புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


துரியோதனனின் காதில், மருமகனே! நீ, இந்த உலகிலேயே மிகப்பெரிய சபாமண்டபம் ஒன்றை நம் அரண்மனையின் அருகில் எழுப்பு. அது தேவலோகத்திலுள்ள மண்டபத்தையும் தோற்கடிக்கும் அழகைக் கொண்டிருக்க வேண்டும். அதைப் பார்க்க வரும்படி பாண்டவர்களுக்கு தூது
அனுப்பு. அதைக் காண தர்மன் தன் குடும்பத்துடன் வருவான். வந்த இடத்தில், பொழுதுபோக்குக்காக சூதாடுவோமே என நான் சொல்வேன். அவன் மறுத்தாலும் கூட, நம் வார்த்தை ஜாலத்தால், அவனை சூதாட வைப்போம். பிறகென்ன! சூதில் என்னையும் வெல்ல வல்லவர் யார்? பந்தயப்பொருளாக அவனது நாட்டையும், அவர்களையுமே பெறுவோம், என்றான். மாமாவின் இந்த வார்த்தைகள் தேனாய் பாய்ந்தது மருமகன் காதில்! மாமாவின் இந்த யோசனையை சபையோர் அறிய உரக்கச்சொன்னான் துரியோதனன். திருதராஷ்டிரனின் தம்பி விதுரருக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. மகனே துரியோதனா! இது கொஞ்சம் கூட நியாயமில்லாதது.

தருமன் எப்படிப்பட்டவன் தெரியுமா? அண்ணா! உன் நாடு எனக்கு வேண்டுமென கேள், அல்லது உன் தந்தையைக் கொண்டு, இப்போதே உன் நாடு எனக்கு வேண்டும் என ஓலை எழுதச்சொல். தர்மன், எதைக்கேட்டாலும் தந்துவிடும் தர்மவான். அதிலும், பெரிய தந்தை மீது அலாதி பிரியம் கொண்டுள்ளவன். அவரது வார்த்தையை தட்டமாட்டான். எந்த சிரமமும் இல்லாமல், நாடு உனக்கு கிடைத்து விடும். இல்லாவிட்டால், உன்னை உலகம் பழிக்கும், என நல்லதையும், எளிய வழியையும் போதித்தார். துரியோதனனுக்கு கோபம் வந்துவிட்டது. சித்தப்பா! என்ன சொல்கிறீர்? அந்த தர்மனிடம் போய் கெஞ்ச நான் ஒன்றும் யாசகன் அல்ல! என் தந்தை வஞ்சகமாக ஓலை எழுதி, எங்களுக்கு நாட்டை வாங்கிக் கொடுத்தால் மட்டும் ஊர் பழிக்காதோ? உமக்கு எப்போதுமே பாண்டவர்கள் மீது தான் பிரியம். அவர்கள் பிச்சை போட்டு, தங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளவும், நான் பிச்சையெடுத்து என் குலத் தரத்தை தாழ்த்திக் கொள்ளவுமே நீர் விரும்புகிறீர், என்றான். இதுகேட்டு, விதுரருக்கு வருத்தம் ஏற்பட்டது. துரியோதனா! நீ உன் சித்தப்பனின் பிள்ளைகளுடன் ஒற்றுமையாக இருந்தால், உங்கள் பராக்கிரமம் கண்டு, பிற நாட்டவர் அருகே வரவே அஞ்சுவார்கள். அந்த நல்லெண்ணத்திலேயே அவ்வாறு சொன்னேன். உன் மீது அக்கறையில்லாதவர்கள் சொல்லும் யோசனைகளை ஏற்காதே, என்றார்.

துரியோதனன் இப்போது அவரை ஏளனம் செய்து பேசினான். சித்தப்பா! உம்மைச் சொல்லிக் குற்றமில்லை. உமக்கும், உன் சொந்தங்களுக்கும் இருக்க இடம் கொடுத்து, சுக வாழ்வைக் கொடுத்து, உண்ண அறுசுவை உணவும் கொடுக்கிறேன் இல்லையா! அதற்குரிய நன்றியை நீர் இப்படித்தானே காட்டுவீர், என்றான். இதைக் கேட்டதும், விதுரனுக்கு கோபம் வந்துவிட்டது. செய்ததைச் சொல்லிக்காட்டும் துரியோதனனை அவர் வெறுத்தார். நல்லதை எடுத்துச்சொல்லியும் கேட்காதவர்களின் அருகில் இருந்து பயனில்லை என்பதால், அங்கிருந்து வெளியேறி விட்டார். இதன்பிறகு, துரியோதனன் மளமளவென மண்டப வேலைகள் குறித்த கட்டளைகளை சிற்றரசர்களுக்கும், சிற்பிகளுக்கும் பிறப்பித்தான். வேலை கனகச்சிதமாக நடந்து முடிந்தது. இந்த தகவலை தந்தைக்கு சொன்னான் துரியோதனன். சுயநலக்காரனாக மாறிவிட்ட திருதராஷ்டிரன், தன் தம்பி விதுரனை வரவழைத்து, விதுரா! நீ பாண்டவர்களின் இருப்பிடத்திற்கு செல். அவர்களை மண்டப திறப்புவிழாவுக்கு வரச்சொல். இதோ, இந்த ஓலையை அவர்களிடம் கொடுத்து, அவர்களின் வருகையை நான் மிகவும் எதிர்பார்ப்பதாகச் சொல், என்றான்.

பெரியவர் சொல் கேட்பது சிறியவர்க்கு அழகு. அண்ணன் வஞ்சக எண்ணத்துக்கு உடன் போகிறான் என்று தெரிந்தாலும் கூட, மூத்தார் சொல் கேட்க வேண்டும் என்பதால், விதுரர் இதற்கு உடன்பட்டார். இந்திரபிரஸ்தத்துக்கு பெரும் படையுடன் சென்றார். தர்மர், அவரை வரவேற்று ஆசனமிட்டு, தாழ்பணிந்தார். தர்ம சகோதரர்களின் அடக்கமான மனப்பாங்கு விதுரரைக் கவர்ந்தது. வந்த விஷயத்தை சொன்ன அவர் ஓலையை நீட்டினார். பெரியப்பாவின் அழைப்பை நான் தவிர்க்க இயலுமா? என்ற தர்மர் விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்தார். அப்போது விதுரர், தர்மா! நீ வருவதாகச் சம்மதித்து விட்டாய். ஆனால், உன் ராஜ்யத்தை சூதாடிப் பறிக்க துரியோதனனும், சகுனியும் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த விஷயம் உன் பெரியப்பாவுக்கும் தெரியும். ஆனால், அவர் தன் மக்களை தடுக்கவில்லை. எனவே, நீ பெரியோர் சொல்லுக்கு மதிப்பளித்து வா. ஆனால், குலத்தையே அழிக்கும் சூதாட்டத்திற்கு மட்டும் ஒப்புக்கொள்ளாதே, என்றார். தர்மர் அவரிடம், சித்தப்பா! விதி வழியே வாழ்க்கை செல்கிறது. அதைத் தடுப்பார் யாருமில்லை. இன்னதான் இன்னார் வாழ்வில் நடந்தாக வேண்டுமென இறைவன் எழுதி வைத்ததை யாரால் மாற்ற இயலும்! நான் சூதாட வேண்டுமென எழுதப்பட்டிருந்தால் அது நடந்தே தீரும்.

நாணயம், ஒழுக்கம், பண்பாடு ஆகியவை தெரிந்த ஒருவன் சூதாட விரும்பமாட்டான். ஆனால், விதி அவனை அதற்குள் இழுத்து தள்ளினால், அவனால் எப்படி தடுக்க இயலும்? என்றார். இப்போது பீமன் குறுக்கிட்டான். தர்மண்ணா! என்னை மன்னிக்க வேண்டும், என பவ்வியமாக சொன்னவன், திடீரென குரலை உயர்த்தி, அண்ணா! துரியோதனன் நம்மை அழிப்பதற்கென்றே அங்கே வரச்சொல்கிறான். நாம் ஏன் அவன் வலையில் போய் சிக்க வேண்டும். நாடு வேண்டும் என்ற ஆசையிருந்தால் படையெடுத்து வா என மறுஓலை அனுப்புவோம். அந்த மடையன் இங்கு வரட்டும். அவனைப் பிளந்து விடுகிறேன், எனக்கே கர்ஜித்தான். அர்ஜூனன், நகுல, சகாதேவனும் இந்த கருத்தை ஆமோதித்தனர். தர்மர் சிரித்தார். தம்பிகளே! அழைப்பது பெரியப்பன். வந்திருப்பது சித்தப்பன் என்றான பிறகு நாம் செல்லாமல் இருந்தால், பெரியவர்களுக்கு அடங்காத பிள்ளைகள் என்ற அவப்பெயர் அல்லவா நம்மை வந்தடையும், என்ற தர்மர், சூதாடுவதும், மது அருந்துவதும் குலத்தை அழிக்கும் செயல்கள் என்று நமது பெரியோர்கள் சொல்லியிருப்பது தெரிந்திருந்தும், நம்மை வம்புக்கு இழுக்கும் துரியோதனாதிகள், அந்தப் பெரியோரின் வாக்கு உண்மையாய் இருக்கும்பட்சத்தில், அதனாலேயே அழிந்து போவார்கள், என்றார். பாண்டவர்களை புறப்படும்படி கட்டளையிட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top