புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மீன்குழம்பு சாப்பாடு தராத தகராறில் கட்டிட தொழிலாளியை நண்பரே அடித்து கொலை செய்துள்ளார். அயனாவரத்தில் நேற்றிரவு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அயனாவரம் பட்டாச்சாரியார் தெருவை சேர்ந்தவர்
சீனிவாசன் (47), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (35). தம்பதிக்கு சரவணன் (11) என்ற மகன் உள்ளார். சீனிவாசன் நண்பர் விஜயகுமார் (எ) சசி (25), பெயின்டர். சீனிவாசனுக்கு மீன் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும். வேலைக்கு போய்விட்டு வரும்போது மீன் வாங்கி வருவார். மனைவி சமைத்து கொடுத்ததும் மது குடித்து விட்டு மீன்குழம்பு சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வீட்டின் அருகே பரசுராமன் தெருவில் உள்ள மீன்பாடி வண்டியில் தூங்கி விடுவார்.

நேற்றிரவு வேலைக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்த சீனிவாசன், மீன் வாங்கி சமைக்கும்படி கூறிவிட்டு மீன்பாடி வண்டிக்கு வந்தார். இரவு 11 மணியளவில் சித்ரா சாப்பாடு, மீன்குழம்பை எடுத்துக் கொண்டு கணவர் உட்கார்ந்திருந்த மீன்பாடி வண்டிக்கு சென்றார். சீனிவாசன் சாப்பிட்டு கொண்டிருந்த போது அவரை தேடி நண்பர் விஜயகுமார் அங்கு வந்துள்ளார். சீனிவாசனிடம் என்ன சாப்பாடு என்று கேட்டுள்ளார். மீன்குழம்பு சாப்பாடு என்று அவர் கூறியதும் எனக்கு சாப்பாடு தரமாட்டாயா என்று விஜயகுமார் கேட்டுள்ளார். சாப்பாடு குறைவாகதான் உள்ளது என்று சீனிவாசன் கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது சீனிவாசன் நண்பன் முதுகில் தட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார், நீ உயிருடன் இருந்தால்தானே மீன் குழம்பு சாப்பாடு சாப்பிடுவாய் என்று கூறி மார்பில் கையால் ஓங்கி குத்தி அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சீனிவாசனுக்கு தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் அலறிய சீனிவாசனை மீட்டு சென்னை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சீனிவாசன் இறந்தார். இதையறிந்தும் விஜயகுமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதுகுறித்து அயனாவரம் போலீசில் சித்ரா புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்கு பதிவு செய்தார். கொளத்தூரில் பதுங்கியிருந்த விஜயகுமாரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்து விசாரிக்கிறார்கள். மீன்குழம்பு சாப்பாடு தகராறில் கட்டிட தொழிலாளியை நண்பன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top