முதலில் பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தால் அவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.ஆ ஆங்கிலத்தின் முதலெழுத்து. இதைப் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் அற்புத சக்தி படைத்தவர்களாயிருப்பர். A எழுத்தில் சூரியக் கதிர்கள் எப்போதும் குவிக்கப்படுவதால், இந்த எழுத்தில் பெயர் துவங்குவோர் எப்பொழுதும்
பிரகாசித்துக்கொண்டே இருப்பர்.
இவர்கள் மக்களால் மிகவும் நேசிக்கப்படுவர். தாங்கள் சொன்னதுதான் வேதம் என்பர். அரசியல், ஆன்மீகம், மருத்துவம் ஆகியவை இவர்களுக்கு அத்துப்படி. இவர்கள் பேசுவதைப் பிறர் வாய் பிளந்தபடி கேட்டுக்கொண்டிருப்பர்.
உஷ்ண உடம்புக்காரர்கள். அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். உடம்பு ஒல்லியாக இருக்கும். இனக்கவர்ச்சியில் அதிக ஈடுபாடு இருந்தாலும் மாற்று இனத்தவரிடம் மரியாதையாக நடந்து கொள்வர். இவர்களுக்கு வாய்க்கும் துணைவி அல்லது துணைவர் கிழக்குப் பார்த்த வீட்டில் குடியிருந்தால் நன்மையாக அமையும்.
வார்த்தைகள் அதிகாரத் தோரணையில் இருக்கும். அடங்கிப் போகமாட்டார்கள். ஏற்கும் எந்தப் பதவியிலும் சுதந்திரத்தை விரும்புவர். அடிமை வேலை செய்ய மாட்டார்கள்.
ஏற்றுக்கொண்ட பதவியில் கவனம் செலுத்தி நற்பெயர் பெறுவர். படிப்பிலும் கெட்டிக்காரர். இவர்கள் வாழ்வில் வேகமாக உயர்வடைவார்கள். திடமான எண்ணம் கொண்டவர்கள்.
எதிலும் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்டிருப்பர். தோல்விகளை எப்படி வெற்றியாக்குவது என்பதை இவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆக்கபூர்வமானவர்கள்.
இரவுப்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. தன்னை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வதை விரும்புவர். ஒளிவு மறைவு கபடு சூது அற்றவர்கள்.
நேர்மையாளர்களான இவர்களுக்கு நாணயமான நண்பர்கள் அனேகம். நிர்வாகத்திறன் அதிகம். நாட்டுநலனில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளும் இவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பார்கள்.நிர்வாகத்திறன், அறிவு, சுதந்திர உணர்வு, சமுதாய முன்னேற்றத்தில் ஈடுபாடு ஆகிய குணநலன்கள் நிரம்பப் பெற்றவர்கள். மொத்தத்தில் மிக மிக அதிர்ஷ்டசாலிகள்.
சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் அதள பாதாளத்திற்குப் போய்விடுவார்கள்.
B யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
பெயரின் முதல் எழுத்தாக B எழுத்தைக் கொண்டவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் எனப் பார்க்கலாம்.சூரியனின் கதிர்கள் இந்த எழுத்தின் மீது பட்டுச் சிதறுவதால் இவர்களின் உடலுக்குப் போதுமான உஷ்ணம் கிடைப்பதில்லை. ஆனால் அன்புடன் நடவடிக்கைகளைத் துவங்கும் இவர்களின் உள்மனதை ஆண்டவனால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்.
பேச்சில் அன்பைப் பிசைந்து கொடுப்பதால் இவர்களைத் திரும்பத் திரும்பச் சந்திக்க வேண்டும் போலிருக்கும். மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர்களாக இருப்பார்கள்.
வாயுவேகம், மனோவேகம் என்பார்களே… அது இவர்களுக்குத்தான் பொருந்தும். நொடியில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை பேச்சிலேயே சென்று வந்து விடுவர். கற்பனைக் கடலான இவர்கள் அடிக்கடி நீர் சம்பந்தமான சின்ன நோய்களால் அவதியுறுவர். இவர்கள் மனதைப் போலவே உடலும் குளிர்வானதாகவே இருக்கும்.
பெண் தெய்வத்தின் பேரில் அதிக நாட்டம் உண்டு. பின்னர் நடப்பவற்றை முன்பே கூறிவிடுவர். பல கலைகளை அறிந்தவர்கள். இதில் காதலும் ஒன்று. வெள்ளை ஆடைகளை விரும்பி அணிவர். குளிர்பானங்கள், புளிப்புச் சுவைகளை விரும்புவர்.
திட்டமிட்டு செயலாற்றுதல், நேர்மை, ஆன்மீகம், சமாதானம் ஆகியவற்றை இவ்வெழுத்துக்குறிக்கும். இந்த எழுத்து முதலெழுத்தாக வருவது நல்லது.
உடல் உழைப்பை விரும்பாத இவர்கள், அறிவுபூர்வமான விஷயங்களை எப்பொழுதும் அலசிக்கொண்டேயிருப்பர். மிக மென்மையாகப் பேசி யாரையும் தன்வசம் கொண்டு வந்து விடுவர். தண்ணீர் கலந்த உணவு நிரம்பப் பிடிக்கும். உஷ்ணமானவற்றை உதறித் தள்ளி விடுவர். செயலாற்றத் திட்டமிடுவர். ஆனால் செயல் புரிய சோம்பேறித்தனப்படுவர். இதனால் இவர்களின் பல வேலைகள் பாதியிலேயே நிற்கும். பெரும்பாலும் நிழல் இருக்கும் இடத்தில் மட்டுமே தன் கருத்தை வெளியிடுவர். பகல்பொழுது இவர்களுக்குப் பிடிப்பதில்லை. மாலையிலிருந்து சிந்தனைச் சிற்பிகளாகி விடுவர்.
அடக்கத்துடன் நடந்துகொள்ளும் இவர்கள் அனைவருக்கும் பிடித்தவர்கள். விண்வெளி போன்று பரந்த மனப்பாங்கு உடையவர்கள். எந்த ஒரு தீய செயலுக்கும் பழக்கப்படாமல் இருப்பதற்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இவர்களை வையகம் போற்றும்.
C யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
C என்ற ஆங்கில எழுத்தைத் தங்கள் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் சீரும், சிறப்பும், பக்தியும் கொண்டு விளங்குவர். சூரியக்கதிர்கள் இவ்வெழுத்தில் பட்டு கிரகித்து பெயரின் மற்ற எழுத்துகளுக்கும் சக்தியைத் தருவதால் எங்கும் பிரபலமாக ஜொலிப்பர்.இவ்வெழுத்து முதலெழுத்தானால் பலம் அதிகம். ஆண்மைத்தனம், சுறுசுறுப்பு , படபடப்பு இவற்றை குறிக்கும் எழுத்து. இவ்வெழுத்தை பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் கலையார்வம் மிக்கவர்கள், கலைகளால் புகழடைவார்கள். மூளையினால் உழைப்பதையே விரும்புவாரகள்.
இந்தக் கில்லாடிகள் செய்யும் அல்லது செய்யப் போகும் காரியங்கள் இவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். பார்வைக்கு அசடாகத் தெரியும் இவர்களின் மனவலிமையை, யாராலும் எடைபோட இயலாது. எதிலும் தீர்க்கமான முடிவு எடுப்பார்கள். இவர்கள் சொல்வது அப்படியே நடக்கும்.
தன்னலத்தை விட நாட்டின் நலமே இவர்களுக்குப் பெரிது. எப்பொழுதும். எதையாவது சிந்தித்துக் கொண்டேயிருப்பர். இவர்களின் மகோன்னதமான கட்டளைகளுக்காக நாடே காத்துக்கொண்டிருக்கும் அளவிற்கு செயற்கரிய காரியங்களைச் செய்வர்.
இவர்கள் நீதியின் மறுவடிவம். ஆய்வுப் பணிகள் இவர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. நீதித்துறையிலும், ஆராய்ச்சிப் பணியிலும், அரசுப் பணியிலும் ஆன்மீகத்திலும் முத்திரை பதிப்பர். மக்களுக்காக அதிக நேரம் ஒதுக்கும் இவர்கள் குடும்பத்தாருக்கும் நேரம் ஒதுக்குவது நல்லது. தினமும் வீட்டுக்குச் செல்ல நேரமில்லாமலோ, சென்றாலும் குடும்பத்தை யாராவது பார்த்துக் கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையிலோ இருப்பார்கள்.
மூளைபலம் மிகுந்த இவர்கள் நேர்மையாளராக இருப்பதால் மக்களுக்கு இவர்களை அதிகம் பிடிக்கும். கணினித்துறையில் வல்லவர்கள். எப்படி வியூகம் அமைத்தால், யாரை எளிதில் கவிழ்க்கலாம் என்று திட்டமிடுவதில் சமர்த்தர்கள்.
பண விஷயத்தில் சிக்கனமான இவர்கள் பிறரிடம் பணத்தை எதிர்ப்பார்ப்பதில்லை. தனது பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வதில் வல்லவர். நியாயமான கோபம் அடிக்கடி ஏற்படும். சொந்த வேலைகளை யாரிடமும் சொல்வதில்லை. பிறர் செய்தாலும் பிடிப்பதில்லை.
புலால் உணவை வெறுப்பர். இனிப்பை விரும்புவர். இருந்த இடத்திலிருந்தே மலையையும் தகர்க்கும் அறிவு இவர்களுக்கு உண்டு Cயில் முதல் எழுத்து அமைவது போல் ஜென்ம புண்ணியம் எனலாம். நிச்சயம் பல சிறப்புகளை தொடர்ந்து தந்துகொண்டேயிருக்கும்.
Cயில் பெயர் ஆரம்பித்து 6ஆம் எண்ணில் கூட்டுத்தொகை அமைந்துவிட்டால் மட்டும் வாழ்வு முழுக்க போராட்ட நிலை ஏற்படலாம். இவர்களுக்கு திருமணத் தடை. தொழில் முடக்கம், பதவி உயர்வு இல்லாமை, வேலை வாய்ப்புத் தடை, மக்களிடம் மரியாதைக் குறைவு போன்றவை ஏற்படலாம்
D யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
D என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்கள் ராஜதந்திரத்துடன் செயல்படுவார்கள். ஆற்றல்மிக்க பேச்சால் பலதரப்பு மக்களின் நட்பையும் பெறுவார்கள். அதேவேளை, எதிர்ப்பையும் அதிகமாகவே சம்பாதிப்பார்கள். குடல், கண், தொடர்பான நோய்கள், மூட்டுவலி, பித்தம் போன்றவற்றால் அவ்வப்போது அவதிப்படுவார்கள்.ஆணாயினும், பெண்ணாயினும் இல்லறத்துணை சிறப்பாக அமையும். அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைத்து அதில் வெற்றியும் பெறுவார்கள். கடவுள் நம்பிக்கையும் கைகொடுக்கும். துன்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள். சுவை மிகுந்த உணவு வகைகளில் விருப்பம் அதிகம். சாப்பாட்டில் காரமும், அசைவ வகையும் அதிகமாக இருக்கும்.
சிலர் தொண்டு நிறுவனங்கள் நடத்திப் பெரும் புகழும், பணமும் சேர்ப்பர். அரசின் கட்டுப்பாடுகள் மக்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில், எல்லோரும் ஏற்கும்படி சட்டத்தை மாற்ற வேண்டும் எனப் போராடுவார்கள்.
சோர்ந்து கிடக்கும் நண்பர்களையும், உற்றார் உறவினர்களையும் சுறுசுறுப்பாக இருக்கும்படி அறிவுரை சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவார்கள். தான் செய்தது தவறு என்றால் அதை ஒப்புக்கொண்டு தன்னை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் மன்னிப்புக் கேட்கத் தயங்கமாட்டார்கள்.
உடற்பயிற்சியிலும், அழகுக்கலையிலும், வாகனங்களை ஓட்டுவதிலும் மிகுந்த நாட்டமுடையவராக இருப்பார்கள். புராதன பொருட்களைச் சேர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். நாட்டுப்பற்று மிகுந்த இவர்கள் வாசனைத் திரவியங்கள் பூசுவதிலும், அழகான ஆடை அணிவதிலும் தனிச்சுவை காண்பார்கள். சாணக்கியர்களான இவர்களுக்கு வாய்தான் எதிரி. இறைவன் தந்த அனைத்து இன்பங்களையும் அனுபவிக்க ஆசையுடன் காத்திருக்கும் இவர்கள் முயன்றால் முடியாத விஷயமே இல்லை.
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற தீர்க்கதரிசனத்துடன் காய்களை நகர்த்துவார்கள். கம்பீரம் மிக்கவர்கள். எதிலும் கவனமாக இருப்பார்கள். வீர, தீரச் செயல்களில் ஆர்வம் இருக்கும். சில சமயங்களில் பிடிவாத குணம் மேலோங்கும். சூரியக்கதிர்கள் இந்த எழுத்தின் வழியாக உள்ளே புக முடியாது என்பதால் சிலரிடம் இவர்களது கருத்துகள் எடுபடாமல் போகலாம். அந்தக் கோபத்தில் தன் கருத்து எடுபடும்வரை பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் கெட்ட பெயர் வாங்கும் சந்தர்ப்பமும் உருவாகலாம்.
எந்த நாடும் தன் சொந்த நாடு, எந்த ஜாதியும் தன் சொந்த ஜாதி என்று கூறுவார்கள். பல மொழிகளைப் படிப்பதில் ஆர்வம் இருக்கும். அவற்றைச் சரளமாகவும் பேசுவார்கள். அங்க அசைவின் மூலம் பெண்களைக் கவரும் சக்தி உண்டு. பெரும்பாலான நாட்களை வெளியூர்களிலேயே கழித்து விடுவார்கள்.
பிறருக்கு மனமுவந்து உதவும் குணம் இவர்களிடம் இருந்தாலும், இவர்களுக்கு உதவத்தான் ஆளில்லை. மந்திர, தந்திரங்களில் நாட்டம் அதிகம். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவே சிலருக்கு அதிக நாள் பிடிக்கும். மிக நெருக்கமானவர்கள். இவர்களின் ஆலோசனைகளை விரும்பி ஏற்றுப் பலனடைவர். தன் மனதுக்கு சரியெனப் பட்டதை, அடுத்தவரிடம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிக நாசூக்காகத் திணித்து விடுவர். துணிச்சல், சலியாத உழைப்பு, முன்னேற்றம் ஆகியக குணங்கள் இந்த எழுத்துக்கு உண்டு.
E யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
தாராளமாக ஆலோசனைகளை அள்ளி வழங்கும் இவர்கள், அதிக சுதந்திரத்தை விரும்புவர். எதையும் உடனே கிரகித்துக்கொள்ளும் இவர்களின் எழுத்தில் சூரியக்கதிர்கள் படுவதால், எப்பொழுதும், சுறுசுறுப்பாக இருப்பர். தங்களைப் பற்றித் தாங்களே எதையாவது பெருமையாகவோ, தன்னடக்கம் உள்ளவர் போலவோ பேசிக்கொண்டிருப்பார்கள். மிகச் சீக்கிரமாக முன்னேறும் வழியைத் தேடுவதில் முனைப்பாக இருப்பர்.எதிலும் மிகுந்த கவனத்துடன் செயல்படும் இவர்கள் கோபப்படாமல் தான் எண்ணியதை செயலுக்குக் கொண்டுவந்துவிடும் திறமைசாலிகள். இவர்களுக்கு என்று ஒரு கூட்டமுண்டு. ஏதேனும் ஒரு காரியம் செய்து இவர்கள் பெயரை நிலைக்க வைத்துக்கொள்வர். பிறர் கைவிட்ட பல காரியங்களை சிரமேற்கொண்டு எடுத்துச்செய்து வெற்றியும் அடைந்துவிடுவர். நலிந்துபோன பல நிறுவனங்களை இவர்களிடம் நம்பி ஒப்படைக்கலாம்.
அடுத்தவரிடம் வேலை செய்வதை விட சொந்தத் தொழில் செய்து பெரும் பொருளீட்டவே விரும்புவர். இவர்களின் ஜாலமான பேச்சு வாடிக்கையாளர்களைக் கவரும். புதுப்புது யுக்திகளைக் கொண்டு வெற்றி பெறுவதால் சிலர் வலிய வந்து இவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பயனடைவர். சில வேலைகளில் வெற்றி பெற இயலாதபோது மனம் நொந்து போவர். ஆயினும், சுதாரித்துக்கொண்டு மீண்டும் முயற்சிப்பார்கள். இவர்களைப் பார்த்தால் யாருக்கும் ஒரு சுறுசுறுப்புத் தொற்றிக்கொள்ளும்.
இவ்வகையில் இவர்கள் மானிடத் தேனீயாவர். நாட்டுநலனில் அக்கறை இல்லாதவர்களை ஓரங்கட்டிவிடுவர். இவர்களின் மனம் விக்ரமாதித்தனின் வேதாளம் போன்றது. ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தினால் இவர்கள் வெற்றியடைவதைத் தடுக்க முடியாது.
இவர்கள் திறமையை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு லாட்டரி அடித்ததுபோல்தான். தூக்கத்தையும், சோம்பேறித்தனத்தையும் வெறுப்பர். பகல், இரவு பார்க்காமல் உழைக்கும் இவர்கள் உடம்பையும் பேணுவது நலம். காதலில் அதிக விருப்பமிருக்கும். எந்த ஊர், நாடு சென்றாலும் இவர்களுக்கு என்று ஒரு நட்பு வளையத்தைத் தக்கவைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எதையும் சிந்தித்துச் செயல்படும் இவர்கள் ரகசியங்களை மட்டும் பிறரிடம் கொட்டி விடுவர். அடுத்தவரை உற்சாகப்படுத்தி வாழ்வில் முன்னேறச் செய்வர்.
வயிறு அடிக்கடி சேஷ்டை செய்யும். மனமும், உடலும் எப்பொழுதும் பரபரப்பாக இயங்குவதால் உடம்பு உஷ்ணத்தால் குழப்பமடையலாம். இயல்பாகவே ஞானம் பெற்ற இவர்களின் முதல் எழுத்து, வாழ்வின் உச்சத்திற்கு இழுத்துச் செல்லும் என்பது உறுதி.
Aயுடன் இணைந்து வந்தால் நல்லது . நீங்கள் பிறருக்கும் பிறர் உங்களுக்கும் பரஸ்பர உதவி செய்து கொள்வீரகள்.
கலைத்துறையில் ஜொலிக்கும் வல்லமையுடைய இவர்களுக்கு ஞானமும், தியானமும், யோகமும் கைவந்த கலை. அடுக்குமாடி கட்டிடம் போல், புதுப்புதுத் திட்டங்களைத் தன் மனதில் அடுக்கி வைத்துக்கொண்டேயிருக்கும் இவர்களை ஒரு சரித்திரப் பெட்டகம் என்றே அழைக்கலாம். இவர்களால் நண்பர்கள் கூட்டம் நிறைய பலன் அடையும். ஏதேனும் ஒரு வழியில் எளிதில் மற்றவரைத் தன்வசப்படுத்திவிடும் இவர்கள், எல்லாரிடமும் வளைந்து கொடுத்துப் போகும் பக்குவமுடையவராவார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக