புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள மதுபானசாலைகளால் பொதுமக்களுக்கு இடையூறுகளும், அசௌகரியங்களும் ஏற்பட்டு வருவதனால் அந்த மதுபானசாலைகளை மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு இடத்துக்கு உடனடியாக
மாற்றுமாறு கோரி பல்வேறு தரப்பினருக்கு, பொது அமைப்புக்களால் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகரில் சிவன்கோயில், பாடசாலை, வர்த்தக நிலையங்கள் என்பன அமைந்துள்ளன.

இந்த நிலையில் இங்கு 25 வருடங்களாக மதுபானசாலைகளும் செயற்படுகின்றன. இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவற்றை மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரி பருத்தித்துறை கிராம அபிவிருத்திச்சங்கம் பருத்தித்துறை பிரதேச செயலருக்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.

இதனையடுத்து பருத்தித்துறை பிரதேச செயலர் ஈ.ரி.ஜெயசீலன் இந்த மதுபானசாலையை 6 மாத காலத்துக்குள் வேறு இடத்துக்கு மாற்றுமாறு மதுபானசாலை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று நெல்லியடி நகரில் இருந்து கொடிகாமம் செல்லும் வீதியில் உள்ள மதுபானசாலையை மக்கள் நடமாட்டமற்ற இடத்துக்கு மாற்றுமாறு கோரி கரவெட்டி பிரதேசசெயலருக்கு கடிதம்மூலம் பொது அமைப்புகள் அறியப்படுத்தியுள்ளன.

இதனடிப்படையில், கொடிகாமம் வீதியிலுள்ள மதுபானசாலை தற்போது மூடப்பட்டுள்ளது.

அத்துடன் நெல்லியடி நகரிலிருந்து பருத்தித்துறை வீதியிலுள்ள மதுபானசாலை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மதுபானசாலையையும் மக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கரணவாய் புறாப்பொறுக்கி பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கரவெட்டி பிரதேச செயலருக்கு மனு ஒன்றை பொது அமைப்புக்கள் கையளித்துள்ளன.

மதுபானசாலைகளினால் வீதியால் செல்லும் மக்கள் மட்டுமல்லாது, அயற் சூழலிலுள்ளவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதை கருத்தில் கொண்டு பொது அமைப்புக்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.

எனினும் சில மதுபானசாலை உரிமையாளர்கள் கோரிக்கையினையும், கட்டளையையும் ஏற்றுக்கொண்டு மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொது அமைப்புக்களால் தெரிவிக்கப்படுகிறது.!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top