மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் ராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் மிகவும் போற்றப்படுகின்றன. இந்த இரண்டு அவதாரங்களும் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பதை மிக அழகாக சித்தரிக்கின்றன.
"ஒருவர் செய்யும் மகா பாவமானது அந்த ஜென்மத்தில் மட்டுமல்ல; அடுத்த பிறவியிலும் தொடர்ந்து வதைக்கும்' என்பதைச் சொல்கிறது ஸ்ரீகிருஷ்ணாவதாரம்.
பகவான் கிருஷ்ணர் மதுரா சிறைச்சாலையில் பிறந்தாலும், அவர் ஆட்சி புரிந்தது துவாரகை திருத் தலத்தில்தான்.
முன்னதாக, கிருஷ்ணர் மதுராவில் கம்சனை அழித்தபோது, அதைக் கேள்விப்பட்ட கம்சனின் மாமன் மதுராமீது போர் தொடுத்தான்; தோல்வியுற் றான்.
போர் காரணமாக மதுராவின் கோட்டை வலுவிழந்து விட்டது. எனவே வேறொரு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எண்ணினார் கிருஷ்ணர். அதன்படி கருடன் தேர்ந்தெடுத்துக் கொடுத்த இடம்தான் துவாரகை. பிற்காலத்தில் ரிஷிகளின் சாபம் காரணமாக யாதவ குலமே அழிந்தது. துவாரகா நகரின் பெரும் பகுதியும் கடலின் எழுச்சியால் மூழ்கியது என்று வரலாறு கூறுகிறது. தற்போது புனிதத் தலமாகப் போற்றப் படும் ஆதிதுவாரகையின் நிழலாக ஐந்து திருத் தலங்கள் விளங்குகின்றன. அந்தத் திருத்தலங்களை "பஞ்ச துவாரகா' என்பர்.
பஞ்ச துவாரகையில் மிகவும் பிரதானமானது "மோட்ச துவாரகை'. இத்தலம்தான் வைகுண்டம் செல்லும் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. 108 வைணவத் திருத்தலங்களில் இத்தலம் 104-ஆவது திவ்ய தேசமாகும். இத்தலம் குஜராத் மாநிலத்தில் உள்ள "ஓசா' துறைமுகத்திற்கு அருகில், "கோமதி' என்னும் புண்ணிய நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள ஸ்ரீகிருஷ்ணர் ஆலயம் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையானது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இங்கு அருள்புரியும் பகவான் கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி, கல்யாண நாராயணர் என்று வழிபடுகிறார்கள். இங்குள்ள மூலவர் சங்கு சக்கர தாரியாக, நான்கு கரங்கள் கொண்டு சேவை சாதிக்கிறார். பகவான் கிருஷ்ணருக்கு காலை ஐந்து மணி முதல் இரவு வரை பதினேழு முறை பிரசாதம் சமர்ப்பித்து, மணிக்கு ஒருமுறை ஆடை மாற்றி அலங்கரிக்கிறார்கள். காலை திருப்பள்ளியெழுச்சி தொடங்கி சயனம் வரை இந்நிகழ்ச்சிகள் நடைபெறும். காலையில் தங்கப்பல் குச்சியால் பற்களைத் துலக்கு வார்கள். பிறகு, லட்டும் ஜிலேபியும் சமர்ப்பிப்பார்கள். பிறகு ஏழரை மணிக்குள் தீர்த்தமும் பிரசாதமும் படைப்பார்கள். எட்டு மணிக்கு சர்க்கரை, பால், தயிர் படைக்கப்படுகிறது. பிறகு, அப்பம், பாலில் கலந்த சிற்றுண்டியுடன் திருவமுது படைக்கப்படுகிறது.
அதற்குப்பின், கனிவகைகள். இப்படி பிரசாதங்களைத் தொடர்ந்து அளித்தபின் உணவு செரிக்க லேகியமும் கொடுக்கிறார்கள்.
அடுத்து "பேட் துவாரகை'. இத்தலம் கடலிலுள்ள தீவுபோல் இருப்பதால் தீவுத்துவாரகை என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள அரண்மனை, பகவான் கிருஷ்ணன் வாழ்ந்த அரண்மனை எனப் படுகிறது. இங்கு கடலுக்குள் அகழ்வாராய்ச்சி செய்வோருக்கு பல அற்புதப் பொருட்கள் கிடைத்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.
மூன்றாவது ஸ்ரீநாத் துவாரகை. இத்தலம் குஜராத் மாநிலம், போர்பந்தர் என்னும் ஊரிலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு கோவில் கொண்டு அருள்புரியும் பகவான் கிருஷ்ணருக்கு தினமும் எட்டு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு பகவானுக்கு வைரம், வைடூரியம் முதலான நவரத்தினங்கள் பதித்த திருவாபரணங்கள் தினமும் அணிவிக்கப்படுகின்றன.
நான்காவது டாஸ்ரோடி துவாரகை. இத்தலம் துவாரகையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பகவான் கிருஷ்ணர் அவதரித்த சிறைச்சாலை அமைந்த ஊரான வடமதுராவிலிருந்து, பாதாளம் வழியாக தீர்த்தம் நதியாகப் பாய்ந்து இந்த ஊருக்கு வருவதாகக் கூறப் படுகிறது.
ஐந்தாவது மூலத்துவாரகை. இத்தலம் போர்பந்தரிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கொஷனார் என்னும் ஊருக்கு அருகில்- கடற்கரையோரம் அமைந்துள்ளது. இத்தலத்தில்தான் பகவான் பல ஆண்டுகள் அர சாண்டார். இங்கிருந்துதான் கிருஷ்ணர் வைகுண்டம் சென்றார் என்றும்; அதன்பின் இத்தலம் கடலில் முழ்கியது என்றும் கூறுவர். மூலத்துவாரகையில் அனைத்து முக்கிய நதிகளும் சங்கமமாகின்றன.
துவாரகையை ஆட்சிபுரிந்த கண்ணன் தெய்வமாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால் முக்தி (மரணம்) என்பது தவிர்க்க முடியாதது. தன் இறுதிக் காலம் நிறைவுறப் போகிறது என்பதை அறிந்த பகவான் ஒருநாள் ஹிரண்ய நதிக்கரையினையொட்டி அடர்ந்த புதர்கள் நிறைந்த குரா மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது "ஜரா' என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான். அது புதர்ப் பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது குதிங்காலில் பலமாகத் தைத்ததும், "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் கிருஷ்ணர் காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், ""பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல்போல் தெரிந்ததால் மறைந் திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான்.
""வேடனே, வருந்தாதே. நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின்தொடர்ந்து வரும். தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடு களாலும் நிவர்த்தி செய்ய முடியாது.
அதற்கு நானே உதாரணம்.
திரேதாயுகத்தில் நான் ராமனாக அவதரித்தபோது, வாலியை மறைந் திருந்து அம்பு எய்து கொன்றேன். அப் போது வாலி, "ராமா, எனக்கும் உனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலைமை உனக்கு என்னால் ஏற் படும். தர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். அந்த சாபம்தான் இன்று பலித்தது.
தெய்வமாக இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும். இதற்கு எந்தவிதமான பரிகாரங்களும், யாகங் களும், தான- தர்மங்களும், வழிபாடுகளும் கைகொடுக் காது. அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். வேடனே, நீதான் அந்த வாலி. உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. அதனால் உனக்கு இது தெரியவில்லை. என் அவதாரம் இன்றுடன் முடிந்தது. நீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்திவிட்டு முக்தியடைந்தார் பகவான் கிருஷ்ணர்.
ஒருவருக்கு நாம் செய்யும் தீமை, மீண்டும் நமக்கே வந்துசேரும் என்னும் பேருண்மையை பகவான் தன் இரு அவதாரங்கள் மூலம் மனித குலத்துக்கு உணர்த்தியுள்ளார்.
எனவே, நல்லதே நினைப்போம்; நல்லதே செய்வோம். இறைவன் அருளால் எல்லாம் நலமாகவே நடக்கும்.
0 கருத்து:
கருத்துரையிடுக