புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மார்த்தாண்டம் அருகே வீட்டை காணவில்லை என்று சென்னை ஏர்போர்ட் ஊழியரின் மனைவி கொடுத்த வினோதப் புகாரை அடுத்து, சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலுவிளை பகுதியை சேர்ந்தவரான ரெங்கபாசம் (50) சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்திரகுமாரி (45). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தற்போது, இவர்கள் குடும்பத்துடன் சென்னை மீனம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர்.

ஆலுவிளையில் ரெங்கபாசத்துக்கு சொந்தமான வீடு மற்றும் மூன்றரை சென்ட் நிலம் உள்ளது. சென்னையில் இருந்து அடிக்கடி ஊருக்கு குடும்பத்தோடு வந்து செல்லும் இவர்கள், இந்த வீட்டில் தங்கிச் செல்வது வழக்கமாம். வீட்டில் கட்டில், பீரோ, டிவி உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக தெரிகிறது.

வழக்கம்போல், கடந்த 3 மாதத்துக்கு முன்பு சந்திரகுமாரி வீட்டுக்கு வந்து தங்கிச் சென்றுள்ளார். அப்போது, வீட்டை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் கட்டியுள்ளார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆலுவிளைக்கு வந்தவர், வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு இடிக்கப்பட்டு தரைமட்டமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டில் இருந்த பொருட்களையும் காணவில்லை. வீடு இருந்ததற்கான சுவடே இல்லாத அளவுக்கு, யாரோ பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டை இடித்து பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.


இது குறித்து உடனடியாக சந்திரகுமாரி, எஸ்பி மணிவண்ணனிடம் புகார் கொடுத்தார். இதுதவிர முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார் மனு அனுப்பினார். விசாரணை நடத்த மார்த்தாண்டம் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.

அப்போது சந்திரகுமாரி, வீடு இருந்ததற்கான புகைப்படங்கள், வீட்டுக்கான ஆவணங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் கொடுத்தார். இது தொடர்பாக விசாரித்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

வீட்டை காணவில்லை என்று பெண் கொடுத்துள்ள வினோதப் புகாரால், அப் பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top