புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இரக்கமற்ற பகிடிவதைகள், யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்தின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் அனைத்தும் முள்ளிவாய்க்காலில் தப்பிப் பிழைத்த மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து
ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் தற்போது கிடைத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற மனங்களில் இருந்து தப்பிவிட முடியவில்லை என்ற நிலைதான் அனேக வன்னி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இரக்கத்தனமற்ற பகிடிவதை, அதற்கும் அப்பால் மாணவர்களை தற்கொலை வரை தூண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் என கொடுமைகள் நீண்டு செல்கின்றன.

கடந்த வாரத்திலும் இதற்கு உதாரணமான சம்பவங்கள் உண்டு.பெளஜிகா என்ற யாழ்.பல்கலைக் கழகத்தின் 3ம் வருட பொருளியல் துறை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் நேற்று வெளிவந்தன.

இது குறித்து ஆழ விசாரித்ததில் அந்த மாணவியை தற்கொலை செய்ய தூண்டியது பல்கலைக்கழக நிர்வாகமும் அவரின் உறவினருமே என்ற தகவல் வெளிவந்திருக்கின்றது.

குறித்த மாணவி 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது தனது தாய் தந்தை உள்ளிட்ட அனைத்து குடும்ப அங்கத்தவர்களையும் இழந்திருக்கிறார்.

முன்னாள் போராளியான குறித்த மாணவி போர்ச்சூழலில் படுகாயப்பட்ட நிலையில் நலன்புரி நிலையம் வந்துள்ளார். அதிலிருந்து ஏற்கனவே கிடைத்திருந்த பல்கலைக்கழக அனுமதியினால் (உயர்தரம் – 2007) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்ந்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்கலைக்கழகமும் வெளிநாட்டிலிருக்கும் ஒன்றுவிட்ட சகோதரனும் செய்த உதவிகளால் தான் கல்வியைத் தொடர்ந்திருக்கின்றார்.

ஆயினும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தடவைகள் நண்பிகளிடம் அழுதரற்றியிருக்கிறார். காலம் செல்ல செல்ல உற்றாரை இழந்ததன் துயரத்தை அனுபவித்து இரவிரவாக அழுதிருக்கிறார். அவ்வேளைகளில் பல்கலைக்கழக விடுதி நண்பிகள் ஆதரவாயிருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அதிகரித்த சிங்கள மாணவர்களின் வருகையினால் இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி விடுதி நிர்வாகம் முதலாம் மற்றும் இறுதி வருட மாணவர்களை மட்டும் விடுதியில் தங்க அனுமதியளித்துள்ளது. ஏனைய வருட மாணவர்கள் குறித்த திகதிக்குள் வெளியேறும்படி பணிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த மாணவி தனது நிலையை பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பதிவாளரிடம் பல தடவைகள் எடுத்துகூறியும் கடிதம் எழுதியும் வந்துள்ளார்.

ஆயினும் வெளியில் வாடகை அறை எடுத்து தங்கும் படியும் அதற்கான வாடகையை தாம் பொறுப்போற்பதாகவும் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் அவரின் தயை கூர்ந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.

ஏற்கனவே தனக்கு யாரும் இல்லை என அடிக்கடி சொல்லி வேதைனைப்படும் மாணவி வேறு வழியின்றி வாடகை அறைக்கு போய் சிலகாலம் தனிமையில் இருந்திருக்கின்றார்.

அப்போது நண்பிகளைக் காணும் போதெல்லாம்தான் தனித்து விடப்பட்டிருப்பதை பற்றி அதிக வேதனைப்பட்டு அழுதிருக்கின்றார். தான் அம்மாவிடம் போகப் போவதாக சொல்லியிருக்கிறார் (தாயாரும் உயிருடன் இல்லை).

இந் நிலையில்  வவுனியாவில் இருக்கும் தனது  உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். குறித்த உறவினர்களுக்கு மாணவி தொடர்பில் ஈடுபாடு இல்லை எனவும் இவருக்கு பணம் அனுப்புவது அந்த வீட்டுச் சகோதரன் என்பதால் உறவினருக்கு இவர் மீது வெறுப்பிருந்தது எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் மிகவும் உளத்தாக்கத்துக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கின்றார். தற்கொலை என்பதில் கூட சந்தேகம் உண்டு.

இதற்கு முதலும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உளத்தாக்கத்துக்குள்ளான மாணவனொருவனை யாழ்.பல்கலைக்கழகம் இழந்திருந்தது.

இது இரண்டாவது. முள்ளிவாய்க்காலே பாதுகாத்து அனுப்பிய இன்னும் எத்தனை மாணவர்களை யாழ்.பல்கலைக்கழகம் பலியெடுக்கப்போகிறதோ? என்ற ஏக்கம் சக மாணவர்களைத் தாக்கியிருக்கின்றது.

சமூகத்தின் உயர் நிலைக் கல்வியை வழங்கிவருகின்ற யாழ்.பல்கலைக்கழகம் மாணவர்களின் நலனிலும் அவர்களது உள நிலையிலும் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இன்னும் பல உயிர்ப் பறிப்புக்களைத் தடுப்பதற்கு தம்மாலான ஒத்துழைப்புக்களையாவது வழங்கினாலே ஏதிலிகளுக்கு போதுமானதாக அமையும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top