திருமண மண்டபத்தில் குடிபோதையில் இருந்த தம்பியால் அண்ணனின் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகன் ராஜா (25) வுக்கும்
நாகை மாவட்டம் வேதாரண்யம் தெற்கு மடவளாகத்தை சேர்ந்த சுபாஷினி (19) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வல்லம்படுகை திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இதேபோல, ராஜாவின் தம்பி மோகனுக்கும், சுபாஷினியின் தங்கை சுகாஷினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அவர்களுக்கு வருகிற 23ம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், ராஜா , சுபாஷினி திருமணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு திருமண மண்டபத்தில் இரு வீட்டாரின் உறவினர்களும் கூடி இருந்தனர். அப்போது மணமகன் ராஜாவின் தம்பி மோகன் குடிபோதையில் இருந்துள்ளார். அதைப் பார்த்த மணமகளின் உறவினர்கள் குடிகாரனுக்கு எப்படி பெண் கொடுப்பது என கண்டித்தனர். இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் பிரச்னை ஏற்பட்டு தகாராறில் முடிந்தது.
தகவல் அறிந்து மண்டபத்துக்கு வந்த அண்ணாமலைநகர் போலீசார் இரு தரப்பினரிடம் பேசி சமாதானம் செய்தனர். அதை பெண் வீட்டார் ஏற்காமல் திருமணத்தை நிறுத்துவதாக கூறினார்கள். அடுத்த வாரம் நடைபெற இருந்த மோகன் , சுகாசினி திருமணத்தையும் நிறுத்துவதாக தெரிவித்தனர். திருமணத்துக்கான விருந்து உணவு தயாராகி, உறவினர்களும் வரத் தொடங்கிய நிலையில் நேற்று காலையில் திருமணம் நின்று போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மணமக்களுக்கு விருப்பம், உறவினர்கள் ஏற்க மறுப்பு: சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உறவினர்களுடன் வந்து தனக்கும் சுபாஷினிக்கும் திருமணம் செய்து வைக்குமாறு மணமகன் ராஜா புகார் கொடுத்தார். உடனே, சப்,இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மணமகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து பேசினர். மணமகன் , மணமகள் இருவருக்குமே திருமணம் செய்வதில் விருப்பம் இருந்தது. ஆனால், மணமகளின் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மணமகன் மற்றும் உறவினர்கள் வல்லம்படுகையில் உள்ள வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினர்.
0 கருத்து:
கருத்துரையிடுக