புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மைக்கேல் ஹசி அதிரடியாக 88 ரன்கள் விளாச, சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் வாட்சன் சதம் வீணானது.

 சென்னையில் நேற்று நடந்த ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் சென்னை,ராஜஸ்தான் அணிகள் மோதின. "டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் டிராவிட், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
சென்னை அணியில் காயமடைந்த ஆல்பி மார்கலுக்குப் பதில், ஜேசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்) அறிமுகமானார். ராஜஸ்தான் அணியில் ஸ்ரீசாந்த், டெய்ட் நீக்கப்பட்டு ராகுல் சுக்லா, கெவான் கூப்பர் சேர்க்கப்பட்டனர்.
"சூப்பர்' துவக்கம்: ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், ரகானே ஜோடி "சூப்பர்' துவக்கம் கொடுத்தது. மோகித் சர்மாவின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய வாட்சன், இவரது அடுத்த ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி விளாசினார். அடுத்து கிறிஸ் மோரிசையும் வாட்சன் விட்டுவைக்கவில்லை. இவரது ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி உட்பட 16 ரன்கள் எடுக்கப்பட, ராஜஸ்தான் அணி 5.4 வது ஓவரில் 50 ரன்னை எட்டியது. வாட்சன், 29 பந்தில் அரைசதம் கடந்தார்.
அஷ்வின் "இரண்டு': ரகானே (16), அஷ்வின் "சுழலில்' சிக்கினார். தொடர்ந்து அசத்திய இவர், யாக்னிக்கையும் (7) வெளியேற்றினார். டிராவிட் 6 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
வாட்சன் சதம்: அதிரடியை நிறுத்தாத வாட்சன், இத்தொடரில் முதல் சதம் அடித்தார். இவர் 101 ரன்களுக்கு(6 பவுண்டரி,6 சிக்சர்), பிராவோ பந்தில் வீழ்ந்தார். அவ்வப்போது பவுண்டரி அடித்த ஸ்டூவர்ட் பின்னி, பிராவோ பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. ஸ்டூவர்ட் பின்னி (36), ஹாட்ஜ் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.
சென்னை சார்பில் அஷ்வின், பிராவோ தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஹசி கலக்கல்: சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வழக்கம் போல் மைக்கேல் ஹசி வலுவான துவக்கம் தந்தார். சுக்லா ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். முரளி விஜய்(3) மீண்டும் ஏமாற்றினார். பின் ரெய்னா, ஹசி சேர்ந்து அசத்தினர். ராஜஸ்தான் பந்துவீச்சை விளாசித் தள்ளிய இவர்கள், பவுண்டரி மழை பொழிந்தனர். கூப்பர் பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட ரெய்னா, உள்ளூர் ரசிகர்களுக்கு உற்சாகம் தந்தார். அரைசதம் கடந்த ரெய்னா(51), பால்க்னர் பந்தில் அவுட்டானார்.
அடுத்து வந்த கேப்டன் தோனி "கம்பெனி' கொடுக்க, ரன் வேட்டையை தொடர்ந்தார் ஹசி. இவர், பின்னி ஓவரில் வரிசையாக இரண்டு பவுண்டரி அடித்தார். தொடர்ந்து கூப்பர் ஓவரில் 3 பவுண்டரி அடித்து அசத்தினார். பால்க்னர் வீசிய போட்டியின் 17வது ஓவரில் திருப்பம் ஏற்பட்டது. முதல் பந்தில் டிராவிட்டின் நேரடி "த்ரோ'வில் ஹசி(88, 13 பவுண்டரி, 1 சிக்சர்) ரன் அவுட்டானார். 3வது பந்தில் ரவிந்திர ஜடேஜா(0) போல்டானார்.
இந்த நேரத்தில் கூப்பர் பந்தில் பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார் தோனி. தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட இவர் 21 ரன்களுக்கு பால்க்னர் பந்தில் வெளியேற, சிக்கல் ஏற்பட்டது.
பிராவோ "சிக்சர்': கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்தில் கிறிஸ் மோரிஸ் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ரன் இல்லை. 3வது பந்தில் டுவைன் பிராவோ ஒரு இமாலய சிக்சர் அடித்தார். 4வது பந்தில் 2 ரன் எடுத்தார். 5வது பந்தில் மீண்டும் 2 ரன் எடுத்த பிராவோ, தனது வழக்கமான துள்ளல் ஆட்டத்துடன் வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிராவோ(15), மோரிஸ்(1) அவுட்டகாமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை மைக்கேல் ஹசி வென்றார்.
25வது சதம்
பேட்டிங்கில் அசத்திய ராஜஸ்தான் வீரர் வாட்சன், பிரிமியர் தொடரில் தனது முதல் சதத்தை (101) பதிவு செய்தார். தவிர, பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் அடிக்கப்பட்ட 25 வது சதம் இது.

1 கருத்து:

 
Top