ஸ்திரிகளே! ஒருவருக்கு வாக்களித்த பின் அதைச்செய்யாமல் இருப்பது தர்மமல்ல! என்ற தர்மர், விதியின் வழியில் தன்னைச் செலுத்தினார். கஷ்டம் வரும் என்றே தெரிந்தும், அதில் போய் சிக்கிக் கொள்ளலமா என தர்மரைப் பற்றி எல்லாரும் எண்ணக்கூடும். ராமாயணமும், மகாபாரதமும்
தர்மத்தை உரைப்பவை. ராமனை காட்டுக்கு அனுப்புவது உசிதமல்ல என்பது தெரிந்திருந்தும், கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற தர்மத்தின் கட்டளைக்கு தசரதர் கீழ்ப்படிந்தது போல, இங்கே தர்மன் கட்டுப்படுகிறார். வாகனங்கள் புறப்பட்டன. துரியோதனனுக்கு ஒற்றர்கள் மூலம், தர்மர் புறப்பட்டு விட்ட செய்தி பறந்தது. அவன் மகிழ்ச்சியுடன் பாண்டவர்களின் வரவை எதிர்பார்த்திருந்தான். பாண்டவர்கள் அரண்மனைக்கு வந்து பெரியப்பா திருதராஷ்டிரனை வணங்கினர். அவர்களைக் கட்டித் தழுவி மகிழ்ந்த திருதராஷ்டிரன், மைந்தர்களே! உங்களைப் போல் உலகில் யாருண்டு! நீங்கள் உலகத்தையே உங்கள் கையில் வைத்திருக்கிறீர்கள். எல்லா நாட்டு மன்னர்களும் உங்கள் வீரத்துக்கு அடிபணிந்து திரையாகக் கொட்டிக் கொடுத்ததற்கு கணக்கே இல்லை எனக் கேள்விப்பட்டேன். தர்மனோ அவற்றை தானம் செய்வதில் மகிழ்ச்சி கொள்கிறான்.
நீதியின் காவலர்களே! உங்கள் அருமை பெருமையைக் காண என் தம்பி பாண்டு இப்போது இல்லையே என நினைத்து வருந்துகிறேன். சரி... விதி யாரை விட்டது! அதிருக்கட்டும், பெரியம்மா உங்களைக் காண காத்துக் கிடக்கிறாள் நீண்ட நேரமாய், போய் அவளிடம் ஆசிபெறுங்கள், என வஞ்சகத்தை மனதில் மறைத்து, நாவில் தேனொழுக பேசினான். அவர்கள் பெரியம்மாவிடம் ஆசி பெற்றனர். குந்திதேவி கொடுத்து வைத்தவள் என பெருமூச்சு விட்டாள் காந்தாரி. திரவுபதியை பெரிய மாமியார் அருகில் இருக்கச்சொல்லி விட்டு, பாண்டவர்கள் சபாமண்டபத்திற்கு சென்றனர். ஒரு வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு போகிறோம். போனால், நம் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். வீட்டுக்காரர் மிகுந்த பெருமையுடன், இந்த ÷ஷாகேஸ் எப்படியிருக்கு, இது மாதிரி இந்த ஊரிலேயே ஒரு வீட்டிலும் இல்லை, என பெருமையடிப்பார். நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் ஆமாம் சாமி போட்டு வைக்க வேண்டும். இல்லையே! இது இன்னார் வீட்டில் இருக்கிறதே என்றெல்லாம் சொல்லக்கூடாது.
தர்மர் இந்த விதியைக் கடைபிடித்தார். துரியோதனா! நீ கட்டியுள்ள இந்த மண்டபம் சுதன்மையைப் போல் உள்ளது, என்றார். சுதன்மை என்பது இந்திரலோகத்திலுள்ள சபாமண்டபமாகும். அதற்கு ஒப்பிட்டு பேசி, அவனை மகிழ வைத்தார் தர்மர். காரியத்தில் கண்ணாய் இருந்த துரியோதனன், அண்ணா! தந்தையார் அரண்மனையில் தான் இன்று மதிய விருந்து. அது தயாராகும் வரை பொழுதுபோக்கிற்காக பகடை ஆடுவோமே, என்றான். தர்மர் நேரடியாகவே சொல்லி விட்டார். தம்பி! வஞ்சக எண்ணத்துடன் கோபம் கொள்வது, சந்தர்ப்ப சூழலால் செய்த தவறுகளை குத்திக்காட்டி பேசுவது, நல்ல நண்பனை சந்தேகப்படுவது, சூதாடுவது ஆகியவை கொடிய பாவச் செயல்கள் என்று சாஸ்திரம் சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதை மறந்து விட்டாயா? மேலும், சூது என்றால் அதற்கு பந்தயப் பொருள் வேண்டும். அப்படி என்னிடமுள்ள எந்தப் பொருளுக்காக நீ ஆசைப்படுகிறாயோ, அதை என்னிடம் கேள். அப்படியே தந்து விடுகிறேன். சூதாடித்தான் பெற வேண்டும் என்பதில்லை, என்று ஆணித்தரமாகவும், அதே நேரம் துரியோதனனை பிறர் பொருளுக்காக கை ஏந்தும் ஒரு யாசகனுக்கு ஒப்பிட்டும் பேசினார்.
சகுனிக்கு சுருக்கென்றது. தர்மனிடம் அவன், சூதாட்டத்தில் காய்கள் தான் பேசுகின்றன. அவரவர் அறிவைப் பயன்படுத்தி காய்களை உருட்டுகிறோம். ஜெயித்தவர் பந்தயப் பொருளை அடைகிறார். ஒருவேளை, நாங்கள் தோற்றால், பாண்டவர்களுக்கு தானே துரியோதனனின் பொருள் கிடைக்கப் போகிறது! பசுவைக் கொன்றவன் பாவத்திற்கு அஞ்சுவது போல ஏன் பகடையைக் கண்டு நடுங்குகிறாய்? ஒருவேளை, நீ வைத்திருக்கும் செல்வத்தின் மீது உனக்கு பேராசை அதிகமா? அல்லது கஞ்சத்தனத்தால் இப்படி பேசுகிறாயா? என்றான். நல்லவர்கள் பேசினால் பதில் பேசலாம். கெட்டவன் பேசினால் பதில் பேசக்கூடாது. தர்மர் இந்தக் கொள்கையில் உறுதியாய் இருந்தவர். அவர், சகுனிக்கு பதில் சொல்லவில்லை. அவரது அமைதியை அச்சமென கருதிய கர்ணன், தர்மா! ஒரு சாதாரண சூதாட்டத்துக்கு தகுதியில்லாத நீ வீரப்போருக்கு எப்படி தகுதியுள்ளவன் ஆவாய். பயந்தாங்கொள்ளியான நீ இங்கிருந்து இந்திரபிரஸ்தத்துக்கு ஓடிவிடு, என்றான். கெட்டவர்கள் மட்டுமல்ல! கெட்டவர்களுடன் சேர்ந்திருப்பவர்கள் ஏதாவது பேசினாலும் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும்.
தர்மர் இதற்கு பதில் சொல்லாவிட்டாலும், அர்ஜுனன் ஆத்திரப்பட்டு விட்டான். ஏ கர்ணா! யாரைப் பார்த்து என்ன சொன்னாய். என் சகோதரனைப் பழித்த உன் தலை இப்போதே மண்ணில் விழும், என வில்லைத் தூக்கவும், தர்மர் அவனை கையமர்த்தி அடக்கி வைத்தார். பிறகு அந்த சபையோரிடம், சபையோரே! நான் போரிடத் துவங்கினால், என்னோடு போட்டியிட எந்த வீரனும் உலகில் பிறக்கவில்லை. ஆனாலும், என்னைப் பற்றி நானே பேசினால் அது வீரத்துக்கு இழுக்கு என்பதால் அமைதியாக இருந்தேன், என்றவர் சகுனியே! உம் வஞ்சகம் நிறைந்த சூதாட்டத்துக்கு உடன்படுகிறேன்,என இருக்கையை விட்டு எழுந்தார். சூதாட்டம் துவங்கியது. முதலில் தர்மர் வைத்தது தனது முத்து மாலையை மட்டும் தான். பகடையை உருட்டினார். அவரே ஜெயித்தார். சகுனி இரண்டு முத்துமாலைகளை அவரிடம் கொடுத்து விட்டான். முதல் ஆட்டத்திலேயே ஜெயித்ததும், சூதாடும் வெறி அவரது மனதில் புகுந்து விட்டது. அந்தக் கொடிய நோய் பரப்பிய ஆசை என்ற விஷக்கிருமிகளின் பிடிக்குள் கண்ணபிரானையே மைத்துனனாகக் கொண்ட மாபெரும் ஞானியான தர்மனே சிக்கிக் கொண்டார் என்றால், சாதாரண மக்களான நாம் இன்று சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் கெட்ட வழக்கங்களில் சிக்கிக் கொள்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது!
mahabaratham thodaruma 43il irundhu ?
பதிலளிநீக்குmahabaratham will continue after 42 in future ? please post the entire story soon. your work is good and perfect. continue.
பதிலளிநீக்குG.A. BALAJI RAO, MADURAI.