தனக்கு கிருஷ்ணர் தந்த தேரை பந்தய பொருளாக வைத்தார் தர்மர். தோற்றுப் போனார். இப்படியே தன் சதுரங்க சேனை, தன் தேசம், அரசாளும் உரிமை, ஒட்டுமொத்த இந்திரபிரஸ்தம் என எல்லாவற்றையும் தோற்று விட்டார். ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை எந்தளவுக்கு இருக்க
வேண்டுமென ஒரு கேள்வி கேட்டால், அது ஒரு சூதாட்டக்காரனின் மனதில் இருக்குமளவுக்கு வேண்டும் என அழகாக பதில் சொல்வார்கள் சிலர். அதே நிலையில் தான் தர்மர் இருந்தார். எல்லாவற்றையும் தோற்றாயிற்று ! மானம் ஒன்றையாவது காப்பாற்றிக் கொண்டு எழுந்து போயிருக்கலாம் அல்லவா ! என்ன செய்வதென விழித்துக் கொண்டிருந்தார். சகுனி ஆரம்பித்தான். தர்மா ! எதற்காக வருந்துகிறாய். உன் அந்தப்புரத்தை அலங்கரிக்கும் ராஜ ஸ்திரீகளை பணயமாக வைக்கலாமே என்றான். தர்மர் அதற்கும் உடன்பட்டார்; பகடை உருண்டது தோல்வியை நோக்கி ! துரியோதனனுக்கு சந்தோஷம் மிகுதி. சகுனியின் காதில், மாமா ! தர்மனிடம் ஒன்றுமில்லை. தன் சகோதரர்களை பணயம் வைத்து ஆடச்சொல்லுங்கள். அவர்களை நாம் அடிமையாக்கி விடலாம், என்றான். சகுனிக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருக்கவே, சகோதரர்களை பணயம் வைக்கும்படி சொல்ல, சூதாட்ட வெறியில் தன் கண்ணுக்கு கண்ணான சகோதரர்களை இழந்தார் தர்மர்.
இந்நேரத்தில் விதுரரும் திருதராஷ்டிரனும் அங்கே வந்தார்கள், சகுனி தர்மரிடம், தர்மா ! உன்னிடமுள்ள அத்தனையும் தோற்று விட்டாய். நீயும், உன் சகோதரர்களும் இனி எங்களது அடிமைகள். உம்.... உன் மனைவி திரவுபதியை பந்தயமாக வைக்கிறாயா ? என கேலி பேசினான். விதுரர் மிகுந்த வருத்தத்துடன், திருதராஷ்டிரனிடம், அண்ணா! இது என்ன முறைகெட்ட விளையாட்டு ! உங்கள் பிள்ளைகள் பாண்டவர்களுக்கு வஞ்சகம் செய்வது தெரிந்தும் நீங்கள் தடுக்காமல் இருப்பது எனக்கு சரியானதாகப் படவில்லை. குருவம்சத்திற்கு இது கெட்ட பெயரையே ஏற்படுத்தும். ஒரு பெண்ணை வைத்து சூதாடுவதை நீங்கள் அனுமதிக்ககூடாது. உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு சேர்ந்தே கெட்ட காலம் நெருங்கி விட்டது என்பதையே இந்தச்சூது எடுத்துக் காட்டுகிறது. உடனே இந்த ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்றார். திருதராஷ்டிரன் இதற்கு மவுனம் சாதித்துவிட்டான் மவுனத்தை விட பெரிய ஆயுதம் ஏதுமில்லை என்று இதைத்தான் குறிப்பிடுவார்கள். வாய் திறந்து பிள்ளைகளுக்கு எதிராகப் பேசினால் அவர்கள் கோபிப்பார்கள். எதற்கு இந்த வம்பு.... என்பது மட்டுமல்ல. பிள்ளைப்பாசம் கண்ணை மறைக்கவே, திருதராஷ்டிரன் காது கேளாதவன் போல இருந்தான்.
அங்கே கூடிய பிறநாட்டு அரசர்கள், தர்மரின் நிலைக்கண்டு வருந்தினர். அதே நேரம், திரவுபதியை மட்டும் தர்மர் தோற்று விட்டால், அந்த பெண்ணரசியின் சாபமே துரியோதனாதிகளைக் கொன்றுவிடும் என்பதில் உறுதியாக இருந்தனர். இன்னும் சிலர், இது எதிர்காலத்தில் போருக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை. அப்போது, துரியோதனாதியர் நிச்சயமாக பாண்டவர்களின் பிடியில், அதிலும் பீமனின் கையில் சிக்கி சின்னாபின்னமாவது உறுதி என்பதை உணர்ந்து கொண்டனர். ஆனால், கடைசி முயற்சியாக தர்மர் தன் மனைவியையும் வைத்து சூதாடி தோற்றார். எல்லாம் இழந்து அவமானப்பட்டு நின்றது கண்டு விதுரர் துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னார். ஏ துரியோதனா ! நம் குலம் அழிந்து விடுமடா ! பூமியில் அட்டூழியம் செய்த அரக்கர்களை அந்த பரந்தாமன் கிருஷ்ணாவதாரம் எடுத்து அழிக்க வந்துள்ளான். அவன் ஏற்கனவே கம்சன், காலநேமி ஆகியோரை அழித்து விட்டான். அவன் பிடியில் சிக்கியும், உன்னைச் சேர்ந்தவர்களும் உயிர் விடப்போவது உறுதி என்றார்.
தாத்தா பீஷ்மர் எவ்வளவோ எடுத்துச் சென்னார், அதுவும் காதில் ஏறவில்லை. பெரியவர்கள் சொல்லும் உண்மையான வார்த்தைகளைக் கேட்காத பிள்ளைகள் அழிவது உறுதி. துரியோதனன் தன் அழிவுக்கு அடிக்கல் நாட்டும் வித்ததில், தன் தேர்ச் சாரதியான பிரதிகாமியை அழைத்தான். பிரதி ! நீ உடனே மகாராணி காந்தாரியின் அறைக்குச் சென்று, அங்கே அமர்ந்திருக்கும் திரவுபதியை இழுத்து வா. அவள் இப்போது எனக்கு அடிமை என்றான். விதுரரிடம் சித்தப்பா ! நீங்கள் உடனே இந்திரபிரஸ்தத்து செல்வங்களையும் அஸ்தினாபுரத்துக் கொண்டு வாருங்கள், என்றான் கட்டளையிடும் குரலில். திரவுபதியை அழைத்து வருவதில் பிரதிகாமிக்கு உடன்பாடில்லை. சற்று தூரம் போவது போல் போக்கு காட்டிவிட்டு திரும்பிய அவன். எங்கள் மாமன்னரே! ராஜமாதா திரவுபதியாரை அழைக்கச் சென்றேன். அவர்கள் என்னிடம் தர்மர் தன்னையும், தன் சகோதரர்களையும் தோற்ற பிறகு தான் என்னை பணயம் வைத்திருக்கிறார். தோற்ற ஒருவருக்கு என்னை வைத்து சூதாட எந்த உரிமையும் இல்லை என்று சொல்லச் சொன்னார் என்றான். ஒரு பெண்ணின் மானத்தைக் காப்பாற்ற தன் மன்னனின் கட்டளையையே மீறினான் ஒரு தேர் சாரதி என்றால் அக்காலத்தில் பெண்மைக்கு எந்தளவுக்கு மதிப்பு தரப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
துரியோதனன் இது சரியெனக் கருதி திரவுபதியை விட்டு விடுவான் என்ற நோக்கத்தில் பிரதிகாமி இப்படி சொல்ல, தர்மமே இல்லாத துரியோதனன், துச்சாதனா !அவளை நீயே போய் இழுத்து வா என்றான். துச்சாதனன் ஆர்ப்பரிப்புடன் காந்தாரியின் அறைக்குச் சென்றான். உலக நடப்பில் இல்லாதபடி ஐந்து பேரை தழுவித்தழுவி கற்பிழந்தவளே ! வா என்னோடு ! அன்று என் அண்ணன் துரியோதனன், உன் அரண்மனைக்கு வந்த போது, தண்ணீர் போல் காட்சியளித்த தரையைக் கண்டு உடையை உயர்த்தி நடந்ததைப் பார்த்து பரிகசித்து சிரித்தாயே ! அப்படி சிரித்த உன் வாய் இப்போது அழப்போகிறது வா, என்று கையைப் பிடித்து இழுத்தான். மைத்துனன் தான் என்றாலும், இழுப்பது கெட்ட நோக்கத்தில் என்று தெரிந்த பிறகு உடம்பெல்லாம் குறுகிப் போன திரவுபதி, அவனது பிடியில் இருந்து விடுபட்டு, காந்தாரியின் பின்னால் போய் ஒளிந்து, அத்தை ! என்னைக் காப்பாற்றுங்கள் ! என்றாள் கணவன் கண்ணிழந்துவன் என்பதற்காக, தன் கண்களைக் கட்டிக் கொண்டு பதிவிரதா தன்மையை உலகுக்கு நிரூபித்த காந்தாரி, நிஜமாகவே கண்ணிழந்தவள் போல் பேசினாள். அவள் திரவுபதியை கண்டு கொள்ளவில்லை. ஏன் தயங்குகிறாய் ? உன்னை அழைப்பது வேறு யாரோ அல்ல, நாம் எல்லாரும் உறவு தான். தயங்காமல் செல், என்றாள் இரக்கமே இல்லாமல் இந்த வார்த்தைகள் துச்சாதனனை ஊக்கப்படுத்தவே, அவன் திரவுபதியின் தலைமுடியை பிடித்து இழுத்துக்கொண்டே சென்றான்.
வழிநெடுக மக்கள் வாய் மூடிப் பார்த்திருந்தனர்.
அவைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலி விம்மி அழுதாள்.பாண்டவரை நோக்கி 'அம்மி மிதித்து..அருந்ததி காட்டி வேதஸ் சுடர்த்தீ முன் விரும்பி மணம் செய்து கொண்டீரே..இன்று இதைப்பார்த்துக் கொண்டு நிற்கிறீர்களே..இது தகுமா ' என்றாள்.
பார்த்தனும்..பீமனும்..செயலற்று இருந்தனர். தருமர் தலை குனிந்தார். .பாஞ்சாலி மேலும் கூறுகிறாள் 'இப்பேரவையில் சான்றோர் பலர் இருக்கின்றன்ர்.வேத விற்பன்னர்கள் உள்ளனர்.வேறுபல சிறப்புமிக்க மேலோர் உள்ளனர். ஆயினும் வெஞ்சினம் கொண்டு யாரும் வாய்திறக்கவில்லையே' என்றவள் துச்சாதனனை நோக்கி ;அற்ப புத்தியுடையவனே...மன்னர் அவையில் என்னை பிடித்து இழுத்து ஏசுகிறாயே..உன்னைப்பர்த்து 'நிறுத்துடா'எனக்கூற அவையில் யாரும் இல்லையே' என புலம்பினாள்.
வெறிகொண்ட துச்சாதனனோ..'நீ இப்போது வெறும் தாதி' என தீதுரைகள் பல சொன்னான்.
கர்ணன் சிரிக்க
துரியோதனன் ஆணவசிரிப்பு சிரிக்க
சகுனி மனம் மகிழ..அவையினரோ
வாளாயிருக்க...
பிதாமகன் பீஷ்மரோ
எழுந்து பேச ஆரம்பித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக