக்கு யார், யார் பேசியிருக்கிறார்கள்.

போனில் இருந்து வெளியே யார் யாருக்கு பேசப்பட்டுள்ளது என்று டெலிபோன் எக்ஸ்சேஞ் மூலம் சேகரித்தனர். அதில் கொலை நடந்த பிறகும் போன் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. யாருடன் பேசப்பட்டது என்று போலீசார் விசாரித்த போது தேவியே அந்த போனில் பேசியிருப்பது தெரியவந்தது.

எனவே கொலை நடந்த பிறகும் போன் தேவியிடம் தான் இருந்துள்ளது. கணவர் போனை எடுத்து செல்லவில்லை என்று போலீசார் கருதினார்கள். எனவே தேவி மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. அவரிடம் துருவி துருவி விசாரித்தபோது தனது கள்ளக்காதலனை ஏவி கணவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

அதையடுத்து தேவியை போலீசார் கைது செய்தனர். கொலை பற்றிய முழு விவரங்களையும் தேவி போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நான் சூரமங்கலம் அங்கன்வாடி மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன்.

எனது வீட்டில் இருந்து தினமும் பஸ் மூலம் சூரமங்கலத்துக்கு வந்து செல்வேன். 2 பஸ் மாறி சூரமங்கலத்திற்கு வந்து செல்ல வேண்டும். இது எனக்கு சிரமமாக இருந்தது. எனவே கரையாம்புத்தூரில் உள்ள பக்கத்து ஊருக்கு மாறுதல் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று கருதினேன். இதுதொடர்பாக பல பிரமுகர்களை சந்தித்தேன்.

அப்போது வீராம்பட்டினத்தை சேர்ந்த ஐ.ஆர்.பி. போலீஸ்காரர் சித்திரவேல் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் தனக்கு தெரிந்த பிரமுகர் மூலம் மாற்றல் வாங்கி தருவதாக கூறினார். எனவே அடிக்கடி அவருடன் செல்போனில் பேசுவேன். நாளடைவில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. இருவரும் தனியாக சந்தித்து கொண்டோம்.

ஆரோவில் போன்ற பகுதிகளுக்கும் சென்று சுற்றி வந்தோம். இந்த விஷயம் என் கணவருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. அவர் என்னை கண்டித்தார். ஆனாலும் நான் சித்திரவேலுடன் தொடர்பில் நீடித்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி நான் அங்கன்வாடிக்கு புறப்பட்டு சென்றேன். அப்போது என் கணவர் என்னை பின்தொடர்ந்து கண்காணித்தபடியே வந்தார்.

நெட்டப்பாக்கத்தில் வைத்து நான் போனில் பேசிக்கொண்டிருந்தேன். நான் காதலுடன் பேசுவதாக கருதி என்னை அங்கு வைத்து அடித்து உதைத்தார். இது எனக்கு மிகவும் அவமானமாகி விட்டது. இதுபற்றி சித்திரவேலிடம் கூறினேன். என் கணவரை தீர்த்து கட்டினால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று அவரிடம் சொன்னேன்.

அதற்கு அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். என் கணவரை அடையாளம் தெரிந்து கொள்வதற்காக போட்டோ ஒன்று கேட்டார். அதை கொடுத்தேன். 1-ந்தேதி சித்திரவேல் திட்டமிட்டபடி எங்கள் ஊருக்கு வந்தார். என்னிடம் கணவர் எங்கே என்று கேட்டார். அருகில் உள்ள சாராய கடைக்கு சென்றிருப்பதாக தெரிவித்தேன்.

உடனே சித்திரவேல் அங்கு தேடி சென்றார். என் கணவர் சாராயம் குடித்துவிட்டு திரும்பிப் கொண்டிருந்தார். அவரை நைசாக பேசி ஒதுக்குப் புறமாக அழைத்துச் சென்று அங்கு வைத்து சித்திரவேல் என் கணவரை கொலை செய்தார். பின்னர் எனக்கு போன் செய்து உன் கணவரை தீர்த்து கட்டிவிட்டேன் என்று கூறினார்.

மேலும், நான் வைத்துள்ள செல்போனை பயன்படுத்த வேண்டாம். அதில் உள்ள சிம்கார்டை வீசிவிட்டு செல்போனையும் எங்கேயாவது மறைத்து வைத்துவிடு என்று தெரிவித்தார். எனவே அதன்படி செல்போனை வெளியே வீசிவிட்டேன். என்னை கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று கருதினேன். ஆனால் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மதியழகனை கொலை செய்த போலீஸ்காரர் சித்திரவேலும் கைது செய்யப்பட்டார். தேவி-சித்ரவேலு இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top